தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல்
கவிதைப்பேழை: இன்பத்தமிழ்க் கல்வி
நுழையும்முன்
பாரதிதாசன் கவிதை எழுதுவதற்காகத் தாளையும் எழுதுகோலையும் எடுத்தார். எதைப்பற்றி எழுதுவது எனச் சிந்தித்தார். வானம், ஓடை, காடு, தென்றல், மயில் போன்ற இயற்கைப் பொருள்கள் எல்லாம் அவர் கருத்தைக் கவர்ந்தன. எனினும் புரட்சிக்கவிஞராகிய பாவேந்தர் தமிழரின் இன்னல் தீர்க்கும் வழி ஒன்றைக் கவிதையாகப் படைத்தார். அதை நாமும் படித்துச் சுவைப்போம்.

ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட
என்னை எழுதென்று சொன்னது வான்
ஓடையும் தாமரைப் பூக்களும் தங்களின்
ஓவியந் தீட்டுக என்றுரைக்கும்
காடும் கழனியும் கார்முகிலும் வந்து
கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்
ஆடும் மயில் நிகர் பெண்களெல்லாம் உயிர்
அன்பினைச் சித்திரம் செய்க என்றார்
சோலைக் குளிர்தரு தென்றல் வரும்பசுந்
தோகை மயில்வரும் அன்னம் வரும்
மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்
மாணிக்கப் பரிதி காட்சி தரும்
வேலைச் சுமந்திடும் வீரரின் தோள் உயர்
வெற்பென்று சொல்லி வரைக என்னும்
கோலங்கள் யாவும் மலை மலையாய் வந்து
கூவின என்னை – இவற்றிடையே

இன்னலிலே தமிழ் நாட்டினிலேயுள்ள
என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்
அன்னதோர் காட்சி இரக்கமுண்டாக்கியென்
ஆவியில் வந்து கலந்ததுவே
இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்தி விட்டால்
துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் நெஞ்சினில்
தூய்மை உண்டாகிடும் வீரம் வரும்!
– பாரதிதாசன்
சொல்லும் பொருளும்
எத்தனிக்கும் – முயலும்
வெற்பு – மலை
கழனி – வயல்
நிகர் – சமம்
பரிதி – கதிரவன்
அன்னதோர் – அப்படிஒரு
கார்முகில் – மழைமேகம்
துயின்றிருந்தார் – உறங்கியிருந்தார்
பாடலின் பொருள்
கவிதை எழுத ஏடு ஒன்று எடுத்தேன். என்னைக் கவிதையாக எழுதுக என்று வானம் கூறியது. நீரோடையும் தாமரை மலர்களும் “எங்களைக் கவி ஓவியமாகத் தீட்டுக” என்றன. காடும் வயல்களும் கருநிற மேகங்களும் என் கண்களைக் கவர்ந்து, கவிதையில் இடம்பெற முயன்றன. ஆடும் மயில் போன்ற பெண்கள் “அன்பினைக் கவிதையாக எழுதுக” என்றனர்.
சோலையின் குளிர்ந்த தென்றல் வந்தது. பசுமையான தோகையையுடைய மயில் வந்தது. அன்னம் வந்தது. மாணிக்கம் போல் ஒளி வீசி மாலையில் மேற்குத் திசையில் மறைகின்ற கதிரவனும் வந்தான். வேல் ஏந்திய வீரர்கள், மலை போன்ற எங்களது தோள்களின் அழகினை எழுதுங்கள் என்றனர். இவ்வாறு அழகிய காட்சிகள் எல்லாம் பெருந்திரளாக வந்து தங்களைக் கவிதையாக எழுதுமாறு கூறின.
ஆனால் துன்பத்தில் கிடக்கும் என் தமிழ்நாட்டு மக்கள் அறியாமையில் தூங்கிக் கிடக்கிறார்கள். அந்தக் காட்சி என் மனத்தில் இரக்கத்தை உண்டாக்கி என் உயிரில் வந்து கலந்து விட்டது. இத்துன்பம் நீங்க அனைவரும் இன்பத்தமிழ்க் கல்வியைக் கற்றவர்கள் என்னும் நிலை ஏற்பட வேண்டும். அந்நிலை ஏற்பட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கிடும். நெஞ்சில் தூய்மை உண்டாகிடும். வீரம் வரும்.
நூல் வெளி

கவிஞர், இதழாளர், தமிழாசிரியர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் பாரதிதாசன். இவர் கவிதை, கதை, கட்டுரை, நாடகம் ஆகியவற்றைப் படைப்பதில் வல்லவர். பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கண்ணகி புரட்சிக் காப்பியம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய பிசிராந்தையார் என்னும் நாடக நூலுக்குச் சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது.
பாரதிதாசன் கவிதைகள் என்னும் தொகுப்பிலிருந்து தமிழ்ப்பேறு என்னும் தலைப்பில் உள்ள பாடல் இங்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
கேள்விகள் மற்றும் பதில்கள்
பாடநூல் மதிப்பீட்டு வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது ________
அ) மயில்
ஆ) குயில்
இ) கிளி
ஈ) அன்னம்
[விடை : அ. மயில்]
2. பின்வருவனவற்றுள் ‘மலை’யைக் குறிக்கும் சொல்
அ) வெற்பு
ஆ) காடு
இ) கழனி
ஈ) புவி
[விடை : அ. வெற்பு]
3. ‘ஏடெடுத்தேன்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
அ) ஏடே + தேன்
ஆ) ஏட்டு + எடுத்தேன்
இ) ஏடு + எடுத்தேன்
ஈ) ஏ + டெடுத்தேன்
[விடை : இ. ஏடு + எடுத்தேன்]
4. ‘துயின்றிருந்தார்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
அ) துயின்று + இருந்தார்
ஆ) துயில் + இருந்தார்
இ) துயின்றி + இருந்தார்
ஈ) துயின் + இருந்தார்
[விடை : அ. துயின்று + இருந்தார்]
5. என்று + உரைக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ________
அ) என்றுஉரைக்கும்
ஆ) என்றிரைக்கும்
இ) என்றரைக்கும்
ஈ) என்றுரைக்கும்
[விடை : ஈ. என்றுரைக்கும்]
பொருத்துக.
வினா
1. கழனி – கதிரவன்
2. நிகர் – மேகம்
3. பரிதி – சமம்
4. முகில் – வயல்
விடை
1. கழனி – வயல்
2. நிகர் – சமம்
3. பரிதி – கதிரவன்
4. முகில் – மேகம்
குறு வினா
1. பாரதிதாசனின் மனதைக் கவர முயன்ற இயற்கைப் பொருள்கள் யாவை?
❖ வானம்
❖ நீரோடை
❖ தாமரை
❖ காடு
❖ வயல்
❖ மேகம்
❖ தென்றல்
❖ மயில்
❖ அன்னம்
❖ கதிரவன்
2. தமிழ் மொழிக்கல்வி பயில்வதால் உண்டாகும் நன்மைகள் எவையெனப் பாரதிதாசன் குறிப்பிடுகின்றார்?
❖ தமிழ்நாட்டு மக்களின் அறியாமை தூக்கம் களையும்,
❖ வாழ்வில் துன்பங்கள் நீங்கும்,
❖ நஞ்சில் தூய்மை உண்டாகும், வீரம் வரும்.
– ஆகியவற்றைத் தமிழ் மொழிக்கல்வி பயில்வதால் உண்டாகும் நன்மைகளாகப் பாரதிதாசன் குறிப்பிடுகின்றார்.
சிறு வினா
1. ‘இன்பத்தமிழ்க் கல்வி’ – பாடலின் மையக்கருத்தை நும் சொந்த நடையில் எழுதுக.
பாரதிதாசன் கவிதை எழுத ஏட்டினை எடுத்தார். வானம் தன்னைக் கவிதையாக எழுதும்படிக் கூறியது. நீரோடை, தாமரை, காடு, வயல், மேகம் ஆகியன அவரைக் கவர்ந்து தங்களைக் கவிதை எழுதும்படி அவரிடம் வேண்டியது.மயில் போன்ற பெண்கள் அன்பைக் கவிதையாக எழுதும்படிக் கூறினர். தென்றல், மயில், அன்னம், கதிரவன். வீரர்கள் ஆகியனவும் அவரிடம் கவிதை எழுத வேண்டின.
ஆனால் துன்பத்தில் கிடக்கும் தமிழ்நாட்டு மக்கள் அறியாமையில் தூங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். அதனை நீங்க இன்பத்தமிழ்க் கல்வி கற்க வேண்டும். இந்த நிலை ஏற்பட்டால் வாழ்வில் துன்பம் நீங்கும். மனதில் தூய்மை உண்டாகும். வீரம் வரும்.
சிந்தனை வினா
1. தமிழ் மொழிக்கல்வி பயில்வதால் ஏற்படும் நன்மைகளாக நீங்கள் கருதுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
❖ எளிதில் பொருள் விளங்கி நன்கு பாடப்புரிதல் ஏற்படும்.
❖ பழந்தமிழ் கலை, பண்பாடு, மரபு ஆகியன காக்கப்படும்.
❖ தொன்மையையும் வரலாற்றையும் நன்கு உணரலாம்.
❖ விழுமிய தமிழ்ச்சிந்தனைகளை அறியலாம்.
கற்பவை கற்றபின்
1. இயற்கைக்காட்சி குறித்து நான்கு வரிகளில் கவிதை எழுதுக.
“பூமித் தாயே! பசுமை போர்த்தியவளே!
நீலக் கடலாய் அலங்கரித்தவளே!
கதிரவன் காட்சியில்…. பொன் தகடானவளே!
உன்னரும் வளத்தால் இன்னுயிர்கள் வாழ்கின்றனவே!”
2. ‘தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது’ என்பதை வகுப்பில் கலந்துரையாடுக.
ஆங்கில வழிக்கல்வி படித்தால் மட்டுமே உயர முடியும் என்றெண்ணிக் கொண்டிருப்போரே! கவனியுங்கள். வாழ வந்த ஆங்கிலேயரைக்கூட விரட்டினோம். ஆனால், ஆங்கில மொழியை விரட்டாமல் அதன் மீது மோகம் கொண்டு அதன் வழியில் கற்க அலைகின்றோம். இது எப்படி இருக்கின்றது தெரியுமா? தன் தாயைப் புறந்தள்ளிவிட்டு, அயலாம் தாயைப் போற்றுவது போலத்தான். எல்லா வளமும் புதைந்துள்ள மொழி நம் தாய்மொழி. அதன் வழியிலேயே நாம் கல்வி பெறுவது சிறப்பு.ஒளவையாரும் கம்பரும் சேக்ஸ்பியரும் காந்தியடிகளும் தாகூரும் எப்படிச் சிறந்தனர் தெரியுமா? அனைவரும் அவரவர் தாய்மொழியால் தான் சிறந்தனர். எனவே, சிறந்த நம் தாய்மொழியிலேயே கல்வி பெறுவோம்.