Samacheer Kalvi 5th Science Books Tamil Medium Science in Everyday Life
அறிவியல் : பருவம் 1 அலகு 4 : அன்றாட வாழ்வில் அறிவியல் அலகு 4 அன்றாட வாழ்வில் அறிவியல் கற்றல் நோக்கங்கள் இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன ❖ தமிழ்நாட்டின் அறிவியல் அறிஞர்களைப் பற்றி புரிந்துகொள்தல். ❖ வானம் நீல நிறமாகத் தோன்றுவதற்கான காரணத்தை அறிதல். ❖ நமது அன்றாட வாழ்வில் நடைபெறும் மீளக்கூடிய மற்றும் மீளா நிகழ்வுகளைப் பற்றி அறிதல். ❖ வீடு மற்றும் பள்ளி வளாகங்களில் வெளியேற்றப்படும் கழிவுப் பொருள்களைப் பற்றிய விழிப்புணர்வு பெறுதல். அறிமுகம் நமது அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அறிவியல் நமக்கு உதவியுள்ளது. இது நமது அன்றாட வாழ்வையும் மாற்றியுள்ளது. நாம் வாழக்கூடிய உலகம் முன்பு இருந்ததுபோல் இருப்பதில்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் கூட இது மாறிக்கொண்டிருக்கிறது. நம்மைச்சுற்றி அநேக மாற்றங்களை நாம் காண்கிறோம். அவற்றுள் சில மீளக்கூடியவை, சில மீளாதவை. கழிவுப் பொருள்களை எரிப்பது போன்ற மீளா வினைகள் நமது வீடு மற்றும் பள்ளி வளாகத்தை அசுத்தமடையச் செய்கின்றன. கழிவுப் பொருள்களை நிர்வகிப்பது மற்றும் அவற்றை முறையாக அகற்றும் முறை பற்றிய விழிப்புணர்வு நமக்குத் தேவை. அவற்றைப் பற்றி இப்பாடத்தில் காண்போம். […]
