Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 4th Tamil Books Chapter 3 9

Samacheer Kalvi 4th Tamil Books Chapter 3 9

தமிழ் : பருவம் 3 இயல் 9 : அறிவுநிலா

9. அறிவுநிலா

புதிர்க்கதை

ஓர் ஊரில் அண்ணனும் தம்பியும் வாழ்ந்து வந்தனர். அவர்களில் தம்பி வறுமையில் வாடினான். அண்ணனோ செல்வச் செழிப்பில் இருந்தான். தம்பி ஒருநாள், அண்ணனிடம் சென்று, தனக்கு ஒரு பசுவை வழங்குமாறு கேட்டான். தம்பியிடம் பசுவைக் கொடுப்பதற்குமுன் “தன் நிலத்தில் அவன் நாள்தோறும் வந்து, ஓராண்டு உழைக்க வேண்டும்” என்று அண்ணன் சொன்னான்.

தம்பியும் ஏற்றுக்கொண்டான். அண்ணனுடைய நிலத்தில் ஓராண்டு முழுவதும் உழைத்தான். ஓராண்டு முடிந்தபின் தம்பி, அண்ணனிடம் வேலைக்குச் செல்லவில்லை. மறுநாளே பசுவைத் திருப்பிக்கேட்டான் அண்ணன்

‘ஓராண்டு உன் நிலத்தில் உழைத்தேன் அல்லவா, பசு எனக்குத்தான் ! என்றான் தம்பி.

அண்ணன், ‘அதெப்படி முடியும்? ஓராண்டுக் காலம் நீ என் பசுவிடம் பால் கறந்து பலனை அனுபவித்தாய் அல்லவா? அதனால் இரண்டிற்கும் சரியாகிவிட்டது” என்றான். இருவருக்கும் வாய்ச்சண்டை முற்றியது. அதனால், இருவரும் தங்களுக்குச் சரியான தீர்ப்பைத் தேடி, பெரியவர் ஒருவரிடம் சென்றனர். வாழ்க்கை விசாரித்த பெரியவர் அவர்கள் இருவருக்கும் மூன்று புதிர்களைக் கொடுத்து, இவற்றிற்குச் சரியான பதில்களை யார் சொல்கிறீர்களோ அவர்களுக்குத்தாம் பசு” என்று கூறிப் புதிரைச் சொன்னார்.

முதல் புதிர், மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது? இரண்டாவது புதிர், மனிதனுக்கு மிக மகிழ்ச்சியைத் தருவது எது? மூன்றாவது புதிர், அதிக விரைவாகச் செல்வது எது? இந்த மூன்று புதிர்களுக்கும் நாளை விடை கூறுங்கள்” என்றார்.

இருவரும் வீட்டிற்குவந்து மூளையைக் குழப்பிச் சிந்தித்தனர் மறுநாள் காலை பெரியவரைச் சந்தித்தனர் மூத்தவனைப் பெரியவர் அழைத்து “என் புதிருக்கு விடை சொல்” என்றார்.

அண்ணன், அவரிடம், ‘பெரியவரே! ஒரு மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது என்று கேட்டீர்கள். அதற்குச் சரியான விடை அறுசுவை உணவு சாப்பிட்டால் வயிறு நிரம்பும் பல மணி நேரம் பசிக்காது.

இரண்டாவது மனிதனுக்கு மகிழ்ச்சியைத் தருவது எது என்று கேட்டீர்கள். அதற்கு விடை பணம், பணம் பெட்டி நிறைய இருக்கும்போது எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது தெரியுமா? பணம் குறையக் குறைய மகிழ்ச்சியும் குறையும். மூன்றாவதாக அதி விரைவாகச் செல்வது எது என்று கேட்டீர்கள். அதற்குச் சரியான விடை வேட்டை நாய். வேட்டை நாய்கள் விரைவாக ஓடி .முயல்களைக்கூடப் பிடித்த விடுகின்றனவே” என்று சொல்லிவிட்டுப் பெரியவரைப்பார்த்து, “பசு எனக்குத்தானே’ என்று கேட்டான்.

மூத்தவனே, நீ சொன்ன அனைத்தும் அபத்தமான பதில்கள் என்றார் பெரியவர்,

இளையவன் அழைக்கப்பட்டான். அவன் பெரியவரைப் பார்த்து, “நம் வயிற்றை நிரப்புவது பூமி. பூமித்தாயிடம்தான் நாம் உண்ணும் தானியங்களும், கிழங்குகளும் கிடைக்கின்றன. அந்த உணவால்தான் விலங்குகளும், பறவைகளும் வாழ்கின்றன. இரண்டாவதாக ஒரு மனிதனுக்கு அதிக மகிழ்ச்சி தருவது தூக்கம், தூக்கத்திற்காக விலையுயர்ந்த செல்வத்தையும் மனிதன் விட்டுவிடுவான் மூன்றாவது அதிவிரைவாகச் செல்வது நமது சிந்தனை ஓட்டம் அது நாம் விரும்பியபோது, விரும்பிய இடத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கும்” என்றான்.

“ஆஹா! சரியான விடைகள். இந்தப் பசு உனக்குத்தான் என்று பசுவைக் கொடுத்தபின் பெரியவர் கேட்டார்” இந்தப் புதிர்களுக்கு உனக்கு விடை கூறியது யார்? என்றார்.

“என் மகள் கவின்நிலா!”

“அவள் என்ன அவ்வளவு புத்திசாலியா?” என்றார் பெரியவர்

“ஏதோ கொஞ்சம்” என்றான் இளையவன்.

“அப்படியா? என் அளவிற்கு அவளுக்கு அறிவு இருக்கிறதா? என்பதை ஆராய்ந்து பார்த்துவிடுகிறேன்” என்ற பெரியவர் பத்து அவித்த முட்டைகளை அவனிடம் கொடுத்து, இதோ இந்தப் பத்து அவித்த முட்டைகளையும் உன்மகளிடம் கொடுத்து, ஒரு கோழியினால் அடைகாக்க வைத்து, பத்துக் குஞ்சுகளை ஓர் இரவிற்குள் பொரிக்க வைத்து அதே குஞ்சுகளை அதே இரவில் கோழியாக்கி, முட்டை போட வைத்து, பத்து முட்டைகளில் மூன்றை எடுத்து அடையாக்கி நாளை காலை உணவிற்கு எனக்குக் கொண்டுவா என்றார்.

தன் மகள் கவின்நிலாவிடம் சென்று, பெரியவர் சொன்னதை அப்படியே சொன்னான் இளையவன்.

தன் மகள் இந்தப் புதிருக்கு விடை எப்படிச் சொல்லப் போகிறாள் என்று கவலைப்பட்டான். ஆனால் அவளோ எதிர் புதிர் போட்டாள். தன்தந்தையிடம் வேகவைத்த துவரைகள் அடங்கிய ஒரு பானையைக் கொடுத்து, ‘இதில் உள்ளதுவரையை நிலத்தில் விதைத்து முற்றியவுடன் அறுத்து எனது கோழிக் குஞ்சுகளுக்கு உணவாகத் தயாராக வைக்கும்படி பெரியவரிடம் கூறுங்கள். “என்றாள் கவின்நிலா. அவளுடைய தந்தையும் அவ்வாறே பெரியவரிடம் சென்று சொன்னார்.

துவரையைப் பார்த்த பெரியவர் அவற்றை நாய்க்குப் போட்டுவிட்டு, சணல்கண்டு ஒன்றைக் கொடுத்து, “இதை ஊறவைத்து,காயவைத்து, நல்ல தரமான துணி தயாரிக்கச் சொல், ‘ என்றார். ஆனால், அவளோ அதற்குப் பதிலாக மிக மெல்லிய குச்சி ஒன்றைக் கொடுத்து” இதிலிருந்து நூலை நூற்பதற்கு ஒரு ராட்டினம் செய்து தரும்படி கூறுங்கள்!” என்றாள். அவளது அறிவின் ஆழத்தைக் கண்ட பெரியவர்,”உன் மகளை நாளை என்னை வந்து பார்க்கச் சொல். ஆனால், அவள் நடக்கவோ சவாரி செய்யவோ கூடாது. வெறுங்காலுடனோ செருப்புடனோ வரக்கூடாது. பரிசுடனோ, பரிசின்றியோ வரக்கூடாது இது கடுமையான உத்தரவு” என்றார்.

மறுநாள் பனிச்சறுக்கு வண்டியில் வெள்ளாடுகளைப் பூட்டி, ஒரு காலில் மட்டும் செருப்பு அணிந்து, முயல் ஒன்றைத் தெரியும்படியும் சிட்டுக்குருவி ஒன்றைத் தெரியாமலும் எடுத்துச் சென்றாள் கவின்நிலா. அவள் மிகுந்த புத்திசாலித்தனத்துடன் வருவதைக் கண்ட பெரியவர் அவள்மீது நாய்களை ஏவினார். பதிலுக்கு இவள் முயலை வெளியேவிட நாய்கள் முயலைத் துரத்தின. “இதோ உங்களுக்கு ஒரு சிறிய பரிசு” என்று சிட்டுக் குருவியைக் கொடுத்தாள். அது அவரது கையில் சிக்காமல் பறந்து விட்டது. தான் சொல்லியபடியே வந்துவிட்ட அவளை நினைத்துப் பெருமைப்பட்டார் பெரியவர். “கவின்நிலா, நீ புத்திசாலிதான்” என்று பாராட்டிய பெரியவர், அவளுக்குப் பரிசுகள் அளித்து அனுப்பி வைத்தார்.

‘நீதி : வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

வாங்க பேசலாம்

நீங்கள் அறிந்திருக்கும் புதிர்க்கதைகளுள் ஒன்றை வகுப்பில் பகிர்ந்து கொள்க.

விடை

ஓர் ஊரில் விறகுவெட்டி ஒருவன் இருந்தான். அவன் மிகவும் ஏழ்மையில் இருந்தான். அவனுடைய அப்பாவிற்குக் கண் தெரியாது. அவனுக்குத் திருமணம் ஆகி நீண்ட நாட்களுக்குப் பிறகும் குழந்தை இல்லை. எப்போதும் அவன் கவலையுடன் இருப்பான். ஒருநாள் ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு தன் வறுமையை எண்ணியபடியே உறங்கிவிட்டான். கொஞ்ச நேரம் உறங்கியபின் விழித்தெழுந்தான். அடுத்த வேலை உணவிற்கு விறகு வெட்டி எடுத்துச் சென்றால்தான் என்ற நிலைமை. சுறுசுறுப்பானான்.

மரத்தை வெட்ட தன் வாளை எடுத்தான். அப்போது அம்மரம் “விறகு வெட்டியே! நில் என்னை வெட்டாதே! நான் ஓர் அதிசய மரம். என் நிழலில் யார் அமர்கிறார்களோ அவர்களுக்கு உதவி செய்வேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். நான் தருகிறேன். ஆனால் ஒரு வரம்தான் கேட்க வேண்டும்” என்று கூறியது.

விறகு வெட்டி எனக்கு என்ன கேட்பது என்று தெரியவில்லை. வீட்டிற்குச் சென்று என் குடும்பத்தினரிடம் கேட்டு நாளை வந்து கேட்கிறேன் என்றான். மரமும் “சரி” என்று கூறியது. விறகு வெட்டி வீட்டிற்குச் சென்ற நடந்தவற்றைக் கூறினான்.

விறகு வெட்டியின் தந்தை ‘தனக்குப் பார்வையில்லாமல் மிகவும் சிரமப்படுவதாகக் கூறினார். தாய் வீடு பெரிய மாடி வீடாக இருக்க வேண்டும்’ என்று கூறினார். மனைவி, ‘நமக்குக் குழந்தை வேண்டும்’ என்று கூறினாள். மூவருடைய தேவையை எவ்வாறு ஒரு வரத்தினால் பூர்த்தி செய்வது என்று சிந்தித்தான் விறகு வெட்டி.

அடுத்தநாள் விறகு வெட்டி விடியற்காலையில் எழுந்தான். காட்டிற்குச் சென்று அந்த அதிசய மரத்திடம் ஒரு வரம் கேட்டான். மரமும் கொடுத்தது. விறகு வெட்டியும் மகிழ்ந்தான்.

அவன் கேட்டவரம்

“என் மகனை நான் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் காட்சியை என் பெற்றோர் வீட்டு மாடியிலிருந்து பார்க்க வேண்டும்” என்பதுதான் விறகு வெட்டி கேட்ட வரம்,

 தந்தைக்குப் பார்வை கிடைத்துவிட்டது.

 தாய் கேட்டதைப் போல் மாடி வீடு கிடைத்தது.

 அவனுக்கு மகனும் பிறந்து விட்டான்.

சிந்திக்கலாமா!

இக்கதையில் வரும் அண்ணனைப்போல் நீ இருந்தால், தம்பிக்கு என்ன செய்திருப்பாய்? கூறுக.

விடை

இக்கதையில் வரும் அண்ணனைப் போல் நான் இருந்தால் என் தம்பிக்கு நல்லதைச் செய்வேன் பசுவை அவனிடம் கொடுப்பேன். மேலும் அவனைத் தனியே இருக்க வேண்டாம், என்னுடன் சேர்ந்தே இரு என்று கூறுவேன்.

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. ”தினமும்’ என்ற சொல்லின் பொருள்

அ) நாள்தோறும்

ஆ) வேலைதோறும்

இ) மாதந்தோறும்

ஈ) வாரந்தோறும்

[விடை : அ) நாள்தோறும்]

2. ”பனிச்சறுக்கு’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) பனி + சறுக்கு

ஆ) பனிச் + சறுக்கு

இ) பன + சறுக்கு

ஈ) பன் + சறுக்கு

[விடை : அ) பனி + சறுக்கு]

3. ‘வேட்டை + நாய்’ – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

அ) வேட்ட நாய்

ஆ) வேட்நாய்

இ) வேட்டைநாய்

ஈ) வேட்டநாய்

[விடை : இ) வேட்டைநாய்]

வினாக்களுக்கு விடையளிக்க.

1. ஓராண்டு நிலத்தில் உழைத்தவர் யார்?

விடை

ஓராண்டு அண்ணனுடைய நிலத்தில் தம்பி உழைத்தார்.

2. பெரியவர் சொன்ன புதிர்கள் எத்தனை?

விடை

பெரியவர் சொன்ன புதிர்கள் மூன்று. அவை,

 முதல் புதிர் – மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது?

 இரண்டாவது புதிர் – மனிதனுக்கு மிக மகிழ்ச்சியைத் தருவது எது?

 மூன்றாவது புதிர் – அதிக விரைவாகச் செல்வது எது?

3. புதிருக்குச் சரியான பதிலளித்தவர் யார்?

விடை

புதிருக்குச் சரியான பதிலளித்தவர் தம்பி.

4. பெரியவர் பசுவை யாருக்குக் கொடுத்தார்?

விடை

பெரியவர் பசுவைத் தம்பிக்குக் கொடுத்தார்.

5. கவின்நிலா பெரியவருக்குக் கொடுத்த பரிசு என்ன?

விடை

கவின்நிலா பெரியவருக்குக் கொடுத்த பரிசு சிட்டுக்குருவி.

எதிர்ச்சொல்லுடன் இணைப்போமா?

இணைந்து செய்வோம்

விளையாடலாம் வாங்க ! தூண்டில் மீன் விளையாட்டு!

மீன் வடிவத்தில் அட்டைகளை வெட்டிக் கொண்டு அட்டையில் பின்வரும் சொற்களை எழுதிக் கொள்ள வேண்டும். அட்டையில் குண்டுசியைக் குத்தி, வகுப்பறையின் நடுவில் வட்டமிட்டு அதில் அட்டைகளை பரப்பி வைக்க வேண்டும். ஒரு குச்சியின் நுனியில் நூலின் ஒரு முனையைக் கட்ட வேண்டும். மறுநுனியில் காந்தத்தை வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும். வகுப்பறையில் பெரியதொரு வட்டமிட்டு வட்டத்தில் ஓர் அம்புக்குறி இடவேண்டும். வட்டத்தில் மாணவர்களை ஓடவிட வேண்டும். ஆசிரியர் ஊதலை ஊதியவுடன் மாணவர்கள் வட்டத்தில் நிற்க வேண்டும். அம்புக்குறி இட்ட இடத்தில் எந்த மாணவர் நிற்கிறாரோ அவர், தூண்டில் மூலம் ஓர் அட்டையை எடுத்து, அதில் உள்ள சொல்லுக்குப் பன்மைச்சொல் கூற வேண்டும்.

எடுத்துக்காட்டு : முட்டை – முட்டைகள்

புதிர் வீடு கோழி நாய் துணி

குச்சி வண்டி பரிசு முயல் குருவி

விடை

புதிர் – புதிர்கள்

வீடு – வீடுகள்

கோழி – கோழிகள்

நாய் – நாய்கள்

துணி – துணிகள்

குச்சி – குச்சிகள்

வண்டி – வண்டிகள்

பரிசு – பரிசுகள்

முயல் – முயல்கள்

குருவி – குருவிகள்

கலையும் கைவண்ணமும்

வரைந்து வண்ணமிட்டு மகிழ்வோம் !

பாதி என்னிடம் மீதி உன்னிடம் வரைந்து வண்ணம் தீட்டு

மொழியோடு விளையாடு

புகைவண்டி

1. புகை

2. வண்டி

3. கை

4. வடி

5. வகை

6. கைவண்டி

கதைப்பாட்டு

1. கதை

2. பாட்டு

3. கட்டு

4. தை

5. பாடு

6. பாதை

பருத்தி ஆடைகள்

1. பருத்தி

2. ஆடைகள்

3. படை

4. ஆள்

5. பரு

6. ஆடை

அறிந்து கொள்வோம்

விடுகதைகளுக்கு ஒன்பது வடிவங்கள் உள்ளன.

1. புதிர்

2. சொல் விளையாட்டு

3. மாற்றெழுத்துப் புதிர்

4. வினோதச் சொற்கள்

5. எழுத்துக் கூட்டு

6. விகடம்

7. ஓவியப் புதிர்

8. சொற்புதிர்

9. நொடிவினா

சொல்லுக்குள் சொல் கண்டுபிடி!

கொடுக்கப்பட்ட சொல்லின் பொருள் கட்டத்திலுள்ள எழுத்துகளுள் ஒளிந்திருக்கிறது கண்டுபிடித்து எழுதுக.

ஓவியம்

விண்மீன்

செயல் திட்டம்

உங்கள் வீட்டிலுள்ள பெரியவர்களிடம் கேட்டு, 20 விடுகதைகள் எழுதி வருக

விடை

1. ஒற்றைக் காதுக்காரன், ஓடி ஓடி வேலி அடைக்கிறான். அது என்ன?

பதில் : ஊசி

2. புறப்பட்டது தெரிகிறது; போன சுவடு தெரியவில்லை . அது என்ன ?

பதில் : புயல்

3. பார்த்தால் கல்; பல் பட்டால் நீர். அது என்ன?

பதில் : பனிக்கட்டி

4. பிடி இல்லாத குடையைத் தொட முடியவில்லை . அது என்ன ?

பதில் : வானம்

5. மனிதன் போடாத பந்தலிலே மலர்ந்து கிடக்கின்றன பூக்கள். அது என்ன?

பதில் : நட்சத்திரம்

6. மட்டை உண்டு, கட்டை இல்லை; பூ உண்டு, மணமில்லை. அது என்ன?

பதில் : வாழை

7. மூடாத வாய்க்கு முழ வால். அது என்ன?

பதில் : அகப்பை

8. முகம் பார்த்து வளரும்; முடிவில்லாமல் தொடரும். அது என்ன?

பதில் : சொந்தம்

9. திரி இல்லாத விளக்கு; உலகம் எல்லாம் தெரியும். அது என்ன?

பதில் : சூரியன்

10. சின்னத் தம்பி , குனிய வச்சான். அது என்ன?

பதில் : முள்

11. அள்ள முடியும்; ஆனால் கிள்ள முடியாது – அது என்ன?

பதில் : தண்ணிர்

12. அள்ளவும் முடியாது; கிள்ளவும் முடியாது – அது என்ன?

பதில் : காற்று

13. ஏழை படுக்கும் பாய்; எடுத்துச் சுருட்ட ஆள் இல்லை ?

பதில் : பூமி

14. பொழுது சாய்ந்தால் பூந்தோட்டம்; விடிந்து பார்த்தால் வெறுந் தோட்டம்.

பதில் : வானம்

15. தாளைக் கொடுத்தால் தின்னும்; தண்ணிர் குடித்தால் மடியும்.

பதில் : நெருப்பு

16. நித்தம் கொட்டும்; சத்தம் இல்லை

பதில் : கண்இமை

17. பக்கத்திலுள்ள பட்டணத்தைப் பார்க்க முடியவில்லை.

பதில் : முதுகு

18. நூல் நூற்கும்; இராட்டை அல்ல, ஆடை நெய்யும், தறியும் அல்ல.

பதில் : சிலந்தி

19. சூடுபட்டுச் சிவந்தவன், வீடுகட்ட உதவுவான்.

பதில் : செங்கல்

20. பட்டையைப் பட்டையை நீக்கி, பதினாறு பட்டையை நீக்கி, முத்துப் பட்டையை நீக்கி, முன்னே வாராள் சீமாட்டி

பதில் : வாழைப்பூ

அகர முதலி

அதிகம் – மிகுதி

அதிகரித்தல் – மிகுதல்

அபத்தமான பதில்கள் – பொய்யான விடைகள்

அவசியம் – தேவை

அற்புதம் – வியப்பு / புதுமை

ஆச்சரியம் – வியப்பு

ஆமோதித்தன – உடன்பட்டன

ஆர்வம் – ஈடுபாடு

ஆனந்தம் – மகிழ்ச்சி

இயைந்து – பொருந்தி

இரசிகர்கள் – சுவைஞர்கள் (இரசித்தல் – சுவைத்தல்)

இராகம் – இன்னிசை

இன்னல் – துன்பம்

உற்சாகம் – மகிழ்ச்சி / ஊக்கம்

எதிரொலி – ஒலியைக் கேட்டு மீண்டும் ஒலித்தல்

கிரீடம் – மணிமுடி

கேலி – விளையாட்டுப் பேச்சு

சிந்தை – மனம்

சீர்கேடு – ஒழுக்கக் குறைவு

சுகம் – இன்பம் / நலம்

சுருதி – இசைவகை

செருமியது – இருமியது

தத்துவம் – உண்மை நிலை

தைரியம் – துணிவு

நிரூபித்தல் – மெய்ப்பித்தல்

நுண்மை – நுட்பம்

பழுதான – பயன்படுத்த முடியாத

பாதிப்புகள் – விளைவுகள்

பாரம்பரியம் – தொன்றுதொட்டு / பரம்பரை

பயன்படுத்த முடியாத விளைவுகள்

புத்திசாலித்தனம் – அறிவுக்கூர்மை

மனமார்ந்த – மனம் நிறைந்த

மாசு – குற்றம் / அழுக்கு

லேசாய் – மெதுவாய்

வம்பு – வீண்பேச்சு

விசேஷம் – சிறப்பு

வெட்கம் – நாணம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *