Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 3 7

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 3 7

தமிழ் : பருவம் 3 இயல் 7 : தமிழ் மொழியின் பெருமை

7. தமிழ் மொழியின் பெருமை

உலகில் உள்ள மொழிகளுள் மிகவும் தொன்மை வாய்ந்தது தமிழ்மொழி. ‘அமிழ்தினும் இனிய மொழியாக’ நம் தமிழ்மொழி விளங்குகிறது. தமிழ், தமிழ் என்று சொல்லிப் பாருங்கள். உங்கள் காதில் ‘அமிழ்து, அமிழ்து’ எனத் தேனாய்ப் பாய்வதை உணர்வீர்கள். அதனால்தான், பாரதியாரும்,

‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் 

தேன் வந்து பாயுது காதினிலே 

என்று பாடியுள்ளார். மேலும்,

‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்’ 

எனத் தமிழைப் போற்றிப் புகழ்கிறார்.

‘தமிழுக்கு அமுதென்று பேர் – இன்பத்

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’

எனப் பாரதிதாசனாரும் தமிழின் பெருமையைக் கூறுகிறார்.

இயல், இசை, நாடகம் என்னும் மூன்றும் இணைந்தது, முத்தமிழ். இம்மூன்று துறைகளின் கீழ் தமிழ்மொழியின் வெளிப்பாட்டைக் காணலாம்.

எழுத்து நடை வாயிலாக வெளிப்படுவது, இயல் 

பாடல்கள் மூலம் வெளிப்படுவது, இசை 

அங்க அசைவுகளுடன் வெளிப்படுவது, நாடகம்

பழங்காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள், அணிகலன்கள், பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆடைகள் ஆகியவற்றை அறிந்துகொள்ள அகழாய்வுகள் உதவுகின்றன. அண்மையில் சிவகங்கை மாவட்டத்தில் ‘கீழடி’ என்னுமிடத்தில் நடைபெற்ற அகழாய்வில் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழ்மொழி ‘ஆதித் தமிழர் மொழி’ என்பது புலப்படுகிறது.

கணியன் பூங்குன்றனார் எழுதிய ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்னும் புறநானூற்றுப்பாடல் தொடர் இன்றளவிலும் ஐக்கிய நாடுகள் அவையில் தமிழ்மொழியின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

நடுவண் அரசு 12.10.2004 ஆம் ஆண்டு தமிழ்மொழியானது, பிறமொழிகளின் துணையின்றித் தனித்து இயங்கும் திறனுள்ள ‘செம்மொழி’ என அறிவித்துள்ளது. இது தமிழ்மொழிக்கு வளமை சேர்ப்பதாக உள்ளது.

தமிழர்களின் வீர விளையாட்டுகளை விளக்கும் பாறை ஓவியங்கள், கல்வெட்டுகளில் காணப்படும் அரசர்களின் கொடை பற்றிய செய்திகள், இலக்கியங்கள் குறிப்பிடும் பண்பாட்டுக் கூறுகள் போன்ற யாவும் தமிழர்களின் வீரம், கொடை, பண்பாடு, விருந்தோம்பல் முதலான பண்புகளைத் தெளிவாக விளக்குகின்றன.

‘தமிழன் என்று சொல்லடா 

தலை நிமிர்ந்து நில்லடா’ 

என்னும் பாடல் வரிகள், தமிழர்களின் பெருமையைக் கூறுகின்றன. தமிழர்களின் எழுத்து, சொல், உணர்வு, ஒழுக்கம், வாழ்வு, பண்பாடு ஆகியவற்றைத் தமிழின் தொன்மை இலக்கணநூலான தொல்காப்பியம் எடுத்துக் கூறுகிறது. உலக மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் சிறப்புப் பெற்று விளங்கும் நூல், திருக்குறள். ‘உலகப் பொதுமறை’ என்று அழைக்கப்படும் இந்நூலில், தமிழரின் வாழ்வியல் நெறிகள் காணப்படுகின்றன.

தமிழ்மொழியின் சிறப்பை உணர்ந்த அயல்நாட்டார் பலரும் தமிழைக் கற்றுக் கொண்டதோடு, தமிழில் பல இலக்கண, இலக்கியங்களையும் படைத்துள்ளனர். திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்தவர், ஜி. யு. போப். இவர், ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிபெயர்த்துள்ளார். தம்மைத் ‘தமிழ் மாணவன்’ என்றே உலகோர் அறியச்செய்தார்.

நம் தாய்மொழியான தமிழ், ஈராயிரம் ஆண்டுக்குமேல் பேச்சிலும் எழுத்திலும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. நாளும் பொலிவுடன் வளர்தமிழாய் தன் பெருமையை உலக அரங்கில் நிலைநிறுத்தி வருகிறது. ஆகவே, இன்னும் எத்தனையோ ஆண்டுகள் பிறரை வாழ வைக்கவும், வழிநடத்தவும் திறமையுள்ள மொழியாக விளங்கும் நம் தமிழ்மொழியை உலகில் உள்ளோர் பாராட்டும் வகையில் மென்மேலும் உயர்த்த உறுதுணையாக இருப்போம்.

பயிற்சி

வாங்க பேசலாம்

தமிழின் இனிமையைப் பாரதியார் எப்படியெல்லாம் புகழ்கிறார்? கலந்துரையாடுக.

“செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் 

தேன் வந்து பாயுது காதினிலே” என்றும், மேலும் 

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்” 

என்று தமிழைப் போற்றிப் புகழ்கிறார் பாரதியார்.

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. தமிழுக்கு அமுது என்று பேர் என்று பாடியவர்_________.

அ) பாரதியார்                           

ஆ) கண்ணதாசன் 

இ) கவிமணி                            

ஈ) பாரதிதாசன் 

விடை : ஈ) பாரதிதாசன்

2. ‘செம்மை + மொழி’ இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ______________.

அ) செம்மொழி                       

ஆ) செம்மொலி

இ) செம்மொளி                        

ஈ) செமொழி

விடை : அ) செம்மொழி

3. ‘கீழடி’ அகழாய்வு நடந்த மாவட்டம் ______________. 

அ) புதுக்கோட்டை

ஆ) தருமபுரி

இ) சிவகங்கை                         

ஈ) திருச்சி

விடை : இ) சிவகங்கை

4. ‘ஆதித்தமிழர்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________.

அ) ஆதி + தமிழர்                

ஆ) ஆதி + தமிளர்

இ) அதி + தமிழர்                  

ஈ) ஆதி + தமிழர்

விடை : அ) ஆதி + தமிழர்

5. பொலிவு  –  இச்சொல்லுக்குரிய பொருள்__________. 

அ) மெலிவு                         

ஆ) அழகு

இ) துணிவு

ஈ) சிறப்பு

விடை : ஆ) அழகு

கீழ்க்காணும் சொற்றொடர்களைப் படித்துச் சரி ✓ தவறு X  எனக் குறியிடுக.

1. இயல், இசை, நாடகம் ஆகியன தமிழின் பெருமையை வெளிப்படுத்தின. ( )

2. தமிழ்மொழி ஆதித்தமிழர் மொழி’ இல்லை. ( X )

3. ‘வீரம்’ தமிழரின் பண்புகளுள் ஒன்று.   ( )

4. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் தொடர் ஆத்திசூடியில்    உள்ளது. ( X )

5. சிவகங்கையிலுள்ள கீழடியில் அகழாய்வு நடைபெறவில்லை. ( X )

அகர முதலியைப் பார்த்துப் பொருள் எழுதுக.

தொன்மை – பழமை 

அகழாய்வு நிலத்தைத் தோண்டி ஆராய்தல்

ஆபரணம் அணிகலன்

கேளிர் – உறவினர்

பொலிவு – அழகு

மொழியோடு விளையாடு.

சரியான எழுத்தைத் தேர்ந்தெடுத்துச் சொல்லை முழுமையடையச் செய்க.

வினாக்களுக்கு விடையளிக்க.

1. தமிழ்மொழியின் பெருமைகளுள் இரண்டு எழுதுக.

* உலகில் உள்ள மொழிகளுள் மிகவும் தொன்மை வாய்ந்தது தமிழ் மொழி.

* இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழாய் விளங்கி மனித வாழ்விற்கு இலக்கணம்  கண்ட மொழி.

2. ‘கீழடி’ அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் யாவை?

பழங்காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள், அணிகலன்கள், நமது பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆடைகள் ஆகியவை ‘கீழடி’  அகழாய்வில்  கண்டுபிடிக்கப்பட்ட  பொருள்கள்  ஆகும்.

3. தமிழரின் பெருமையைக் கணியன் பூங்குன்றனார் எவ்வாறு வெளிப்படுத்துகிறார்?

கணியன் பூங்குன்றனார் எழுதிய ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்னும் புறநானூற்றுப் பாடல் தொடர் இன்றளவிலும் ஐக்கிய நாடுகள் அவையில் தமிழ்மொழியின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் வகையில்  அமைந்துள்ளது.

4. தமிழ்மொழி ‘செம்மொழி’ என்று ஏன் அழைக்கப்படுகிறது?           

தமிழ்மொழியானது பிறமொழிகளின் துணையின்றித் தனித்து இயங்கும் திறனுள்ளதால் செம்மொழி என அழைக்கப்படுகிறது.

5. தமிழ்மொழி பற்றி நீவிர் அறிந்த கருத்தை எழுதுக.

• நம் தாய்மொழியான தமிழ், ஈராயிரம் ஆண்டுக்குமேல் பேச்சிலும் எழுத்திலும் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

• நாளும் பொலிவுடன் வளர்தமிழாய் தன் பெருமையை உலக அரங்கில்  நிலைநிறுத்தி  வருகிறது.

சொல் விளையாட்டு. 

பழத்திற்குள் உள்ள சரியான சொல்லைத் தெரிவு செய்து, சொற்றொடர் உருவாக்குக.

1. இயல் என்பது நடை.

இயல் என்பது, எழுத்து நடை

2. பாறை ஓவியங்களில் தமிழர்களின் விளையாட்டுகள் பற்றிய செய்திகள் உள்ளன.

பாறை ஓவியங்களில் தமிழர்களின் வீரம் சார்ந்த விளையாட்டுகள் பற்றிய செய்திகள் உள்ளன. 

3. பிறமொழி உதவி இல்லாமல் தனித்து இயங்குவதால், தமிழ்மொழி ஆகும்.

பிறமொழி உதவி இல்லாமல் தனித்து இயங்குவதால், தமிழ்மொழி செம்மொழி  ஆகும்

4. நடுவண் அரசு ஆம் ஆண்டு தமிழைச் ‘செம்மொழி’ என அறிவித்தது.

நடுவண் அரசு 2004 ஆம் ஆண்டு தமிழைச் ‘செம்மொழி’ என அறிவித்தது

சிந்திக்கலாமா?

இனியன் தன் நண்பர்களிடம் பிறமொழிகள் கற்பதிலேயே, ஆர்வம் காட்டுவேன் என்று கூறுகிறான்

வீணா தன் தோழிகளிடம் பிறமொழிகளையும் கற்பேன் தமிழ்மொழிக்கு முதலிடம் தருவேன். ஏனெனில் தாய்மொழியே சிந்திக்கும் திறனை வளர்க்கும் என்கிறாள்

இனியன், வீணா இவர்களின் பேச்சிலிருந்து நீங்கள் அறிந்து கொள்வது என்ன?

இனியன் பிறமொழியில் காட்டும் ஆர்வத்தை தமிழ் மொழியில் காட்டுவதாகத் தெரியவில்லை .

வீணா பிறமொழியையும் கற்கிறாள், அதே சமயம் தமிழுக்கு முதலிடம் தருகிறாள். ஏனெனில், தாய்மொழிதான் சிந்திக்கும் திறனை வளர்க்கும்  என்பதை  வீணா அறிந்திருந்தாள்.

உன்னை அறிந்துகொள்.

‘லாங்குவேஜ்’ என்ற சொல் எவ்வாறு தோன்றியது? 

லிங்குவா என்பது இலத்தின் மொழிச்சொல் இச்சொல் மூலம் லாங்குவேஜ் என்ற சொல் தோன்றியது. இதனைத் தமிழில் நாம் ‘மொழி’ என  அழைக்கிறோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *