தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல், தொழில்நுட்பம் உரைநடை : அறிவின் திறவுகோல் இயல் ஒன்று உரைநடை அறிவின் திறவுகோல் முதன்முதலில் அறிவு என்னும் கருவி செயல்படத் தொடங்கிய நாள், மனிதனுக்கு அச்சம் மிகுந்ததாகவே இருந்திருக்கும். தன் அறிவைக் கொண்டு, அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். காலையில் ஒளிவீசிக் கொண்டிருந்த கதிரவன், திடீரென மாலையில் மறைந்ததும் அவனது அறிவு விழித்துக் கொண்டது. அந்தக் கதிரவன் எங்கே போனான்? இப்படியே இருளாகத்தான் இருக்குமா? என்று அவன் எண்ணிக் கொண்டிருக்க மறுநாள் மீண்டும் கதிரவன் தோன்றினான். அப்போதே மனிதனின் அறிவு வேலை செய்யத் தொடங்கியது. இந்தக் கதிரவன் நேற்றுத் தோன்றிய இடத்திலேயே ஏன் இன்றும் தோன்றுகிறான்? இதுபோன்று அடுக்கடுக்காக அவன் உள்ளத்தில் சிந்தனை தோன்றியது. ஏன்? எதற்கு? எப்படி? என்றெல்லாம் அவன் சிந்திக்கத் தொடங்கியபோதுதான் அறிவியல் வளரத் தொடங்கியது. அவ்வகையில் அறிவியலை வளர்த்த அறிஞர்களைப்பற்றி நாம் அறிந்துகொள்வது மிகவும் தேவை. இப்பாடப்பகுதியில் அறிவால் வளர்ந்த அறிவியல் சிந்தனையாளர்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம். ஆப்பிளைக் கண்டார்; ஆற்றலைத் தந்தார் தன் வீட்டுத் தோட்டத்திலுள்ள ஆப்பிள் மரத்தினடியில் சிறுவன் ஒருவன் உட்கார்ந்திருந்தான். அப்போது, மரத்திலிருந்த ஒரு பறவை சிறகடித்துப் பறந்து செல்ல, திடீரென ஆப்பிள் ஒன்று மரத்திலிருந்து கீழே விழுந்தது. நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? “ஆகா, நமக்கு ஓர் ஆப்பிள் கிடைத்ததே” என்று மகிழ்ச்சியோடு உண்ணத் தொடங்கியிருப்போம் அல்லவா? ஆனால், அந்தச் சிறுவன், அப்படி நினைக்கவில்லை. இந்த ஆப்பிள் ஏன் மேலே மேலே வானத்தைநோக்கிப் போகாமல் கீழிறங்கி வந்து விழுகிறது? என்று சிந்திக்கத் தொடங்கிவிட்டான். இதில் ஏதோ ஓர் இயற்கைச் சக்தி இருக்கவேண்டும் என எண்ணினான். இதன் காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று தன் பிறந்தநாளில் முடிவு செய்தான். அன்று தன் பிறந்தநாள் பரிசாக ஆப்பிள் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தான். அன்று சிந்திக்கத் தொடங்கிய அந்தச் சிறுவன்தான், புவியீர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்துப் பின்னாளில் உலகப்புகழ் பெற்ற சர் ஐசக் நியூட்டன். அவர், பூமிக்கு ஈர்ப்புச் சக்தி உண்டு என்ற உண்மையை உலகுக்கு உணர்த்திய அறிவியலறிஞர் ஆவார்.