Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 1 5

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 1 5

தமிழ் : பருவம் 1 இயல் 5 : மாணவர்கள் நினைத்தால்…

5. மாணவர்கள் நினைத்தால்…

சிறுமி மேரி மகிழ்வோடு துள்ளிக் குதித்து ஓடிவந்தாள், தனது தோழி மகிழினியைப் பார்க்க… அவளிடம், “இன்று காலை எங்கள் வீட்டுப்பசு கன்று ஈன்றுள்ளது, இனி நான் எங்கள் வீட்டுக் கன்றுக்குட்டியுடன் விளையாடுவேன்” என்றாள். அதைக்கேட்ட மகிழினி, “என்னையும் விளையாட்டில் சேர்த்துக் கொள்” என்றாள்.

அப்போது மேரியின் வீட்டு மாட்டுத் தொழுவத்தில் ஒரே கும்பல்…ஓடிச்சென்று பார்த்தனர் அவர்கள் கண்ட காட்சி கல்நெஞ்சையும் கசிந்துருகச் செய்வதாக இருந்தது….. கன்றை ஈன்ற பசு தனது கழிவினை வெளியே தள்ள முடியாமல் இறந்துபோயிருந்தது. பாதி வெளிவந்திருந்த கழிவில் நிறைய நெகிழிக் குப்பைகள் காணப்பட்டன. அந்நெகிழியால் தான் இறப்பு ஏற்பட்டதாகக் கால்நடை மருத்துவர் கூறிக் கொண்டிருந்தார்.

வேதனையுடன் பள்ளிக்குச் சென்றனர் மேரியும் மகிழினியும். சோகமாக அமர்ந்திருந்த இருவரையும் அழைத்துக் காரணம் கேட்டார் வகுப்பு ஆசிரியர். பிறகு, “நெகிழிகளைப் பயன்படுத்துவதால் பல தீமைகள் ஏற்படுகின்றன. மட்காத இந்தக் குப்பைகளால் சாக்கடைகளில் நீர்தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, ஈ மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவுகிறது. நெகிழிக் குப்பைகளை எரிப்பதால் ஓசோன் படலம் பாதிப்படைகிறது. இதனால் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் நேரடியாக நம்மைத் தாக்குகிறது. இதனால் தோல் நோய்கள் ஏற்படுகின்றன”, என்று விளக்கினார். இதுபற்றிப் பேசிக்கொண்டிருப்பதை விட்டு விட்டுச் செயலில் இறங்குவோம் என்றார். பள்ளியின் நலன் காக்கும் பள்ளி மேலாண்மைக் குழுவினைக் கூட்டி, நெகிழி பற்றிய தீமைகளை எடுத்துரைத்தார்.

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், ஊர்ப் பொதுமக்கள் ஆகியோரைக் கொண்டு நெகிழி விழிப்புணர்வு பேரணி நடத்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமக்கு அறிமுகமான செய்திகளையும் விவரங்களையும் சரியான ஒலிப்புடனும் தங்கு தடையின்றியும் படித்தல், விவரித்தல்

அனைவரும் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி வாசகங்களைக் கூறிக் கொண்டே கிராமத்தின் அனைத்துத் தெருக்களிலும் பேரணியாக வந்தனர்.

இம்மாதிரியான விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்களைப் பொதுமக்களிடம் கொடுத்து நெகிழியின் தீமைகளை எடுத்துக் கூறினர். மேலும் ஒவ்வொரு மாணவனும் பயன்படுத்தப்பட்ட காகிதங்களைக் கொண்டு பைகள் செய்து வைத்திருந்தனர் . அதனை அவ்வூரின் அனைத்துக் கடைகளிலும் கொடுத்து அந்தப் பைகளைப் பயன்படுத்தச் சொல்லி நெகிழியின் தீமைகளை எடுத்துக் கூறினர். உள்ளூர் மக்களிடம் இனி கடைகளில் பொருட்கள் வாங்கும்போது துணிப்பைகளைக் கொண்டு செல்ல அறிவுறுத்தினர்.

எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்ற ஆன்றோரின் வாக்கிற்கு ஏற்ப இச்சிறு பிள்ளைகளின் முயற்சியால் அந்த ஊர் நெகிழியற்ற ஊராக மாறி வருகிறது ……..

ஒருமை, பன்மை அறிவோமா?

ஒரு பொருளை மட்டும் குறிப்பது ஒருமை. 

ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்களைக் குறிப்பது பன்மை.

ஒருமைச் சொல்லுக்கு உரிய பன்மைச் சொல்லை எழுதுவோம் 

பந்து – பந்துகள்

ஆமை  – ஆமைகள் 

முயல்  – முயல்கள் 

பூனை  – பூனைகள் 

பூ – பூக்கள் 

விழா – விழாக்கள் 

பசு  – பசுக்கள் 

வினா – வினாக்கள் 

படம் – படங்கள்

மரம் – மரங்கள் 

சிங்கம் – சிங்கங்கள் 

காகம் – காகங்கள் 

முள் – முட்கள் 

தாள் – தாள்கள் 

ஆள் – ஆட்கள் 

பொருள் – பொருள்கள் 

பல் – பற்கள்

கல் – கற்கள்

சொல் – சொற்கள்

புல் – புற்கள்

பயிற்சி

வாங்க பேசலாம்

1. நெகிழியினால் ஏற்படும் தீமைகள் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக. 

2. நெகிழியை அவசியம் பயன்படுத்த வேண்டும் என்ற இடங்களாக எவற்றைக் கருதுகிறாய்? அவ்விடங்களில் நெகிழிக்குப் பதிலாக வேறு என்ன பொருள்களைப் பயன்படுத்தலாம் என வகுப்பறையில் கலந்துரையாடுக.

சரவணன் : நெகிழியினால் சுற்றுப்புறச்சூழல் பாதிப்பாகிறது. தெரியுமா? 

அருண் : என்னென்ன பாதிப்புகள் சொல்லேன்?

சரவணன் : கால்வாய்களை அடைத்து நீர் செல்லவிடாமல், நிலத்தில்        மட்காமல் தங்கி நீர் பூமியினுள் செல்ல முடியாமலும் சுற்றுப்புறம் பாதிப்படைகிறது. தேநீர், சாக்லேட், பால்கோவாவில் சுற்றப்பட்ட நெகிழி உறைகளால் புற்றுநோய் ஏற்படும்  என  ஆய்வுகள்  கூறுகின்றன.

காயத்ரி : நெகிழிக் குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன் டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றவும்  காரணமாக அமைகிறது. 

மகேஷ் : நெகிழிப் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் வாயுக்களால் மூச்சுக்குழல் பாதிப்பு, குடல்புண், செரிமானமின்மை  போன்ற  நோய்கள்  உருவாகிறது.

சங்கரி : பால், தண்ணீர்க்  குடம், மாத்திரை  உறைகள்,  குழாய், பேனா  போன்றவை  செய்ய  நெகிழி  தேவை  தானே? 

விக்னேஷ் : பாலை பாத்திரத்தில் வாங்கலாம். தண்ணீரை அலுமினிய பாத்திரத்தில் பிடிக்கலாம். மாத்திரை உறைகளை காற்றுபுகா காகித, சணல் அட்டைகளில்  தரலாம்.

வண்ணமுத்து : நெகிழிப் பொருட்களில் 10% மட்டுமே மீண்டும் பயன்படுத்தக்  கூடியவை.  80% மறுசுழற்சி  செய்ய முடியாதவை.

சுப்பிரமணி : ஆறுகள்  நெகிழியைக் கடலில் கொண்டுவந்து சேர்ப்பதால் பல லட்சம் கடல் வாழ் உயிரினங்களும் பல லட்சம் பறவைகளும் இறக்கின்றன.

தர்மன் : நெகிழியை எரிப்பதால் டையாக்சின் வாயு வெளிப்பட்டு   புற்றுநோய்  உருவாகிறது.

கார்த்திகேயன் : 

பிளாஸ்டிக்கே  (நெகிழியே)

நீரை விழுங்கினாய்   

நிலத்தை விழுங்கினாய் 

உயிர்களை விழுங்கும் முன் 

உனக்கு

விடை கொடுக்கிறோம். 

பாபு : பிளாஸ்டிக் பையில்  டீ வாங்காதே! 

பித்தப்  பையில் கான்சர் வாங்காதே!!

மெர்வின் : பிளாஸ்டிக் தம்ளரில் தண்ணீரு!

பூமித்தாய்க்கோ  கண்ணீரு!!

படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. முயற்சி இச்சொல்லின் பொருள் _____________.

அ) ஆக்கம்                                              

ஆ) இடைவிடாத உழைப்பு

இ) இயக்கம்                                                 

ஈ) பக்கம் 

விடை : ஆ) இடைவிடாத உழைப்பு

2. ஆன்றோர் இச்சொல்லின் பொருள் ________________.

அ) பெற்றோர்                           

ஆ) உற்றோர் 

இ) சுற்றோர்                            

ஈ) பெரியோர்

விடை : ஈ) பெரியோர் 

3. வைத்திருந்தனர் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________________.

அ) வைத்து + யிருந்தனர்                  

ஆ) வைத் + இருந்தனர்

இ) வைத்து + இருந்தனர்                                          

ஈ) வைத் + திருந்தனர்

விடை : இ) வைத்து + இருந்தனர்

4. வீதியெங்கும் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________.

அ) வீதி + எங்கும்               

ஆ) வீதி + யெங்கும்   

இ) வீதியெ + ங்கும்                                   

ஈ) வீதி + அங்கும்

விடை : அ) வீதி + எங்கும்

5. நெகிழி + அற்ற என்பதைச்  சேர்த்து  எழுதக்  கிடைக்கும் சொல் _________.

அ) நெகிழிஅற்ற                                                                 

ஆ) நெகிழியற்ற

இ) நெகிழ்அற்ற                             

ஈ) நெகிழ்யற்ற

விடை : ஆ) நெகிழியற்ற

6. பாதிப்பு + அடைகிறது என்பதைச் சேர்த்து  எழுதக் கிடைக்கும் சொல் ____________.

அ) பாதிப்அடைகிறது                  

ஆ) பாதிப்புஅடைகிறது  

இ) பாதிப்படைகிறது                                                  

ஈ) பாதிபடைகிறது

விடை : இ) பாதிப்படைகிறது

வினாக்களுக்கு  விடையளி

1. மேரி  இனி  யாருடன்  வியைாடப்  போவதாகக்  கூறினாள்?

மேரி  இனி அவள் வீட்டுக் கன்றுக்குட்டியுடன்  விளையாடப்  போவதாகக்  கூறினாள்.

2. பசு எதனால் இறந்தது?

பசு நெகிழியை  உட்கொண்டதால்  இறந்தது.

3. நெகிழியினால் ஏற்படும் தீமைகள்  இரண்டினை எழுதுக. 

* மட்காத இந்த நெகிழிக் குப்பைகளால் சாக்கடைகளில் நீர்தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, ஈ மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவுகிறது. 

* நெகிழிக் குப்பைகளை எரிப்பதால் ஓசோன் படலம் பாதிப்படைகிறது. இதனால் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் நேரடியாக நம்மைத்  தாக்குகிறது.  இதனால்  தோல்  நோய்கள்  ஏற்படுகின்றன. 

4. நெகிழி விழிப்புணர்வு வாசகம் ஒன்றினை உருவாக்குக.

 நெகிழி நெகிழாது!

 நிம்மதி கிடைக்காது!!

பொருத்தமான சொல்லை எடுத்து நிரப்புக

1.  நெகிழியற்ற ________ உருவாக்குவோம். (உலகை / உளகை)

விடை : உலகை

2.  நெகிழியை ஒழிப்போம் ____________ காப்போம். (மன்வளம் / மண்வளம்) 

விடை : மண்வளம் 

3.  மேரி ________ குதித்து  ஓடிவந்தாள். (மகிள்வோடு / மகிழ்வோடு)

விடை : மகிழ்வோடு 

4. எறும்பு ________ கல்லும் தேயும். (ஊரக்/ஊறக்) 

விடை : ஊரக்  

5. துணிப்பை என்பது ___________ (எளிதானது/எலிதானது)

விடை : எளிதானது 

செயல் திட்டம்

மட்கும் பொருள்களைக் கொண்டு பைகள், கூடைகள் போன்றவற்றினை உமது பெற்றோர்  உதவியுடன்  செய்து  வருக.

(மாணவர் செயல்பாடு)

இணைந்து செய்வோம்

சொற்களை இனம்கண்டு அதற்குரிய பெட்டிக்குக் கீழே எழுதுக.

கண்ணாடித்துண்டு, நெகிழிப்பை, காகிதத்தாள், சணல்பை, பீங்கான் தட்டு,  இலை.

1. காகிதத்தாள்  

2. சணல்பை                                                   

3. இலை                                                            

1. நெகிழிப்பை

2. கண்ணாடித்துண்டு

3. பீங்கான் தட்டு

ஒருமை, பன்மை அறிவோமா?

ஒரு பொருளை மட்டும் குறிப்பது ஒருமை, ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்களைக் குறிப்பது பன்மை.

ஒருமைச் சொல்லுக்கு உரிய பன்மைச் சொல்லை எழுதுவோம்.

பந்து – பந்துகள் 

ஆமை  – ஆமைகள் 

முயல்  – முயல்கள் 

பூனை  – பூனைகள் 

பூ – பூக்கள் 

விழா – விழாக்கள் 

பசு  – பசுக்கள் 

வினா – வினாக்கள் 

படம் – படங்கள் 

மரம் – மரங்கள் 

சிங்கம் – சிங்கங்கள் 

காகம் – காகங்கள் 

பல் – பற்கள்

கல் – கற்கள்

சொல் – சொற்கள்

புல் – புற்கள்

முள் – முட்கள் 

தாள் – தாள்கள் 

ஆள் – ஆட்கள் 

பொருள் – பொருள்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *