Samcheer Kalvi 7th Tamil Books Chapter 7 3

Last Updated on: January 3, 2026 by VirkozKalvi

தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம்

உரைநடை: திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

நுழையும்முன்

தொடக்கத்தில் காடுகளில் வாழ்ந்து வந்த மனிதன் பின்னர் ஊர்களை உருவாக்கிக் கொண்டு வாழத் தொடங்கினான். சிறிய ஊர்கள் வளர்ச்சி அடைந்து நகரங்களாக மாறின. நகரங்களில் பெரும்பாலானவை ஆற்றங்கரைகளில் அமைந்திருந்தன. ஆற்றங்கரைகளில் சிறந்து விளங்கும் நகரங்கள் தமிழ்நாட்டில் பல உள்ளன. அவற்றுள் ஒரு நகரத்தைப் பற்றி அறிவோம்.

அன்பு நண்பன் எழிலனுக்கு, 

வணக்கம். நான் நலம். நீயும் உன் குடும்பத்தினரும் நலமா? சென்ற ஆண்டுவரை நாம் ஒரே பள்ளியில் ஒன்றாகப் படித்து வந்தோம். இந்த ஆண்டு என் தந்தையின் பணி மாறுதல் காரணமாக எங்கள் சொந்த ஊருக்கு வந்து விட்டோம். வரும் கோடை விடுமுறையில் எங்கள் ஊராகிய திருநெல்வேலிக்கு நீ வர வேண்டும் என்று உன்னை அன்புடன் அழைக்கிறேன்.

திருநெல்வேலி தமிழகத்தின் பழமையான நகரங்களுள் ஒன்று. பழந்தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர் ஆண்டு வந்தனர் என்பது நமக்குத் தெரியும். அவர்களுள் பாண்டியர்களின் தலைநகரமாக மதுரை விளங்கியது. அவர்களது இரண்டாவது தலைநகரமாகத் திருநெல்வேலி விளங்கியது.

இந்நகரைச் சுற்றி நெல் வயல்கள் வேலி போல் அமைந்திருந்ததால் திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது. தற்போது நெல்லை என்று மருவி வழங்கப்படுகிறது. திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று திருஞானசம்பந்தரும், தண்பொருநைப் புனல் நாடு என்று சேக்கிழாரும் திருநெல்வேலியின் சிறப்பைப் போற்றியுள்ளனர்.

தெரிந்து தெளிவோம்

முற்காலத்தில் திருநெல்வேலிக்கு வேணுவனம் என்னும் பெயரும் இருந்துள்ளது. மூங்கில் காடு என்பது அதன் பொருளாகும். மூங்கில் நெல் மிகுதியாக விளைந்தமையால் அப்பகுதிக்கு நெல்வேலி என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கருதுவர். 

திருநெல்வேலி மாவட்டம் மலை வளம் மிகுந்த பகுதியாகும். இப்பகுதியின் சிறப்புமிக்க மலையாகிய பொதிகை மலை இலக்கியங்களில் பாராட்டப்பட்டு உள்ளது.

பொதியி லாயினும் இமய மாயினும் 

பதியெழு அறியாப் பழங்குடி 

என்று இளங்கோவடிகள் பொதிகை மலைக்கு முதலிடம் கொடுத்துப் பாடுகிறார். இலக்கியங்களில் திரிகூடமலை என வழங்கப்படும் குற்றாலமலை புகழ் பெற்ற சுற்றுலா இடமாகத் திகழ்கின்றது.

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் 

மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் 

என்று குற்றால மலைவளத்தைத் திரிகூட இராசப்பக் கவிராயர் தம் குற்றாலக் குறவஞ்சி நூலில் பாடியுள்ளார்.

திருநெல்வேலிப் பகுதியை வளம் செழிக்கச் செய்யும் ஆறு தாமிரபரணி ஆகும். இதனைத் தண்பொருநை நதி என்று முன்னர் அழைத்தனர். இது பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி என்று பல கிளை ஆறுகளாகப் பிரிந்து திருநெல்வேலியை நீர்வளம் மிக்க மாவட்டமாகச் செய்கிறது.

திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது உழவுத்தொழில். தாமிரபரணி ஆற்றின் மூலம் இங்கு உழவுத்தொழில் நடைபெறுகின்றது. இங்குக் குளத்துப் பாசனமும் கிணற்றுப் பாசனமும்கூடப் பயன்பாட்டில் உள்ளன. இருபருவங்களில் நெல் பயிரிடப்படுகின்றது. மானாவாரிப் பயிர்களாகச் சிறுதானியங்கள், எண்ணெய்வித்துகள், காய்கனிகள், பருத்தி, பயறுவகைகள் போன்றன பயிரிடப்படுகின்றன. இராதாபுரம், நாங்குநேரி, அம்பாசமுத்திரம், தென்காசி போன்ற பகுதிகளில் பெருமளவில் வாழை பயிரிடப்படுகின்றது. இங்கு விளையும் வாழைத்தார்கள் தமிழ்நாடு மட்டுமன்றிக் கர்நாடகம், கேரளம் போன்ற பிற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் நெல்லை மாவட்டமே முதலிடம் வகிக்கின்றது. கடலோர மற்றும் உள்நாட்டு மீன்பிடித் தொழிலும் இம்மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.

தெரிந்து தெளிவோம்

திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஆதிச்சநல்லூர் என்னும் இடத்தில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வில் இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கப்  பழந்தமிழர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழரின் தொன்மைக்கும் நாகரிகச் சிறப்புக்கும் சான்றாக விளங்கும் தொல்பொருள்கள் இங்குக் கிடைத்துள்ளன. இவ்வூர் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. 

தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் கொற்கை என்னும் துறைமுகம் இருந்தது. இங்கு முத்துக்குளித்தல் சிறப்பாக நடைபெற்றதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. கொற்கையில் விளைந்த பாண்டி நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாக விளங்கியது.

முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை  (நற்றிணை 23:6) 

கொற்கையில் பெருந்துறை முத்து (அகம் 27:9) 

என்று சங்க இலக்கியங்கள் கொற்கையின் முத்துகளைக் கூறுகின்றன. கிரேக்க, உரோமாபுரி நாடுகளைச் சேர்ந்தவர்களான யவனர்கள் இந்த முத்துகளை விரும்பி வாங்கிச் சென்றனர்.

பொருநை எனப்படும் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நெல்லை மாநகரின் அமைப்பு சிறப்பானது. நகரின் நடுவே நெல்லையப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. கோவிலைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் மாட வீதிகள் அமைந்துள்ளன. அவற்றைச் சுற்றித் தேரோடும் வீதிகள் அழகுற அமைந்துள்ளன. இங்குத் திங்கள்தோறும் திருவிழா நடைபெறும் என்பதை,

திங்கள் நாள்விழா மல்கு திருநெல் 

வேலியுறை செல்வர் தாமே 

என்னும் திருஞானசம்பந்தர் பாடல் அடிகளால் அறியலாம்.

நெல்லை மாநகரில் உள்ள தெருக்கள் பல அதன் பழமைக்குச் சான்றாக உள்ளன. காவற்புரைத் தெரு என்று ஒரு தெரு உள்ளது. காவற்புரை என்றால் சிறைச்சாலை. அரசரால் தண்டிக்கப்பட்டவர்கள் இங்குச் சிறை வைக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது.

மேல வீதியை அடுத்துக் கூழைக்கடைத் தெரு உள்ளது. கூலம் என்பது தானியத்தைக் குறிக்கும். கூலக்கடைத்தெரு என்பதே மருவிக் கூழைக்கடைத் தெரு என வழங்கப்படுகிறது.

அக்கசாலை என்பது அணிகலன்களும் பொற்காசுகளும் உருவாக்கும் இடம். முற்காலத்தில் பொன் நாணயங்கள் உருவாக்கும் பணியாளர்கள் வாழ்ந்த பகுதி அக்கசாலைத் தெரு என்னும் பெயரில் அமைந்துள்ளது.

தெரிந்து தெளிவோம்

தாமிரபரணி ஆற்றின் மேற்குக் கரையில் திருநெல்வேலியும் கிழக்குக் கரையில் பாளையங்கோட்டையும் அமைந்துள்ளன. இவ்விரு நகரங்களும் இரட்டை நகரங்கள் என அழைக்கப்படுகின்றன. பாளையங்கோட்டையில் அதிக அளவில் கல்வி நிலையங்கள் இருப்பதால் அந்நகரைத் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்பர்.

நெல்லை நகரின் மேற்கே பேட்டை என்னும் ஊர் உள்ளது. வணிகம் நடைபெறும் பகுதியைப் பேட்டை என வழங்குதல் பண்டைய மரபு. இப்பகுதி முன்பு பெருவணிகம் நடைபெற்ற இடமாக இருந்திருக்க வேண்டும். பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனை நெல்லை நகர மக்கள் எதிர்கொண்டு வரவேற்ற இடம் பாண்டியபுரம் எனவும் அவன் தேவியாகிய மங்கையர்க்கரசியை மகளிர் எதிர்கொண்டு வரவேற்ற இடம் திருமங்கை நகர் என்றும் வழங்கப்படுகின்றன.

நாயக்க மன்னரின் தளவாயாக விளங்கிய அரியநாயகரின் வழித் தோன்றல் வீரராகவர். அவரது பெயரில் அமைந்த ஊர் வீரராகவபுரம் எனவும், அவரது துணைவியார் மீனாட்சி அம்மையார் பெயரில் உள்ள ஊர் மீனாட்சிபுரம் எனவும் வழங்கப்பட்டு வருகின்றன.

சேரன்மாதேவி, கங்கைகொண்டான், திருமலையப்பபுரம், வீரபாண்டியப்பட்டினம், குலசேகரன்பட்டினம் போன்ற ஊர்கள் பண்டைய வரலாற்றை நினைவூட்டுவனவாக உள்ளன. பாளையங்கோட்டை, உக்கிரன்கோட்டை, செங்கோட்டை என்னும் பெயர்கள் இம்மாவட்டத்தில் கோட்டைகள் பல இருந்தமைக்குச் சான்றாக விளங்குகின்றன.

அகத்தியர் பொதிகை மலையில் வாழ்ந்தார் என்பர். சங்கப் புலவரான மாறோக்கத்து நப்பசலையார், நம்மாழ்வார், பெரியாழ்வார், குமரகுருபரர், திரிகூடராசப்பக் கவிராயர், கவிராசப் பண்டிதர் ஆகியோர் திருநெல்வேலிச் சீமையில் பிறந்து தமிழுக்குச் செழுமை சேர்த்துள்ளனர். அயல்நாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவர் போன்றோரையும் தமிழின்பால் ஈர்த்த பெருமைக்கு உரியது திருநெல்வேலி.

இத்தகைய சிறப்பு மிக்க திருநெல்வேலிக்கு உன்னை அன்போடு அழைக்கின்றேன்.

இப்படிக்கு, 

உன் அன்பு நண்பன்,

அறிவழகன்.

கேள்விகள் மற்றும் பதில்கள்

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. திருநெல்வேலி ———- மன்னர்களோடு தொடர்பு உடையது.

அ) சேர 

ஆ) சோழ 

இ) பாண்டிய 

ஈ) பல்லவ 

[விடை இ. பாண்டிய] 

2. இளங்கோவடிகள் ———- மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார்.

அ) இமய 

ஆ) கொல்லி 

இ) பொதிகை 

ஈ) விந்திய 

[விடை : இ. பொதிகை] 

3. திருநெல்வேலி ———- ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

அ) காவிரி 

ஆ) வைகை

இ) தென்பெண்ணை

ஈ) தாமிரபரணி

[விடை : ஈ. தாமிரபரணி]

பொருத்துக.

வினா 

1. தண்பொருநை – பொன்நாணயங்கள் உருவாக்கும் இடம் 

2. அக்கசாலை – குற்றாலம் 

3. கொற்கை – தாமிரபரணி 

4. திரிகூடமலை – முத்துக் குளித்தல்

விடை 

1. தண்பொருநை – தாமிரபரணி. 

2. அக்கசாலை – பொன்நாணயங்கள் உருவாக்கும் இடம் 

3. கொற்கை – முத்துக்குளித்தல் 

4. திரிகூடமலை – குற்றாலம்

குறு வினா 

1. தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் யாவை?

பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி ஆகியவை தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் ஆகும்.

2. கொற்கை முத்து பற்றிக் கூறுக. 

❖ தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் கொற்கை என்னும் துறைமுகம் இருந்தது. 

❖ இங்கு முத்துக்குளித்தல் சிறப்பாக நடைபெற்றது. 

❖ கொற்கையில் விளைந்த பாண்டி நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாக விளங்கியது.

சிறு வினா

1. திருநெல்வேலிப் பகுதியில் நடைபெறும் உழவுத் தொழில் குறித்து எழுதுக. 

❖ திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது உழவுத்தொழில் தாமிரபரணி ஆற்றின்மூலம் இங்கு உழவுத்தொழில் நடைபெறுகின்றது.

❖ இங்குக் குளத்துப் பாசனமும் கிணற்றுப் பாசனமும் கூடப் பயன்பாட்டில் உள்ளன. இருபருவங்களில் நெல் பயிரிடப்படுகின்றது.

❖ மானாவாரிப் பயிர்களாகச் சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள், காய்கனிகள், பருத்தி, பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன. 

2. திருநெல்வேலிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு குறித்து எழுதுக. 

❖ அகத்தியர் பொதிகை மலையில் வாழ்ந்தார் என்பர். 

❖ சங்கப்புலவர்களான மாறோக்கத்து நப்பசலையார், நம்மாழ்வார், பெரியாழ்வார், குமரகுருபரர், திரிகூடராசப்பக் கவிராயர், கவிராசப் பண்டிதர் ஆகியோர் திருநெல்வேலியில் பிறந்து தமிழுக்குச் செழுமை சேர்த்துள்ளனர். 

❖ ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவர் போன்றோரைத் தமிழின்பால் ஈர்த்த பெருமை திருநெல்வேலிக்கு உரியது. 

3. திருநெல்வேலி நகர அமைப்புப் பற்றிக் கூறுக. 

❖ நெல்லையில் உள்ள தெருக்கள் பல அதன் பழமைக்குச் சான்றாக உள்ளன. 

❖ காவற்புரைத் தெரு என்று ஒரு தெரு உள்ளது. அரசரால் தண்டிக்கப்பட்டவர்கள் இங்கு சிறைவைக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது.

❖ மேல வீதியை அடுத்து கூழைக்கடைத் தெரு உள்ளது. அதாவது தானியங்கள் விற்கும் கடைத் தெரு ஆகும்.

❖ முற்காலத்தில் பொன் நாணயங்களை உருவாக்குபவர் வாழ்ந்த இடம் அக்கசாலைத் தெரு. பெரு வணிகம் நடைபெற்ற இடம் பேட்டை.

சிந்தனை வினா 

1. மக்கள் மகிழ்ச்சியாக வாழ ஒரு நகரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? 

❖ இயற்கை வளம் மிகுந்ததாக இருக்க வேண்டும். 

❖ அனைத்துப் பொருட்களும் அருகில் கிடைக்கும் படி இருக்க வேண்டும். 

❖ சாதி மத பேதமின்றி மதநல்லிணக்கத்தைப் போற்றும் படியாக இருக்க வேண்டும். 

❖ சுற்றுப்புறத்தூய்மை உடையதாக இருக்க வேண்டும்.

கற்பவை கற்றபின்

1. உங்களுடைய மாவட்டத்திலுள்ள சுற்றுலா இடங்கள் பற்றிய செய்திகளைத் தேடித் தொகுக்க.

கொடிவேரி அணை, வெள்ளோடு பறவைகள் சரணாலயம், பெரியார் – அண்ணா நினைவகம், பவானி சங்கமேஸ்வரர் கோயில், ஜவுளிச் சந்தை, அந்தியூர் குருநாத சாமி கோயில், பண்ணாரி அம்மன் கோயில், பவானி சாகர் ஆகியன ஈரோடு மாவட்டத்திலுள்ள சுற்றுலா இடங்கள்.

2. தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகள் பற்றிய செய்திகளைத் தொகுக்க.

திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், கோவை, மதுரை, திருச்சி, சேலம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல், தஞ்சாவூர், ஈரோடு – ஆகியன தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top