Samcheer Kalvi 7th Tamil Books Chapter 6 2

Last Updated on: January 3, 2026 by VirkozKalvi

தமிழ் : பருவம் 2 இயல் 3 : கலை வண்ணம்

கவிதைப்பேழை: கீரைப்பாத்தியும் குதிரையும் (இரட்டுற மொழிதல்)

நுழையும்முன்

தமிழில் சொல்நயமும் பொருள்நயமும் மிகுந்த பலவகையான பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படும் இரட்டுறமொழிதலும் அவற்றுள் ஒன்று. இதனைச் ‘சிலேடை’ என்றும் கூறுவர். அவ்வகையில் அமைந்த சுவையான பாடல் ஒன்றை அறிவோம்.

கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால் 

வெட்டி மறிக்கின்ற மேன்மையால்முட்டப்போய் 

மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன் 

ஏறப் பரியாகு மே*

– காளமேகப்புலவர்

சொல்லும் பொருளும் 

வண்கீரை –  வளமான கீரை

முட்டப்போய் –  முழுதாகச் சென்று

மறித்தல் –  தடுத்தல் (மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்தி கட்டுதல்), எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல்

பரி –  குதிரை 

கால் –  வாய்க்கால், குதிரையின் கால்

பாடலின் பொருள்

கீரைப்பாத்தியில்

மண் கட்டிகளை அடித்துத் தூளாக்குவர்; மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திகளாக்கி வைத்திருப்பர். வாய்க்காலில் மாறி மாறி நீர் பாய்ச்சுவர். நீர் கடைமடையின் இறுதி வரை சென்று மாற்றி விடத் திரும்பும். 

குதிரை

வண்டிகளில் கட்டி, அடித்து ஓட்டப்படும்; கால் மாறிமாறிப் பாய்ந்து செல்லும்; எதிரிகளை மறித்துத் தாக்கும்; போக வேண்டிய இடம் முழுவதும் சென்று மீண்டும் திரும்பி வரும்.

இக்காரணங்களால் கீரைப் பாத்தியும், ஏறிப்பயணம் செய்யும் குதிரையும் ஒன்றாகக் கருதப்படும்.

நூல் வெளி 

காளமேகப்புலவரின் இயற்பெயர் வரதன். மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப்புலவர் என்று அழைக்கப்பட்டார். திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம். சித்திர மடல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவரது தனிப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன. அந்நூலிலிருந்து ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

கேள்விகள் மற்றும் பதில்கள்

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக,

1. ‘ஏறப் பரியாகுமே’ என்னும் தொடரில் ‘பரி’ என்பதன் பொருள் ________

அ) யானை 

ஆ) குதிரை 

இ) மான் 

ஈ) மாடு

[விடை : ஆ. குதிரை]

2. பொருந்தாத ஓசை உடைய சொல் ________

அ) பாய்கையால்

ஆ) மேன்மையால் 

இ) திரும்புகையில்

ஈ) அடிக்கையால்

[விடை : இ. திரும்புகையில்]

3. ‘வண்கீரை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

அ) வண் + கீரை

ஆ) வண்ணம் + கீரை 

இ) வளம் + கீரை

ஈ) வண்மை + கீரை 

[விடை : ஈ. வண்மை + கீரை]

4. கட்டி + அடித்தல் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் 

அ) கட்டியிடித்தல்

ஆ) கட்டியடித்தல் 

இ) கட்டி அடித்தல்

ஈ) கட்டு அடித்தல்

[விடை : ஆ. கட்டியடித்தல்]

சிறுவினா 

1. கீரைப்பாத்தியும் குதிரையும் எக்காரணங்களால் ஒத்திருக்கின்றன? 

கீரைப்பாத்தி

❖ மண்கட்டிகளை அடித்துத் தூளாக்குவர்.

❖ மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திகளாக்கி வைத்திருப்பர்.

❖ வாய்க்காலில் மாறி மாறி நீர்ப்பாய்ச்சுவர்.

❖ நீர் கடைமடையின் இறுதிவரை சென்று மாற்றிவிடத் திரும்பும்.

குதிரை 

❖ வண்டிகளில் கட்டி, அடித்து ஓட்டப்படும். 

❖ கால் மாறி மாறிப் பாய்ந்து செல்லும். 

❖ எதிரிகளை மறித்துத் தாக்கும். 

❖ போக வேண்டிய இடம் முழுதும் சென்று மீண்டும் திரும்பி வரும்.  

– இத்தகைய காரணங்களால் கீரைப்பாத்தியும் குதிரையும் ஒத்திருக்கின்றன. 

சிந்தனை வினா 

நீங்கள் எவற்றைக் குதிரையோடு ஒப்பிடுவீர்கள்? 

நான் குதிரையையும் ஆற்றையும் ஒப்பிடுவேன். குதிரை மற்றும் ஆறு ஆகிய இரண்டும் ஓடும், சுழி இருக்கும். தாக்கும்.

கற்பவை கற்றபின்

இரு பொருள் தரும் சொற்கள் சிலவற்றை எழுதி, அவற்றின் இரு பொருள்களையும் எழுதுக. 

(எ.கா) மாலை – மலர் மாலை, அந்திப்பொழுது.

ஆறு – எண், நதி 

அன்னம்  – சோறு, பறவை 

மதி –  அறிவு, நிலவு  

நகை – புன்னகை, அணிகலன்

மெய் – உடல், உண்மை

திங்கள் – மாதம், நிலவு

மாடு – விலங்கு, செல்வம்

தை – மாதம், தைத்தல்

பார் – உலகம், பார்த்தல் 

திரை – கடல் அலை, திரைச்சீலை

படி – படித்தல், படிக்கட்டு

இசை  – புகழ், சங்கீதம்

வேங்கை – மரம், விலங்கு

கிளை – மரக்கிளை, உறவு

மா – மாமரம், பெரிய 

மறை – மறைத்தல், வேதம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top