Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 2 7

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 2 7

தமிழ் : பருவம் 2 இயல் 7 : நாயும், ஓநாயும்

7. நாயும், ஓநாயும்

பசியால் வாடி மெலிந்த ஓநாய், தின்பதற்கு ஏதாவது அகப்படுமா? என்று தேடிக் காடு முழுவதும் சுற்றித் திரிந்தது. அப்போது கொழுகொழு என்றிருந்த ஒரு நாய், மகிழ்ச்சியுடன் எதிரே ஓடி வருவதைப் பார்த்தது.

அந்த நாயைத் தின்று விடலாமா என்று ஓநாய் நினைத்தது. ஆனால், தான் அப்போது இருந்த சோர்வான நிலையில் அந்த நாயுடன் சண்டை போட்டுத் தோற்கடிக்க முடியுமா? என்பது சந்தேகமாய் இருந்தது. அதனால் அதனுடன் நட்பாய்ப் பேச ஆரம்பித்தது.

ஓநாய்: நண்பா , நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்!

நாய்: நண்பனே, மிக்க மகிழ்ச்சி. நான் சொல்கிறபடி செய்தால் நீயும் என்னைப்போலக் கொழுகொழு என்று அழகாய் இருக்கலாம். நீ இந்தக் காட்டில் இருந்து பசியும் பட்டினியுமாக ஏன் துன்பப்படுகிறாய், என்னுடன் வெளியே வந்து விடு நல்ல உணவு கிடைக்கும். 

ஓநாய்: அப்படியானால், நான் என்ன வேலை செய்ய வேண்டும்?

நாய்: வேலையாவது கீலையாவது. ஒன்றுமே கிடையாது. வீட்டுக்கு வருகிற அறிமுகம் இல்லாத புதியவர்களை விரட்டியடிக்க வேண்டும். வீட்டுக்காரர்களைப் பார்த்தால் வாலை ஆட்ட வேண்டும். அவ்வளவுதான், அதற்குப் பதிலாக விதவிதமான உணவுகள் கிடைக்கும். நமது தலையை வீட்டுக்காரர்கள் அன்பாக வருடிக் கொடுப்பார்கள். அது, ஆகா! என்ன சுகம் தெரியுமா?

ஓநாய்: ஓ! அப்படியா! அவ்வளவு சுகமான வாழ்க்கையா! தயவு செய்து என்னையும் அழைத்துச் செல், நண்பா.

நாய்: வா நண்பா! என்னுடன் உன்னை அழைத்துச் செல்கிறேன். இன்றிலிருந்து உனக்கு நல்லகாலம்தான்.

ஓநாய்: இதோ, இப்போதே புறப்படுகிறேன். அது சரி, அது என்ன உன் கழுத்தில் ஒரு கருப்புப் பட்டை தொங்குகிறதே!

நாய்: அது ஒன்றுமில்லை, வா. 

ஓநாய்: ஒன்றுமில்லை என்றால், கழுத்தில் எப்படி பட்டை வந்தது?

நாய்: என்னைச் சங்கிலியால் கட்டிப் போடுவதற்கு வசதியாகக் கழுத்தில் போடப்பட்ட பட்டை. அவ்வளவுதான்! 

ஓநாய்: என்ன, கட்டிப் போடுகிறார்களா! அப்படியானால், உன் விருப்பப்படி எப்பொழுது வேண்டுமானாலும் வெளியே போக முடியாதா?

நாய்: ஊ… கும், எப்பொழுதும் நம் விருப்பம்போல போக முடியாது. அதிலென்ன பிரமாதம்?

ஓநாய்: என்ன பிரமாதமா? அதுதான் எனக்குப் பெரிய காரியம். எப்படிப்பட்ட வாழ்க்கையாய் இருந்தாலும் சரி, என் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன். வீட்டில் மாட்டிக் கொண்டு விதவிதமான உணவுகளைச் சாப்பிடுவதைவிடச் சுதந்திரமாகக் காட்டில் அலைவதே மேல், நான் போகிறேன்.

திறன் : முற்றுப்புள்ளி, வினாக்குறி ஆகிய நிறுத்தக்குறியீடுகளை அறிந்து படித்தல்

உன்னை அறிந்துகொள்

நாம் பொருள் உணர்ந்து படிப்பதற்கு நிறுத்தக்குறிகள் உதவுகின்றன.

? வினாக்குறி 

, காற்புள்ளி 

; அரைப்புள்ளி

: முக்காற்புள்ளி

. முற்றுப்புள்ளி

! வியப்புக்குறி

விளையாடலாம், வாங்க!

சொன்னால் செய்வேன்!

குழந்தைகளை வட்டமாக ஓடவிட வேண்டும். ஆசிரியர் நடுவில் நிற்க வேண்டும். ஆசிரியர் ஒரு பாடலைப் பாட வேண்டும். ஆசிரியர் பாடுவதை நிறுத்தியவுடன் எல்லாக் குழந்தைகளும் அப்படியே நிற்க வேண்டும். உடனே ஆசிரியர் ஒரு விலங்கின் பெயரைச் சொல்ல, அந்த விலங்கு போல ஒலி எழுப்ப வேண்டும். எ.கா. பசு – என மா, மா என ஒலி எழுப்புதல், இவ்வாறு வேறு வேறு விலங்குகள் பெயர் சொல்லலாம். இவ்விளையாட்டில் அனைத்துக் குழந்தைகளையும் பங்கேற்கச் செய்தல் வேண்டும்..

பயிற்சி

வாங்க பேசலாம்

* ஓநாயும், நாயும் கதையை உம் சொந்த நடையில் கூறுக.

பசியால் வாடி மெலிந்த ஓநாய், தின்பதற்கு ஏதாவது கிடைக்குமா எனக் காடு  முழுவதும் சுற்றித் திரிந்தது. அப்போது கொழுகொழு என்றிருந்த ஒரு நாய் மகிழ்வுடன்  ஓடி வந்தது. நாயைத் தின்றுவிடலாம் என்று எண்ணிய ஓநாய்க்கு சோர்வு நிலையால் அதனோடு நட்பாகப் பேச ஆரம்பித்தது.

இருவரும் பேசிய பொழுது  ஓநாயைத் தன்னுடன்  வந்துவிடுமாறு நாய் கூறியது. ஆனால் வேலை செய்ய வேண்டுமோ என ஐயத்துடன் கேட்டது ஓநாய். வேலை செய்யத் தேவையில்லை. ஆனால் வீட்டுக்கு வருகின்ற அறிமுகமில்லாதவரை விரட்டிவிட்டால் போதும் நாயின் கழுத்தில் உள்ள கருப்புப் பட்டையைப் பார்த்து உன்னைக் கட்டிப் போடுவார்களோ என்று கேட்டது ஓநாய். ஆம் என்று நாய் கூறியதும், நம்மால் கட்டி ஒரே இடத்தில் இருக்க முடியாது. சுதந்திரமாக காட்டில் அலைவதே எனக்கு மகிழ்ச்சி என்று ஓநாய் கூறி அங்கிருந்து சென்றுவிட்டது.

* முகமூடி  அணிந்து  நடித்துக்  காட்டுக.

மாணவர் செயல்பாடு

படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. மகிழ்ச்சி – இச்சொல் உணர்த்தும் பொருள் __________.

அ) இன்பம்            

ஆ) துன்பம்             

இ) வருத்தம்        

ஈ) அன்பு

விடை : அ) இன்பம் 

2.  ஒன்றுமில்லை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.

அ) ஒன்று + இல்லை         

ஆ) ஒன்றும் + இல்லை 

இ) ஒன்றுமே + இல்லை       

ஈ) ஒன்று + மில்லை

விடை : ஆ) ஒன்றும் + இல்லை

3. அப்படி + ஆனால் – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ______.

அ) அப்படியானால்                         

ஆ) அப்படியனால்

இ) அப்படியினால்                           

ஈ) அப்படி ஆனால்

விடை : அ) அப்படியானால் 

4. விருப்பு என்ற சொல்லின் எதிர்ச்சொல் __________.

அ) வெறுப்பு        

ஆ) கருப்பு              

இ) சிரிப்பு               

ஈ) நடிப்பு

விடை : அ) வெறுப்பு

வினாக்களுக்கு விடையளி

1. பசியால் மெலிந்த ஓநாய் எங்குச் சுற்றித் திரிந்தது?

பசியால் மெலிந்த ஓநாய் காடு முழுவதும் சுற்றித் திரிந்தது.

2. நாய், ஓநாயை எங்கு வரச் சொன்னது?

நாய், ஓநாயை தன்னுடன் தன் முதலாளியின் வீட்டிற்கு வரச்சொன்னது.

3. நாயின் கழுத்தில் என்ன இருந்தது?

நாயின் கழுத்தில் கட்டிப் போடுவதற்கான கருப்பு நிறப் பட்டை இருந்தது.

அகர முதலியைப் பார்த்துப் பொருள் எழுதுக

1. விதவிதமான – வகைவகையான

2. சுதந்திரம் – விடுதலை                     

3. வருடுதல் – தடவுதல்

4. பிரமாதம் – மிகச்சிறப்பு   

5. சந்தேகம் – ஐயம்             

சரியான தொடரை ✓ எனவும் தவறான தொடரை X எனவும் குறியிடுக

1. ஓநாய் தின்பதற்கு எதுவும் கிடைக்காமல் மெலிந்திருந்தது.  ()

2. நாய் புதியவர்களைக் கண்டால் விரட்டியடிக்காது.  (X)

3. ஓநாயின் கழுத்தில் கருப்புப் பட்டை இருந்தது.  (X)                         

4. ஓநாய் சுதந்திரமாக வாழ ஆசைப்படவில்லை(X)                         

5. ஓநாயை நாய் வீட்டிற்கு அழைத்தது.  ()

சரியான சொல்லால் நிரப்புக

1. நீ எவ்வளவு ________ இருக்கிறாய்?

விடை : அழகாக

2. நாயின் கழுத்தில் ________ இருந்தது.

விடை : கருப்புப்பட்டை

3. வீட்டுக்காரர்கள் நாயை ________ வருடிக்கொடுப்பார்கள் 

விடை : அன்பாக

4. வீட்டில் மாட்டிக் கொள்வதைவிட ________ காட்டில் அலைவதே மேல்.

விடை : சுதந்திரமாகக்

5. என்னைத் தயவுசெய்து அழைத்துச் செல் என்று ________ கூறியது.
விடை : ஓநாய்

சொல்லக்கேட்டு எழுதுவோம்

1. நல்ல உணவு கிடைக்கும் 2. கழுத்தில் பட்டை எப்படி வந்தது? 3. நாய் மகிழ்ச்சியாய் ஓடிவந்தது. 4. ஆகா! என்ன சுகம் தெரியுமா!

சொற்களை இணைத்து எழுதுவோம்

1. நல்ல புத்தகம்         

2. நல்ல எண்ணம்       

3. நல்ல உணவு   

1. மெலிந்த ஓநாய்

2. மெலிந்த உடல்

3. மெலிந்த சிறுவன்

உன்னை அறிந்துகொள்

நாம் பொருள் உணர்ந்து படிப்பதற்கு நிறுத்தக்குறிகள் உதவுகின்றன. 

? வினாக்குறி 

, காற்புள்ளி 

; அரைப்புள்ளி

: முக்காற்புள்ளி

. முற்றுப்புள்ளி

! வியப்புக்குறி

சொல் விளையாட்டு

சொற்களை முறைப்படுத்திச் சரியான தொடரை உருவாக்குக

எ.கா.  சுதந்திரத்தை கொடுக்க என் மாட்டேன் விட்டு

என் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன்

1.  கொழு, கொழு அழகையும் புகழ்ந்தது நாயின் உடம்பயும்.

விடை : நாயின் கொழு கொழு உடம்பையும் அழகையும் புகழ்ந்தது. 

2. பார்த்தால் வீட்டுக்காரர்களைப் ஆட்ட வாலை வேண்டும். 

விடை : வீட்டுக்காரர்களைப் பார்த்தால் வாலை ஆட்ட வேண்டும்

பொருத்தமான நிறுத்தக் குறியிடுக

எ.கா. நான் என்ன வேலை செய்ய வேண்டும்

நான் என்ன வேலை செய்ய வேண்டும்? 

1. ஆகா என்ன சுகம் தெரியுமா

விடை : ஆகா! என்ன சுகம் தெரியுமா? 

2. ஒன்றுமில்லை என்றால் கழுத்தில் எப்படி பட்டை ஏற்பட்டது.

விடை : ஒன்றுமில்லை என்றால், கழுத்தில் எப்படி பட்டை ஏற்பட்டது? 

3. என்ன கட்டிப் போடுகிறார்களா

விடை : என்ன, கட்டிப் போடுகிறார்களா! 

4. நம் விருப்பம் போல போக முடியாது அது என்ன பிரமாதம்

விடை : நம் விருப்பம் போல் போக முடியாது. அது என்ன பிரமாதம்? 

5. நல்ல உணவு உனக்கும் கிடைக்கும் என்று சொன்னது

விடை : “நல்ல உணவு உனக்கு கிடைக்கும்” என்று சொன்னது.

விளையாடலாம், வாங்க!

சொன்னால் செய்வேன்!

குழந்தைகளை வட்டமாக ஓடவிட வேண்டும். ஆசிரியர் நடுவில் நிற்க வேண்டும். ஆசிரியர் ஒரு பாடலைப் பாட வேண்டும். ஆசிரியர் பாடுவதை நிறுத்தியவுடன் எல்லாக் குழந்தைகளும் அப்படியே நிற்க வேண்டும். உடனே ஆசிரியர் ஒரு விலங்கின் பெயரைச் சொல்ல, அந்த விலங்கு போல ஒலி எழுப்ப வேண்டும். எ.கா. பசு – என மா, மா என ஒலி எழுப்புதல், இவ்வாறு வேறு வேறு விலங்குகள் பெயர் சொல்லலாம். இவ்விளையாட்டில் அனைத்துக் குழந்தைகளையும் பங்கேற்கச் செய்தல் வேண்டும்..

சூழலுக்கேற்ற உணர்வைத் தெரிவு செய்க

(சிரிப்பு, மகிழ்ச்சி, வருத்தம், வியப்பு, அச்சம்)

1. பாட்டி புத்தாடை வாங்கித் தரும்போது ஏற்படுவது   

விடை : மகிழ்ச்சி      

2. மிகப்பெரிய யானையைப் பார்க்கும்போது 

விடை : வியப்பு                                   

3. கோமாளி செய்யும் செயல்களைக் காணும்போது                      

விடை : சிரிப்பு

4. நம்முடைய நண்பர் கீழே விழுவதைக் காணும்போது      

விடை : வருத்தம் 

5. திடீரென எதிரில் பாம்பைக் காணும்போது             

விடை : அச்சம்

சிந்திக்கலாமா

எந்தக் கிளி மகிழ்ச்சியாக இருக்கும்? ஏன்?

மரக்கிளையில் உள்ள கிளி மகிழ்ச்சியாக இருக்கும். ஏனெனில், சுதந்திரமாக உற்சாகமாக  இருக்கிறது.

செயல்திட்டம்

பல்வேறு விலங்குகள், பறவைகள் படங்களைத் திரட்டுக. அவற்றைத் தொகுப்பேட்டில் ஒட்டி, அவை எழுப்பும் ஒலிகளின் பெயர்களை எழுதி வருக.

 சிங்கம் கர்ஜிக்கும் / முழங்கும்    

 குரங்கு அலப்பும்                      

 குயில் கூவும்                           

 குதிரை கனைக்கும்                     

பசு கதறும்                      

ஆந்தை அலறும்            

காகம் கரையும்   

நரி ஊளையிடும்

 புலி உறுமும்        

கோழி கொக்கரிக்கும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *