Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 4th Tamil Books Chapter 2 1

Samacheer Kalvi 4th Tamil Books Chapter 2 1

தமிழ் : பருவம் 2 இயல் 1 : காவல்காரர்

1. காவல்காரர்

சட்டை மேலே கோட்டு மாட்டிச்

சரிகை போட்ட வேட்டி கட்டி

நட்ட நடுவே தோட்டம் தன்னில்

ராஜா போலே நின்றி ருந்தார்

இரவும் பகலும் தூங்கி டாமல்

இங்கு மங்கும் நகர்ந்தி டாமல்

பெருமை யோடு காவல் காப்பார்

பெயரில் லாத காவல் காரர்

காக்கை குருவி அங்கே வந்தால்

காவல் காரர் நிற்கக் கண்டு

சீக்கி ரத்தில் வந்த வழியே

திரும்பி ஓடும் பயந்து கொண்டு

காற்று பலமாய் அடித்த தாலே

கனத்த மழையும் பெய்த தாலே

நேர்த்தி யான அவரின் உடைகள்

நித்தம் கிழிந்து வந்த தையோ

இதனைக் கண்ட காகம் ஒன்று

இந்தச் சமயம் இவர்க்கு நாமும்

உதவி செய்தால் பயமில் லாமல்

உலவ லாமே என்று கருதி

அருகில் உள்ள வீட்டிற் குள்ளே

யாரும் இல்லா வேளை சென்று

கறுப்புக் கோட்டு வெள்ளைச் சட்டை

கட்டிக் கொள்ள சரிகை வேட்டி

எடுத்து வந்து காவல் காரர்

இருக்கும் இடத்தில் போட்டு விட்டே

உடுத்திக் கொள்வீர் என்று சொல்லி

ஒதுங்கி நின்று பார்த்த தங்கே

காவல் காரர் பழைய உடையைக்

கழற்றிக் கீழே போட வில்லை

ஆவ லோடு புதிய உடையை

அணிய வில்லை அசைய வில்லை

உடனே காகம் அருகில் சென்றே

உற்று நன்றாய்ப் பார்த்த பின்னர்

அடடே இந்தக் காவல் காரர்

யாரோ என்று நினைத்தி ருந்தேன்

வைக்கோல் மேலே துணியைச் சுற்றி

வைத்தி ருக்கும் பொம்மை என்றே

இக் கணத்தே நண்பர் அறிய

எடுத்துச் சொல்வேன் என்று கூறி,

காவல் காக்கும் பொம்மை தலையில்

காலை வைத்து நின்று கொண்டு

கூவி அழைத்துப் பறவை யாவும்

கூடச் செய்து விட்ட தங்கே

– அழ. வள்ளியப்பா

ஓசைநயமும் கருத்தும் மிக்க பாடலைக் கேட்டுப் புரிந்துகொள்ளும் திறன்

பொருள் அறிவோம்

தோட்டத்தின் நடுவில் நின்றிருந்த சோளக்கொல்லைப் பொம்மையைக் காவல்காக்கும் உயிருள்ள மனிதர் என்று காகம் நினைக்கிறது. கனத்த மழையால் ஆடைகள் கிழிந்து நிற்கும் அந்தப் பொம்மையிடம், புதிய ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டுகிறது. ஆனால், அஃது அணிந்து கொள்ளாததால், உயிரற்ற பொருள் என்பதை உணர்ந்து கொள்கிறது. அதனால், அச்சமின்றி மற்ற பறவைகளையும் கூவி அழைக்கிறது.

நூல் குறிப்பு

‘மலரும் உள்ளம்’ என்னும் நூலின் இரண்டாம் தொகுதியில் இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலைப் பாடியவர் அழ. வள்ளியப்பா. இவர் குழந்தைகளுக்கான கதைகளையும் பாடல்களையும் மிகுதியாகப் பாடியுள்ளமையால், குழந்தைக்கவிஞர் என அழைக்கப்படுகிறார்.

வாங்க பேசலாம்

● கதைப்பாடலை ஓசைநயத்துடன் பாடி மகிழ்க.

● பாடலின் பொருளைப் புரிந்துகொண்டு பாடுக.

● பாடல் பொருளை உமது சொந்த நடையில் கூறுக

விடை

தோட்டத்தின் நடுவில் மேலே கோட்டுடனும் சரிகை வேட்டியுடனும் காவல்காரர் நின்றிருந்தார். இரவும் பகலும் காவல் காத்து வந்தார். காக்கை குருவிகள் அங்குள்ள காவல்காரரைப் பார்த்து பயந்து கொண்டு திரும்பி ஓடிவிடும். ஒருமுறை பலத்த மழை பெய்தபோது காவல்காரரின் ஆடைகள் கிழிந்திருந்தது.

காவல்காரருக்கு உதவி செய்தால் தான் அச்சமின்றி உலா வரலாம் என எண்ணிய காகம் அருகில் இருந்த வீட்டிற்குச் சென்று கறுப்புக் கோட்டு, வெள்ளைச் சட்டை, கட்டிக் கொள்ள சரிகை வேட்டி எடுத்து வந்து காவல்காரரிடம் கொடுத்து உடுத்திக் கொள்ளச் சொன்னது.

காவல்காரர் புதிய ஆடையை ஆவலோடு பார்க்கவில்லை, பழைய ஆடையைக் கழற்றிப் போடவில்லை. கொஞ்சம்கூட அசையவில்லை. காகம் அருகில் சென்று உற்றுப் பார்த்தவுடன்தான் அங்கிருந்தது சோளக்கொல்லை பொம்மை என்று அப்போது தெரிந்தது. வைக்கோலினால் ஆன பொம்மை என்பதைத் தன் நண்பர்களிடம் சொல்வதாகக் கூறிப் பொம்மையின் தலையில் நின்று மற்ற பறவைகளையும் கூவி அழைக்கிறது.

சிந்திக்கலாமா!

சூழல் 1

மீனாவின் அம்மா மீனாவுக்கு மட்டுமின்றி மீனாவின் நண்பர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவிக்கிறார்.

சூழல் 2

வளவனின் அப்பா யார் எந்த உதவி கேட்டாலும் நீ செய்யக் கூடாது என்று கூறுகிறார். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

விடை

சூழல் ஒன்றுதான் போற்றத்தக்கது. மீனாவின் அம்மாவைப் போல் நாமும் அனைவரிடமும் அன்புடனும் நட்புடனும்பழகவேண்டும். அப்போதுதான் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழும் பண்பைப் பெறுவர். வளரும் குழந்தைகளுக்கு நற்பண்புகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

சூழல் இரண்டு யாரும் பின்பற்றக் கூடாத குணம். உதவி செய்து வாழ்வதைப் பற்றி முதலில் வளவனின் அப்பா அறிய வேண்டும்.

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1பெயரில்லாத இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) பெயர் + இலாத

ஆ) பெயர் + இல்லாத

இ) பெயரில் + இல்லாத

ஈ) பெயரே +இல்லாத

[விடை : ஆ) பெயர் + இல்லாத]

2. வைக்கோல் மேலே துணியைச் சுற்றி வைத்திருக்கும் பொம்மை இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் எதிர்ச்சொல்

அ) கீழே

ஆ) அருகில்

இ) தொலைவில்

ஈ) வளைவில்

[விடை : அ) கீழே]

3சோளக்கொல்லைப் பொம்மை‘ என்பது

அ) உயிருள்ள பொருள்

ஆ) உயிரற்ற பொருள்

இ) இயற்கையானது

ஈ) மனிதன் செய்ய இயலாதது

[விடை : ஆ) உயிரற்ற பொருள்]

4. அசைய+ இல்லை இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

அ) அசைய இல்லை

ஆ) அசைவில்லை

இ) அசையவில்லை

ஈ) அசையில்லை

[விடை : இ) அசையவில்லை]

5. நித்தம் – இச்சொல்லுக்குரிய பொருள்

அ) நாளும்

ஆ) இப்பொழுதும்

இ) நேற்றும்

ஈ) எப்பொழுதும்

[விடை : அ) நாளும்]

வினாக்களுக்கு விடையளிக்க

1. தோட்டத்தின் நடுவே ராஜா போல் நின்றவர் யார்?

விடை

தோட்டத்தின் நடுவே ராஜா போல் நின்றவர் சோளக்கொல்லைப் பொம்மையாகிய காவல்காரர்.

2. காவல்காரருக்குத் தோட்டத்தில் உள்ள பணி யாது?

விடை

காவல்காரருக்குத் தோட்டத்தில் உள்ள பணி, இரவும் பகலும் வயலில் நின்று காவல் காப்பதாகும்.

3. பொம்மைக்குக் கறுப்புக்கோட்டுவெள்ளைச்சட்டை கொடுத்தது யார்?

விடை

பொம்மைக்குக் கறுப்புக்கோட்டு, வெள்ளைச்சட்டை கொடுத்தது காகம்.

4. காகம் கொடுத்த ஆடைகளைக் காவல்காரர் ஏன் அணியவில்லை?

விடை

காவல்காரர் உயிரற்ற பொருள் என்பதால் காகம் கொடுத்த ஆடைகளைக் காவல்காரர் அணியவில்லை.

முதலெழுத்து ஒன்று போல் வரும் சொற்களை எழுதுக.

சட்டை  சரிகை

விடை

காக்கை காவல்

கறுப்பு கட்டி

கூவி  கூட

இரவு இங்கு

இதனை  இங்கு

வைக்கோல் வைத்திருக்கும்

பெருமை பெயரில்

உதவி உலவ

காவல் காலை

மேகங்களுக்குப் பொருத்தமான மழைத்துளிகளை இணைக்க.

இணைத்த சொற்களைக் கீழே எழுதுக.

விடை

1. சரிகை வேட்டை

2. கறுப்புக் கோட்டு

3. வெள்ளைச் சட்டை

4. சோளக் கொல்லைப் பொம்மை

5. கனத்த மழை.

பாடலைத் தொடர்ந்து பாடுவோமா?

மக்கள் ஒன்று கூடியே

மகிழ விரும்பும் திருவிழா

குழந்தைச் செல்வம் யாவுமே

கூடிஆடும் திருவிழா

குமரிப் பெண்கள் யாவரும்

கூடிமகிழும் திருவிழா

கடைத் தெருக்கள் முழுவதும்

கலைகட்டும் திருவிழா.

உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

நமக்குப் பயன்தரும் பலமரங்களுள் வாழையும் ஒன்று. வாழையின் பூ, காய், கனி, தண்டு ஆகியவற்றை நாம் சமைத்து உண்கிறோம். வாழைநாரைக் கொண்டு பூக்களைத் தொடுக்கிறோம். திருமண விழாக்களிலும் வீட்டில் நடைபெறும் விழாக்களிலும் வாழையிலையில் விருந்து படைக்கின்றனர். வாழையில் செவ்வாழை, பூவன் வாழை, மலை வாழை எனப் பலவகைகள் உள்ளன.

வினாக்கள்

1. வாழையின் எப்பகுதிகள் உணவாகப் பயன்படுகின்றன?

விடை

பூ, காய், கனி, தண்டு

2. வாழைநார் எதற்குப் பயன்படுகிறது?

விடை

வாழைநார் பூத்தொடுக்கப் பயன்படுகிறது.

3. வாழையின் வகைகளுள் இரண்டை எழுதுக.

விடை

செவ்வாழை, பூவன் வாழை

4. வாழையிலை – இச்சொல்லைப் பிரித்து எழுதுக.

விடை  : வாழை + இலை

5. பலவகை – இச்சொல்லுக்கு எதிர்ச்சொல் எழுதுக.

விடை  : சிலவகை.

செயல் திட்டம்

உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலிருந்து கீழ்க்காணும் செய்திகளைத்திரட்டுக.

1. தோட்டத்தின் பெயர்

விடை : இயற்கைத் தோட்டம்.

2. உரிமையாளர் பெயர்

விடை : முத்தையா

3. தோட்டம் அமைந்திருக்கும் ஊர்

விடை : தென்காசி

4. நீர்வசதி கிணறு அடிகுழாய் ஆறு/குளம்

விடை : கிணறு

5. தோட்டத்தில் விளையும் காய்கறி / பழம் பெயரைக் குறிப்பிடுக.

விடை :

கீரை வகைகத்தரிக்காய்வெண்டைக்காய்மாதுளம் பழம்சப்போட்டாப் பழம்.

6. தோட்டம் பற்றிய உனது கருத்து நன்றாக உள்ளது/ ஓரளவு / வளர்ச்சிதேவை

விடை : நன்றாக உள்ளது.

அறிந்து கொள்வோம்

1. தோட்டத்தில் பூச்சித் தாக்குதலைத் தடுக்க முட்டை ஓட்டுத் தூளுடன், சிறிது உப்பைக் கலந்து செடியைச் சுற்றிலும் வளையம் போட வேண்டும்.

2. வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைகொல்லிகள் தாவரங்களின் கனிம வளங்களைக் குறைக்கின்றன.

3. மண் அரிப்பைத் தடுக்க மரங்கள் நட்டு வளர்த்தல் இன்றியமையாதது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *