தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம்
இலக்கணம்: அணி இலக்கணம்
அணி
அணி என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருள். ஒரு செய்யுளைச் சொல்லாலும், பொருளாலும் அழகு பெறச் செய்தலை அணி என்பர்.
உவமை அணி
மயில் போல ஆடினாள்.
மீன் போன்ற கண்.

இத்தொடர்களைப் படியுங்கள். இத்தொடர்களில் நடனம் ஆடும் பெண்ணோடு மயிலையும், கண்ணுடன் மீனையும் ஒப்பிட்டுள்ளனர். இவ்வாறு ஒப்பிட்டுக் கூறப்படும் பொருளை (மயில், கண்) உவமை அல்லது உவமானம் என்பர். உவமையால் விளக்கப்படும் பொருளை உவமேயம் என்பர். இத்தொடர்களில் வந்துள்ள ‘போல’, ‘போன்ற’ என்பவை உவம உருபுகளாகும்.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை (பொறையுடைமை)
பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்வது போல நாம் நம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது இக்குறளின் பொருள்.
இதில் பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்ளுதல் என்பது உவமை. நாம் நம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது ஒப்பிடப்படும் பொருள் (உவமேயம்). ‘போல’ என்பது உவம உருபு.
ஒரு பாடலில் உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி எனப்படும். போல, புரைய, அன்ன, இன்ன, அற்று, இற்று, மான, கடுப்ப, ஒப்ப, உறழ போன்றவை உவம உருபுகளாக வரும்.
எடுத்துக்காட்டு உவமை அணி
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு (கல்வி)
மணற்கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும். மனிதர்கள் கற்கும் அளவிற்கு ஏற்ப அறிவு பெருகும் என்பதே இக்குறளின் கருத்தாகும். இதில் தொட்டனைத்து ஊறும் மணற்கேணி என்பது உவமை. மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு என்பது உவமேயம். இடையில் ‘அதுபோல்’ என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது.
இவ்வாறு உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அஃது எடுத்துக்காட்டு உவமை அணி எனப்படும்.
இல்பொருள் உவமையணி
மாலை வெயிலில் மழைத்தூறல் பொன்மழை பொழிந்ததுபோல் தோன்றியது.
காளை கொம்பு முளைத்த குதிரை போலப் பாய்ந்து வந்தது.
இத்தொடர்களில் ‘பொன்மழை பொழிந்தது போல்’, ‘கொம்பு முளைத்த குதிரை போல’ என்னும் உவமைகள் வந்துள்ளன. உலகில் பொன் மழையாகப் பொழிவதும் இல்லை. கொம்பு முளைத்த குதிரையும் இல்லை. இவ்வாறு உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவதை இல்பொருள் உவமை அணி என்பர்.
கேள்விகள் மற்றும் பதில்கள்
பாடநூல் மதிப்பீட்டு வினா
குறுவினா:
1. உவமை, உவமேயம், உவம உருபு விளக்குக.
ஒப்பிட்டுக் கூறப்படும் பொருளை உவமை அல்லது உவமாகம் என்பர். உவமையால் விளக்கப்படும் பொருளை உவமேயம் என்பர். ‘போல’, ‘போன்ற’ என்பவை உவம உருபுகளாகும்.
2. உவமை அணிக்கும் எடுத்துக்காட்டு உவமை அணிக்கும் உள்ள வேறுபாடு யாது?
ஒரு பாடலில் உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி. உவம உருபு மறைந்து வந்தால் அஃது எடுத்துக்காட்டு உவமை அணி.
கற்பவை கற்றபின்
பின்வரும் தொடர்களில் உள்ள உவமை, உவமேயம், உவம உருபு ஆகிவற்றைக் கண்டறிந்து எழுதுக.

மொழியை ஆழ்வோம்
கீழ்க்காணும் தலைப்புகளுள் ஒன்று பற்றி இரண்டு நிமிடம் பேசுக.
நான் விரும்பும் கவிஞர்
வணக்கம்.
பாவேந்தரே நான் விரும்பும் கவிஞராவார்.இளமையிலே வளமை மிகும் கவி பாடும் ஆற்றல் அவருக்கிருந்தது. கற்கண்டுச் சுவையனைய சொற்கொண்டு பாடினார். விற்கொண்டு அடிப்பது போல் விரைந்து வரும் சொல்லம்பால் தீமைகளைச் சாடினார்.
சமுதாயத்தையோ, மூட நம்பிக்ககைளையோ சாடும் போது புரட்சி வேகம் பிறக்கப்பாடினார்.
‘ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்பராகி விட்டால் – ஓர் நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி,
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ!’
எனப் பாடியவர் அவர்.
‘இருட்டறையில் உள்ளதடா உலகம்: சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே’ எனக் குமுறினார். ‘கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரிற்பழுத்த பலா!’ எனக் கூறி விதவையர் மணத்தை வேண்டினார்! ‘புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேருடன் சாய்ப்போம்!’ எனச் சபதம் செய்தார். எண்ணற்ற தமிழ் நெஞ்சில் இன்றும் – என்றும் குடியிருப்பவர் நம் பாவேந்தன்.
நன்றி.
எனக்குப் பிடித்த பாடல்.
இன்பத் தமிழ்
தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத்
தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! இன்பத்
தமிழ் எங்கள் வாழ்விக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மது வென்று பேர்! – இன்பத்
இன்பத் தமிழ் எங்கள் செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத்
தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! – இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
சொல்லக் கேட்டு எழுதுக.
1. மாடுகள் கொண்டு நிலத்தை உழுதனர்.
2. நீர்வளம் மிக்க ஊர் திருநெல்வேலி.
3. நெல்லையில் தமிழ்க் கவிஞர் பலர் வாழ்ந்தனர்.
4. அகத்தியர் வாழ்ந்த மலை பொதிகை மலை.
5. இல்லாத பொருளை உவமையாக்குவது இல்பொருள் உவமை அணி.
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
பனை மரமே பனை மரமே
ஏன் வளந்தே இத்தூரம்?
குடிக்கப் பதனியானேன்!
கொண்டு விற்க நுங்கானேன்
தூரத்து மக்களுக்குத்
தூதோலை நானானேன்!
அழுகிற பிள்ளைகட்குக்
கிலுகிலுப்பை நானானேன்!
கைதிரிக்கும் கயிறுமானேன்!!
கன்றுகட்டத் தும்புமானேன்!
– நாட்டுப்புறப்பாடல்
வினாக்கள்:
1. பனை மரம் தரும் உணவுப் பொருள்கள் யாவை?
பதனி, நுங்கு,
2. பனை மரம் யாருக்கு கிலுகிலுப்பையைத் தரும்?
பனை மரம் அழுகின்ற பிள்ளைகளுக்குக் கிலுகிலுப்பையைத் தரும்.
3. ‘தூதோலை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
தூது + ஓலை.
4. பனைமரம் மூலம் நமக்குக் கிடைக்கும் பொருள்களைப் பட்டியலிடுக.
பதனி, நுங்கு, ஓலை. கிலுகிலுப்பை, கயிறு, தும்பு.
5. பாடலுக்கு ஏற்ற தலைப்பை எழுதுக.
பனைமரம்.
பின்வரும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
என்னைக் கவர்ந்த நூல்.
என்னைக் கவர்ந்த நூல் – சிலப்பதிகாரம்
முன்னுரை:
அன்னைத் தமிழில் பல கோடி நூல்கள் இருப்பினும், என்னைக் கவர்ந்த நூல் சிலப்பதிகாரமே ஆகும். அதனைப் பற்றி விரிவாகக் காண்போம்.
சிலப்பதிகாரம் அமைப்பு:
சிலப்பதிகாரம் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என மூன்று பெரும் பிரிவுகளையும், முப்பது காதைகளாகிய சிறுபிரிவையும் கொண்டுள்ளது. இந்நூலை இளங்கோவடிகள் இயற்றியுள்ளார்.
சிலப்பதிகாரக் கதை:
புகார் நகரத்தில் கோவலனும், கண்ணகியும் திருமணம் செய்து வாழ்கின்றனர். கண்ணகியைப் பிரிந்து கோவலன் மாதவியுடன் வாழ்கின்றார். அவளைப்பிரிந்து மீண்டும் கண்ணகியுடன் மதுரை செல்கின்றார். கண்ணகியின் சிலம்பை விற்கச் சென்ற இடத்தில் கொல்லப்படுகின்றான்.கண்ணகி நீதியை நிலைநாட்டி மதுரையை எரித்து, வானுலகம் செல்கின்றாள்.
சிறப்புகள்:
✓ ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்.
✓ முத்தமிழ்க் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், நாடகக் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் நூல்.
✓ குடிமக்களைக் கதை மாந்தராகக் கொண்டு எழுதப்பட்ட முதல் நூல் இது.
கவர்ந்த காரணம்:
மூவேந்தர்களைப் பற்றியும், முத்தமிழ் பற்றியும், முச்சுவை பற்றியும், முந்நீதிகளைப் பற்றியும் ஒரே நூலில் விளக்குவதால் சிலப்பதிகாரம் என்னை மிகவும் கவர்ந்தது. பொதுமக்களைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டதாலும் என்னைக் கவர்ந்தது இந்நூல்.
முடிவுரை:
சிலப்பதிகாரம் மிகவும் இனிமையான நூல் என்பதை அறிந்து, நான் படித்தேன், என்னைக் கவர்ந்தது. நீங்களும் படியுங்கள்! உங்களையும் கவரும்!
மொழியோடு விளையாடு
குறுக்கெழுத்துப் புதிர்.
தமிழ்நாட்டில் உள்ள ஊர்ப் பெயர்களையும் அவற்றின் சிறப்பையும் அறிவோம்.

இடமிருந்து வலம்
1. பின்னலாடை நகரம் – திருப்பூர்
2. மலைகளின் அரசி – ஊட்டி
6. தமிழகத்தின் தலைநகரம் – சென்னை
13. நெற்களஞ்சியம் – தஞ்சாவூர்
வலமிருந்து இடம்
3. மலைக்கோட்டை நகரம் – திருச்சி
5. ஏழைகளின் ஊட்டி – ஏற்காடு
8. மாங்கனித் திருவிழா – காரைக்கால்
11. மஞ்சள் மாநகரம் – ஈரோடு
மேலிருந்து கீழ்
1. பூட்டு நகரம் – திண்டுக்கல்
3. தேர் அழகு நகரம் – திருவாரூர்
4. தெற்கு எல்லை – கன்னியாகுமரி
7. புலிகள் காப்பகம் – முண்டத்துறை
கீழிருந்து மேல்
9. பட்டாசு நகரம் – சிவகாசி
10. தூங்கா நகரம் – மதுரை
12. மலைகளின் இளவரசி – கொடைக்கானல்
14. கர்மவீரர் நகரம் – விருதுநகர்.
தொடருக்குப் பொருத்தமான உவமையை எடுத்து எழுதுக.
1. என் தாயார் என்னை —— காத்து வளர்த்தார்.
(கண்ணை இமை காப்பது போல, தாயைக்கண்ட சேயைப் போல)
விடை: கண்ணை இமை காப்பது போல
2. நானும் என் தோழியும் —— இணைந்து இருப்போம்.
(இஞ்சி தின்ற குரங்கு போல, நகமும் சதையும் போல)
விடை: நகமும் சதையும் போல
3. திருவள்ளுவரின் புகழை ——— உலகமே அறிந்துள்ளது.
(எலியும் பூனையும் போல, உள்ளங்கை நெல்லிக்கனி போல)
விடை: உள்ளங்கை நெல்லிக்கனி போல
4. அப்துல் கலாமின் புகழ் —— உலகமெங்கும் பரவியது.
(குன்றின்மேலிட்ட விளக்கு போல, குடத்துள் இட்ட விளக்கு போல)
விடை: குன்றின் மேலிட்ட விளக்கு போல.
5. சிறுவயதில் நான் பார்த்த நிகழ்ச்சிகள் ——– என் மனத்தில் பதிந்தன.
(கிணற்றுத்தவளை போல, பசுமரத்தாணி போல)
விடை: பசுமரத்தாணி போல.
கொடுக்கப்பட்டுள்ள ஊரின் பெயர்களில் இருந்து புதிய சொற்களை உருவாக்குக.
(எ.கா) திருநெல்வேலி – திரு, நெல், வேலி, வேல்
1. நாகப்பட்டினம்
விடை : நாகம், பட்டினம், பட்டி, நாடி.
2. கன்னியாகுமர
விடை : கன்னி, குமரி, மரி, கனி.
3. செங்கல்பட்டு
விடை : செங்கல், பட்டு, கல், கட்டு.
4. உதகமண்டலம்
விடை : கமண்டலம், மண்டலம், உலகம், உண்.
5. பட்டுக்கோட்டை
விடை : பட்டு, கோட்டை, படை, கோடை.
நிற்க அதற்குத் தக…
என் பொறுப்புகள் ….
1. நகரங்களின் சிறப்புத் தன்மையை அறிந்து போற்றுவேன்.
2. ஒவ்வொரு ஊரிலும் நடைபெறும் தொழில்களின் சிறப்பை அறிந்து தொழில் செய்வோரை மதிப்பேன்.
கலைச்சொல் அறிவோம்
நாகரிகம் – civilization
நாட்டுப்புறவியல் – folklore
அறுவடை – harvest
நீர்ப்பாசனம் – irrigation
அயல்நாட்டினர் – foreigner
வேளாண்மை – agriculture
கவிஞர் – poet
நெற்பயிர் – paddy
பயிரிடுதல் – cultivation
உழவியல் – agronomy
இணையத்தில் காண்க
திருநெல்வேலிப் பகுதியில் வழங்கி வரும் நாட்டுப்புறப் பாடல்களில் – தொழில், வணிகம் சார்ந்த பாடல்களை இணையத்தில் தேடி எழுதி வருக