Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 5th Science Books Tamil Medium Our Environment

Samacheer Kalvi 5th Science Books Tamil Medium Our Environment

அறிவியல் : பருவம் 3 அலகு 1 : நமது சுற்றுச்சூழல்

அலகு 1

நமது சுற்றுச்சூழல்

கற்றல் நோக்கங்கள்

இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன:

❖ பண்ணைகளின் பல்வேறு வகைகளை அறிந்துகொள்ளல்.

❖ கால்நடைப் பண்ணை மற்றும் பறவைப் பண்ணையின் முக்கியத்துவத்தைப் பட்டியலிடுதல்.

❖ தேனீ வளர்ப்பு மற்றும் தேனின் பயன்களை அறிந்துகொள்ளல்.

❖ இயற்கை உரங்களின் வகைகள் மற்றும் அவற்றின் பயன்களைப் புரிந்துகொள்ளல்.

❖ மண்புழு வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் பற்றி அறிதல்.

அறிமுகம்

நம்மைச் சுற்றியுள்ள அனைத்துமே சுற்றுச்சூழல் எனப்படும். சுற்றுச்சூழல் இரு வகைப்படும். அவை: இயற்பியல் சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் சுற்றுச்சூழல். இயற்பியல் சுற்றுச்சூழலில் உயிரற்ற பொருள்களாகிய நிலம், நீர் மற்றும் காற்று ஆகியவை அடங்கும். உயிரியல் சுற்றுச்சூழலில் உயிருள்ள பொருள்களாகிய தாவரங்கள் மற்றும் விலங்குகள் அடங்கும். இயற்கையான சுற்றுச்சூழல் அதிக பொருளாதார நன்மைகளைக் கொண்டுள்ளது. நமது சுற்றுச் சூழலில் காணப்படும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் பல்வேறு வகைகளில் நமக்குப் பயன் தருகின்றன. ஆடு, பசு மற்றும் எருமை போன்றவை நமக்கு பால் தருகின்றன. இவை பெரும்பாலும் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. இப்பாடத்தில் நாம் கால்நடைப் பண்ணைகள், பறவைப் பண்ணைகள், தேனீ வளர்ப்பு, இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் ஆகியவற்றைப் பற்றி கற்போம்.

I. பண்ணைகள்

பண்ணை வளர்ப்பு என்பது தாவரங்கள் மற்றும் விலங்குகளை வளர்க்கும் முறையாகும். இது விவசாயத்தின் ஒரு பகுதி. நிலத்தைப் பண்படுத்துதல் மற்றும் மனித வாழ்க்கைக்கு ஆதாரமளித்து அதனை மேம்படுத்தும் வகையில் உணவு இழைகள், மரக்கட்டை மற்றும் மருந்து ஆகியவற்றை வழங்குவதற்காக தாவரங்கள் மற்றும் விலங்குகளை வளர்த்தல் ஆகியவற்றையே விவசாயம் என்கிறோம். ஆனால், பண்ணை வளர்ப்பு வேளாண்மையைக் காட்டிலும் லாபகரமான ஒன்றாகும். எனவே, தற்காலங்களில் பண்ணை வளர்ப்பு வணிக ரீதியாக மேற்கொள்ளப்படுகின்றது. வணிக நோக்கில் பயிர்ச் சாகுபடி செய்வதற்காக அல்லது விலங்குகளை வளர்ப்பதற்காக அல்லது இரண்டிற்கும் பயன்படக்கூடிய, விளை நிலம் மற்றும் கட்டடங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பே பண்ணை ஆகும். பெரிய அளவிலான பண்ணைகளில் ஒரு குறிப்பிட்ட வகை விலங்குகள் அல்லது பயிர்கள் மட்டும் வளர்க்கப்படுகின்றன. ஆனால் சிறிய வகைப் பண்ணைகளில் பல்வேறு வகையான பயிர்கள் மற்றும் விலங்குகள் வளர்க்கப்படுகின்றன.

1. பால் பண்ணை

பால் பண்ணை என்பது ஒரு வகையான விவசாயம் ஆகும். பால் கரத்தல் மற்றும் பெறப்பட்ட பாலிலிருந்து வெண்ணெய், தயிர், பாலாடைக் கட்டி ஆகியவற்றை உற்பத்தி செய்தல் போன்றவை தேன் முக்கிய நோக்கம் ஆகும். வணிகரீதியான பால் பண்ணைகளில் அதிக அளவு பால் தரக்கூடிய பசுக்கள், காளைகள் மற்றும் எருதுகள் போன்ற விலங்குகள் வளர்க்கப்படுகின்றன. வெள்ளாடு, செம்மறி ஆடு மற்றும் ஒட்டகம் போன்ற விலங்குகளும் இங்கு வளர்க்கப்படுகின்றன.

உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் அமைந்துள்ள “மாவட்ட கால்நடைப் பண்ணை” (District Livestock Farm) எனும் பண்ணையே ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடைப் பண்ணை ஆகும். இதன் மொத்த நிலப்பரப்பு 1641 ஏக்கர்.

செயல்பாடு 1

உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள கால்நடைப் பண்ணைக்குச் சென்று அதனைப் பார்வையிடவும். அங்கு வளர்க்கப்படும் கால்நடைகளைக் குறித்து ஒரு பட்டியல் தயாரிக்கவும். மேலும், அங்கு தயாரிக்கப்படும் வாருள்கள் குறித்து தெரிந்து கொள்ளவும்.

 கால்நடை இனங்கள்

இந்தியாவில் 26 வகையான கால்நடை இனங்கள் உள்ளன. பால் உற்பத்திக்காகவும், விவசாயப் பணி, போக்குவரத்து மற்றும் பிற பணிகளுக்காகவும் இவை வளர்க்கப்படுகின்றன. கிர், சகிவால், செவ்வறி சிந்தி, காங்கேயம் மற்றும் ஆன்கோல் ஆகியவை இந்தியாவில் காணப்படும் சிலவகை கால்நடை இனங்கள் ஆகும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் காணப்படும் கால்நடை இனங்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

கால்நடை இனங்கள் | மாநிலங்கள்

கிர் – குஜராத், இராஜஸ்தான்

சகிவால் – பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம்

செவ்வறி சிந்தி – ஆந்திரப் பிரதேசம்

மால்வி – இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம்

நாகாரி – அரியானா, உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம்

காங்கேயம் – தமிழ்நாடு

ஆன்கோல் – ஆந்திரப் பிரதேசம்

செயல்பாடு 2   

தமிழ்நாட்டில் காணப்படும் மாட்டினங்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ஆசிரியரின் உதவியுடன் அவை எந்த மாவட்டத்தில் காணப்படுகின்றன என்று கண்டுபிடிக்கவும்.

உங்களுக்குத் தெரியுமா?

உலகிலேயே இந்தியாதான் அதிக எண்ணிக்கையிலான கால்நடைகளைக் கொண்டுள்ளது. மொத்தம் 281 மில்லியன் கால்நடைகள் இங்கு உள்ளன. 2008 ஆம் ஆண்டு 175 மில்லியன் கால்நடைகளுடன் இந்தியா உலகிலேயே இரண்டாம் இடத்தில் இருந்தது. (ஒரு மில்லியன் = பத்து லட்சம்)

இவ்வகை விலங்குகள் தவிர எருமை மாடுகளும் இங்கு வளர்க்கப்படுகின்றன. இந்தியாவில் 7 வகை எருமை மாட்டினங்கள் காணப்படுகின்றன. எருமை மாடுகள் பசு மாடுகளைக் காட்டிலும் அதிக அளவில் பால் தரக்கூடியவை. எருமை மாட்டின் பால் பசு மாட்டின் பாலைவிட அதிக சத்துக்கள் நிறைந்தது. முர்ரா, ஜஃப்ராபாடி, பாதாவரி மற்றும் சுர்தி ஆகியவை இந்தியாவில் உள்ள எருமை மாடுகளின் வகைகளாகும். எருமை மாட்டுப் பால் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் காணப்படும் சிலவகை எருமை மாட்டினங்கள் பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

எருமை மாட்டினங்கள் : மாநிலங்கள்

முர்ரா – பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம்

பாதாவரி – உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம்

ஜஃப்ராபாடி – குஜராத்

சுர்தி – இராஜஸ்தான், குஜராத்

மெஹ்சனா – குஜராத்

நாக்புரி – மத்திய மற்றும் தென் இந்தியா

நிலி ரவி – பஞ்சாப், அரியானா

உங்களுக்குத் தெரியுமா?

பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்காக 1970களில் இந்தியாவில் வெண்மைப் புரட்சி ஆரம்பிக்கப்பட்டது. டாக்டர் வர்கீஸ் குரியன் வெண்மைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

 உணவூட்டம்

ஆரோக்கியமாக இருப்பதற்கும், நன்கு பால் கொடுப்பதற்கும் கால்நடைகளுக்கு சத்துள்ள உணவு தேவைப்படுகிறது. சக்கை மற்றும் சத்து செறிந்த உணவு ஆகியவையே கால்நடைகளுக்கேற்ற உணவு ஆகும்.சக்கையில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. கால்நடைத்தீவனம், வைக்கோல், பதப்படுத்தப்பட்ட பசுந்தீவனம் ஆகியவை இவற்றுள் அடங்கும். சத்து செறிந்த உணவுகளுள் குருணை (உடைக்கப்பட்ட தானியம்) தானியங்கள், தினை, தவிடு, பருத்தி விதைகள் மற்றும் புண்ணாக்கு ஆகியவை அடங்கும். உணவைத்தவிர தூய்மையான குடிநீரும் கால்நடைகளுக்கு அவசியமாகும்.

 நோய்கள்

பாதம் மற்றும் வாய் தொடர்பான நோய்கள் மற்றும் ஆந்த்ராக்ஸ் நோய் போன்றவை பொதுவாக கால்நடைகளில் காணப்படுகின்றன. இந்த நோய்கள் பரவாமல் தடுப்பதற்கு அவற்றின் இருப்பிடத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். ஏற்ற காலத்தில் தடுப்பூசிகள் போடுவதன் மூலம் பெரும்பாலான நோய்களைத் தடுக்கலாம். கால்நடைகளில் தோன்றும் நோய்கள், குறைபாடுகள் காயங்கள் ஆகியவற்றைத் தடுப்பது கண்டறிவது மற்றும் சிகிச்சை அளிப்பது ஆகியவை கால்நடை மருத்துவம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

செயல்பாடு 3

உங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவ மையத்திற்குச் சென்று கால்நடைகளில் தோன்றும் பொதுவான நோய்கள் குறித்து அறிந்து கொள்க. மேலும் அவற்றைத் தடுக்கும் முறைகளைப் பற்றியும் அறிந்து கொள்க.

 பயன்கள்

கால்நடைகள் பல வகைகளில் நமக்குப் பயனுள்ளதாக உள்ளன. அவற்றுள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

● பசு நமக்கு பால் தருகிறது. பசுவின் பாலில் நமக்குத் தேவையான தாது உப்புகள் உள்ளன.

● எருதுகள் நிலத்தை உழவும், அறுவடை செய்யவும், போர் அடிக்கவும் உதவுகின்றன.

● கால்நடைகள் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

● மாட்டுச் சாணம் ஒரு சிறந்த இயற்கை உரம், அது எரிபொருளாகவும், உயிரி வாயு தயாரிப்பதற்கும் பயன்படுகிறது.

● பஞ்சகவ்யம் என்பது ஓர் ஆயுர்வேத மருந்தாகும். இது பூச்சிகளையும் பூஞ்சைகளையும் கட்டுப்படுத்துவதற்காக விவசாயத்தில் பயன்படுத்தப்படுகிறது. இது மாட்டின் சாணம் மற்றும் சிறுநீர், கறந்த பால், தயிர், வெல்லம் மற்றும் நெய் ஆகியவற்றின் கலவை ஆகும்.

● கால்நடைகளின் தோலிலிருந்து தோல் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

2. பறவைப் பண்ணை

பறவைப் பண்ணையில் முட்டை மற்றும் இறைச்சிக்காக பறவை இனங்கள் வளர்க்கப்படுகின்றன. கோழி, வாத்து தாரா, வான்கோழி மற்றும் சிலவகை புறாக்கள் பொதுவாக இங்கு வளர்க்கப்படுகின்றன. இவற்றுள் 90% கோழிகளை அதிகம் வளர்க்கப்படுகின்றன. இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகள் இறைச்சிக் கோழிகள் (Broiler) எனவும், முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிகள் முட்டைக் கோழிகள் (Layer) எனவும் அழைக்கப்படுகின்றன. மனிதர்களுக்குத் தேவையான சரிவிகித உணவை அளிப்பதில் பறவைப்பண்ணைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பண்ணை நிர்வாகம் என்பது குஞ்சு பொரிக்கும் முறை, அவற்றை வளர்ப்பது, பாதுகாப்பாக கூட்டில் வைத்துப் பராமரிப்பது, தூய சுற்றுச்சூழல், நோய் வராமல் பாதுகாத்தல் மற்றும் சரியான முறையில் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். தமிழ்நாட்டின் நாமக்கல், பல்டைம் மற்றும் சென்னை போன்ற இடங்களில் கோழிப் பண்ணைகள் காணப்படுகின்றன.

 இனங்கள்

நூற்றுக்கும் மேற்பட்ட கோழி இனங்கள் நம் நாட்டில் வளர்க்கப்படுகின்றன. பயன்பாட்டைப் பொருத்து இவை பலவிதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவையாவன: இறைச்சிக் கோழிகள் (Broiler), முட்டைக் கோழிகள் (Layer) மற்றும் ரெண்டிற்கும் பயன்படுபவை. அசீல், சிட்டகாங், காகஸ், பஸ்ரா, பிரம்மா மற்றும் கொச்சின் கோழிகள் ஆகும். முதலியன நமது நாட்டில் வளர்க்கப்படும் சில கோழி இனங்கள் ஆகும். நாட்டுக் கோழிகள் அல்லது கிராமப்புறக் கோழிகள் முற்காலத்திலிருந்தே இந்தியாவில் வளர்க்கப்படுகின்றன. பொதுவாக வியாபார நோக்கில் வளர்க்கப்படும் இறைச்சிக் கோழிகள் மற்றும் முட்டைக் கோழிகளைவிட இவற்றின் இறைச்சியின் அளவு மிகவும் குறைவாகவே இருக்கும். ஆனாலும், இக்கோழிகளின் இறைச்சி மற்றும் முட்டையின் தரம் வியாபார நோக்கில் வளர்க்கப்படும் கோழிகளின் தரத்தைவிட அதிகம்.

உங்களுக்குத் தெரியுமா?

முட்டை உற்பத்தியில் இந்தியா உலகிலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது.

வெள்ளை லெக்கான் கோழிகளே உலகிலேயே அதிக அளவில் முட்டை இடும் கோழிகள் ஆகும்.

 உணவூட்டம்

முட்டை இடுவதற்கும், சத்து நிறைந்த இறைச்சி தருவதற்கும் பண்ணைப் பறவைகளுக்கு புரதம், கார்போஹைட்ரேட், தாது உப்புகள், கொழுப்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவு தேவை. கம்பு, பார்லி, சோளம், தினை, தவிடு, கோதுமை, புண்ணாக்கு, மீன் உணவு, ரொட்டி மற்றும் பச்சைக் காய்கறிகள் ஆகியவையும் இவற்றிற்கு உணவாகக் கொடுக்கப்படுகின்றன.

 பண்ணைப் பறவைகளிலிருந்து கிடைக்கும் பொருள்கள்

பண்ணைகளில் வளர்க்கப்படும் பறவைகள் நமக்கு பலவிதத்தில் பயன்தருகின்றன. முட்டை, இறைச்சி மற்றும் உரம் ஆகியவை அவற்றிலிருந்து கிடைக்கக்கூடிய முக்கியமான பொருள்கள் ஆகும்.

● பண்ணைகளில் வளர்க்கப்படும் பறவைகள் நல்ல சத்தான உணவிற்கான ஆதாரமாக உள்ளன.

● இவற்றின் முட்டைகள் அதிக புரதச் சத்து மிகுந்தவை. இவை எளிதில் செரிமானம் அடையக்கூடியவை. இவற்றில் நமக்குத் தேவையான கால்சியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்து போன்ற தாதுக்களும், வைட்டமின்களும், சிறிதளவு கொழுப்பும் உள்ளன.

● இவற்றின் இறகுகள் தலையணை மற்றும் குளிர் கால மெத்தைகள் தயாரிப்பில் பயன்படுகின்றன.

● இவற்றின் கழிவுகள் நல்ல உரமாகப் பயன்படுகின்றன. இவை பயிர்களுக்கு அதிகளவு பயன்படக்கூடியவை.

உங்களுக்குத் தெரியுமா?

முட்டையில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் சோடியம் போன்ற தாதுக்களும், B1, B2 மற்றும் D போன்ற வைட்டமின்களும் அடங்கியுள்ளன.

முட்டையில் காணப்படும் ஊட்டச் சத்துகள்: நீர் – 66%, புரதம் 21% கொழுப்பு – 9%, தாதுக்கள் – 3.5%

 பண்ணைப் பறவைகளில் தோன்றும் நோய்கள்

பண்ணைப் பறவைகளை முறையாகப் பராமரிக்காவிட்டாலோ அல்லது அவற்றிற்கு சரியாக உணவளிக்காவிட்டாலோ அவை பலவிதமான நோய்களால் பாதிக்கப்படுகின்றன.

● வைரஸ் கிருமிகளால் தாக்கப்படும்போது இப்பறவைகளுக்கு காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது.

● பறவைக் காலரா நோய் பாக்டீரியாக்கள் மூலம் இவற்றில் தோன்றுகிறது.

● அதிக குளிர் மற்றும் ஈரப்பதத்தினால் இப்பறவைகளுக்கு சதைப்பிடிப்பு ஏற்படுகிறது.

●  அக ஒட்டுண்ணிகளாகிய உருளைப் புழுக்கள் மற்றும் தட்டைப் புழுக்கள் மூலம் இவை பாதிக்கப்படுகின்றன. பேன், தெள்ளுப்பூச்சி மற்றும் உண்ணிகள் போன்ற புற ஒட்டுண்ணிகளாலும் இவை பாதிக்கப்படுகின்றன.

செயல்பாடு 4

கீழேகொடுக்கப்பட்டுள்ளவார்த்தைகளைக் கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்புக.

(எண்ணெய் வித்துக்கள், முட்டை, தேன், உணவு தானியங்கள், மீன்)

பசுமைப் புரட்சி : உணவு தானியங்கள்

நீலப் புரட்சி : மீன்

வெள்ளிப் புரட்சி : முட்டை

தங்கப் புரட்சி : தேன்

மஞ்சள் புரட்சி : எண்ணெய் வித்துக்கள்

 பறவைப் பண்ணை மேலாண்மை

பண்ணைகளில் வளரும் பறவைகளுக்கு மிகவும் தூய்மையான சுற்றுச்சூழல் தேவை. நோய் வராமல் தடுப்பதற்கு கீழ்க்கண்ட முறைமைகள் கடைபிடிக்கப்படவேண்டும்.

● பண்ணைகளில் உள்ள பறவைக் கூடுகள் சுத்தமாகவும், பூச்சிகள் இல்லாதவாறும் பாதுகாக்கப்பட வேண்டும்.

● நல்ல காற்றோட்டம் இருப்பதற்கு ஏற்றவாறு ஜன்னல்கள் இருக்க வேண்டும்.

● அதிக முட்டைகளை உற்பத்தி செய்வதற்கு நல்ல வெளிச்சம் அவசியம்.

●  பறவைகளுக்கு தூய்மையான நீர் கொடுக்கப்படவேண்டும்.

● ஏற்ற காலத்தில் தடுப்பூசிகள் போடப்படவேண்டும். இது நோய் வராமல் தடுக்கும்.

II. தேனீ வளர்ப்பு

தேனிற்காக தேனீக்களை வளர்ப்பது தேனி வளரப்பு எனப்படும். இது ஆங்கிலத்தில் அபிகல்சர் (Apiculture) என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தில் தேனீக்கள் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள மரப் பெட்டிகளில் வளர்க்கப்படுகின்றன. பழங்காலத்திலிருந்தே தேனீக்கள் மனிதர்களுடன் நெருங்கிய தொடர்புடையவை. தேன் மற்றும் தேன் மெழுகு போன்ற பொருள்கள் தேனீக்களிடமிருந்து பெறப்படுகின்றன. முற்காலத்தில் காட்டிலுள்ள தேன் கூட்டிலிருந்து தேன் பெறப்பட்டு வந்தது. தற்போது தேன் எடுப்பதற்காக தேனீக்கள் விவசாயிகளால் வளர்க்கப்படுகின்றன. தேனீ வளர்ப்பானது ஒரு இலாபகரமான நாட்டுப்புறத் தொழிலாகும். தேனீக்கள் ஒரு சமூகப் பூச்சிகள். இவை கூட்டமாக வசிக்கும் வாழிடம் தேன்கூடு என்று அழைக்கப்படுகிறது. இவை ஒரு குழுவாக வசிக்கின்றன. வேலையின் அடிப்படையில் அவற்றுள் பிரிவுகள் உண்டு.

1. தேனீக்களின் வகைகள்

தேனீக்களின் குழு ஒன்றில் மூன்று வகையான தேனீக்கள் உண்டு. அவையாவன: இராணித் தேனீ, ஆண் தேனீ மற்றும் வேலைக்காரத் தேனி.

 இராணித் தேனீ

தேனீக்களின் குழுவிலுள்ள மிகப் பெரிய உறுப்பினர் ராணித் தேனீயாகும். ஒரே ஒரு இராணித் தேனீ மட்டுமே ஒரு குழுவில் காணப்படும். இது இனப்பெருக்கத் திறனுடையது. இது வளமான முட்டையிலிருந்து உருவாகின்றது. இராணித் தேனீயே முட்டையிடக்கூடியதாகும். இரு ஒருநாளைக்கு 2000 முட்டைகள் வரை இடக்கூடியது. இதன் வாழ்நாள் 3-4 வருடங்கள் ஆகும்.

 ஆண் தேனீ

ஆண் தேனீக்கள் இனப்பெருக்கத் திறனுடையவை. இவை கருவுறாத முட்டையிலிருந்து உருவாகின்றன. இவை இராணித் தேனீயைக்காட்டிலும் சிறியதாகவும், வேலைக்காரத் தேனீக்களைக்காட்டிலும் பெரியதாகவும் உள்ளன. இராணித் தேனீ உற்பத்தி செய்த முட்டைகளைக் கருவுறச் செய்வதே இதன் முக்கியப் பணியாகும். தேன் கூட்டின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவதற்கும் இவை உதவுகின்றன. தேனீக்களின் குழு ஒன்றில் ஆண் தேனீக்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில், சிலவேளைகளில் ஆயிரக்கணக்கில் இருக்கும். ஒரு ஆண் தேனியின் வாழ்நாள் 57 நாட்களாகும்.

 வேலைக்காரத் தேனீ

இவை இனப்பெருக்கம் செய்ய இயலாத பெண் தேனீக்கள். இவை தேனீக்களின் குழுவிலுள்ள மிகச் சிறிய உறுப்பினர்கள். இத்தேனீக்கள் மிகவும் சுறுசுறுப்பானவை. தேன் சேகரித்தல், இளம் தேனீக்களைக் கவனித்துக்கொள்ளல், கூட்டைச் சுத்தப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், மற்றும் கூட்டின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்ததல் ஆகியவை இவற்றின் பணிகளாகும். இவற்றின் வாழ்நாள் ஆறு வாரங்களாகும்.

உங்களுக்குத் தெரியுமா?

 ஒரு வேலைக்காரத் தேனீ ஒரு பவுண்ட் தேன் சேகரிக்க 90,000 மைல் (பூமியை மூன்று முறை சுற்றிவரும் தூரம்) பயணிக்க வேண்டும்.

 தேனீக்கள் மணிக்கு 6 மைல் வேகத்தில் ஒரு நாளைக்கு 15 மைல்கள் பறக்கக்கூடியவை.

2. தேனீக்களிடமிருந்து பெறப்படும் பயனுள்ள பொருள்கள்

தேன் மற்றும் தேன் மெழுகு ஆகியவை தேனீக்களிடமிருந்து பெறப்படுகின்றன. தேனீயின் விஷம், பிசின் மற்றும் உறைகூழ் (ஜெல்லி) ஆகியவை தேனீக்களிடமிருந்து பெறப்படும் பிற பொருள்களாகும்.

 தேன்

தேன் ஒரு இனிப்பான, பிசுபிசுப்பான, சத்து நிறைந்த இயற்கையான உணவுப்பொருள் ஆகும். இதில் புரதம், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் மாங்கனீஸ் போன்றவை உள்ளன. தேனின் பயன்கள் பின்வருமாறு.

உங்களுக்குத் தெரியுமா?

தேன் ஒரு அற்பதமான இயற்கை இனிப்பு ஆகும். இது திரவத் தங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

 தேன் கிருமிநாசினிப் பண்பையும், பாக்டீரியா எதிர்ப்புப் பண்பையும் பெற்றுள்ளது. மேலும், இது நோய் எதிர்ப்புத் திறனையும் கொண்டது.

 இது இரத்தத்திலுள்ள சிவப்பு நிறமியான ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்தில் இது பயன்படுகிறது.

 இது இருமல், காய்ச்சல் மற்றும் சளித் தொல்லையிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் தொண்டைப் புண்ணைக் குணப்படுத்துகிறது.

 இது செரிமானம் மற்றும் பசியைத் தூண்டுகிறது. இது நமது உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்களைத் தருகிறது.

 தேன் மெழுகு

தேன் கூட்டின் அறைகளை அமைப்பதற்காக வேலைக்காரத் தேனீக்களால் தேன் மெழுகு சுரக்கப்படுகிறது தேன் மெழுகின் பயன்கள் சில பின்வருமாறு.

 இது அழகுசாதனப் பொருள்கள் தயாரிப்பில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

 ஷீ மெருக (பாலிஷ்) குளிர் ஒப்பனைக் களிம்பு, உதட்டுச்சாயம், உயவுப் பொருள்கள் மற்றும் மெழுகுவர்த்தி தயாரிப்பில் இது பயன்படுகிறது.

 இது களிம்பு மருந்து தயாரிப்பிலும், மருத்துவத் துறையிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

III. இயற்கை உரம்

இயற்கை உரம் என்பது உரமாகப் பயன்படக்கூடிய ஒரு கரிமப் பொருள் ஆகும். இது பொதுவாக விலங்கு அல்லது தாவரக் கழிவுகளிலிருந்து பெறப்படுகிறது. இது நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களை மண்ணில் அதிகரிக்கச் செய்து மண்ணை வளமிக்கதாக மாற்றுகின்றது. இது இயற்கையானதும், விலை குறைவானதும் ஆகும்.

1. இயற்கை உரங்களின் வகைகள்

விலங்கு எரு, பசுந்தாள் உரம் மற்றும் மக்கிய தொழு உரம் ஆகியவை இயற்கை உரங்களாகும்.

 விலங்கு எரு

விலங்குப் பண்ணைகளிலிருந்து பெறப்படும் கழிவுகளே பொதுவான விலங்கு எரு ஆகும். இது பொதுவாக பன்றி, மாடு, செம்மறி ஆடு, குதிரை, கோழி, வான்கோழி, முயல் போன்ற விலங்குகளின் கழிவுகளாகிய சாணம் சிறுநீரைக் மற்றும் கொண்டுள்ளது. பாஸ்பரஸ், நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துப் பொருள்கள் இதில் அதிகம் உள்ளன. இது நீர் மற்றும் சத்துப்பொருள்களை அதிகளவு தக்கவைத்துக்கொள்ளும் தன்மையை மண்ணில் அதிகரிக்கின்றது.

செயல்பாடு 5

ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் உங்கள் பள்ளி வளாகத்தில் ஒரு உரக்குழியைத் தோண்டவும். உணவு மற்றும் காய்கறிக் கழிவுகள் போன்ற இயற்கைக் கழிவுகளை அதனுள் போட்டு அதை மண்ணால் மூடவும். மூன்று வாரங்கள் கழித்து அது உரமாக மாறி இருக்கும். அதை உங்கள் பள்ளியில் உள்ள செடிளுக்கு உரமாக உபயோகிக்கலாம்.

 பசுந்தாள் உரம்

பயிரிடுவதற்கு முன் தாவரங்களின் இலை, சிறு கிளைகள், குத்துச் செடிகள், புதர்ச் செடிகள் போன்றவற்றை வயலில் சேர்த்து அவற்றை மக்கச் செய்வதன் மூலம் இந்த உரம் பெறப்படுகிறது. கொழுஞ்சிச் செடி போன்ற பருப்புவகைத் தாவரங்கள் இதற்குப் பயன்படுகின்றன. இத்தாவரங்கள் விவசாய நிலங்களிலேயே வளர்க்கப்பட்டு, மண்ணுடன் சேர்த்து உழப்படுகின்றன. இவை தாவரங்களின் வேர் முண்டுகளில் நைட்ரஜனைத் தக்கவைக்கின்றன. இவை களைச்செடிகளை அழிப்பதோடு மண் அரிப்பையும் தடுக்கின்றன.

 மக்கிய தொழு உரம்

பயிர்களின் சக்கை, விலங்குக் கழிவு மற்றும் உணவுக் கழிவுகள் போன்ற கரிமப் பொருள்களை பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகளால் சிதைவுறச் செய்வதன் மூலம் பெறப்படுகின்றன. இந்த நுண்ணுயிரிகள் கரிமப் பொருள்களை எளிய மூலக்கூறுகளாக மாற்றுகின்றன.

IV. மண்புழு உரம் தயாரித்தல்

கரிமக் கழிவுகளாகிய இலைகள், மரத் துண்டுகள் போன்றவற்றை மண்புழுவைக் கொண்டு சத்துமிக்க உரமாக மாற்றுவது மண்புழு உரமாக்குதல் எனப்படும். இதன்மூலம் நாம் கழிவுகளை சுத்தமான மற்றும் சுகாதாரமானமுறையில் வளமான உரமாக மாற்றமுடிகிறது. இது சுற்றுச்சுழலை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. மண்புழுக்கள் கரிமக் கழிவுகளை உண்டு அவற்றின் எச்சங்களை சிறு உருண்டைகளாக வெளியேற்றுகின்றன. இது மண்புழு உரம் எனப்படும். இது மண்ணிற்கு சிறந்த உரமாகி மண்ணின் தன்மையை மேம்படுத்துகிறது.

1. மண்புழு உரம் தயாரிக்க உபயோகப்படுத்தப்படும் பொருள்கள்

உயிரியல் முறையில் சிதையக்கூடிய கரிமப் பொருள்கள் மண்புழு உரம் தயாரிக்கப் பயன்படுகின்றன. அப்பொருள்களுள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

● வைக்கோல், உமி, தேயிலைக் கழிவு மற்றும் புகையிலைக் கழிவு போன்ற பயிர்க் கழிவுகள்.

● பழம் மற்றும் காய்கறிக் கழிவுகள்.

● மாட்டுச் சாணம், பறவைகளின் எச்சம், வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு போன்ற விலங்குகளின் கழிவுகள்.

2. மண்புழு உரத்தின் நன்மைகள்

● மண்புழு உரம் தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களான நைட்ரஜன், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்களை அதிக அளவு கொண்டுள்ளது.

உங்களுக்குத் தெரியுமா?

நாம் காணக்கூடிய சாதாரண மண்புழுக்கள் மண்புழு உரம் தயாரித்தலில் பயன்படுத்தப்படுவதில்லை. கூட்டாக வாழ்ந்து பெருகும் தன்மையுடைய சிறப்ப வகை மண்புழுக்களை இதற்கு பயன்படுத்தப்படுகின்றன. ரெட் விக்லர்ஸ் (Red wi]]lars), ஐரோப்பிய க்ராலர்ஸ் (European night crawlers), ஆப்பிரிக்க நைட் க்ராலர்ஸ் (African night crawlers) போன்ற மண்புழு வகைகள் பொதுவாக இதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

● நீர் உறிஞ்சும் தன்மையை மேம்படுத்தி மண் அரிமானம் ஏற்படாமல் தடுக்கிறது.

● தாவர வளர்ச்சியை மேம்படுத்தி, தாவரங்களில் நோய் வராமல் தடுக்கிறது. மேலும் மண்ணில் காற்று இடைவெளியை அதிகரித்து, நிரைத் தக்கவைத்துக்கொள்ளும் தன்மையையும், காற்றோட்டத்தையும் அதிகரிக்கின்றது.

● கழிவு நீர் சுத்திகரிப்பில் இது பயன்படுகிறது.

● செயற்கை உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கிறது.

கேள்வி பதில்

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. கீழ்க்காண்பவற்றுள் அதிக அளவில் பால் கொடுக்கும் கால்நடை எது?

அ. பசுமாடு

ஆ. யாக் எருமை

இ. எருமை மாடு

ஈ. வெள்ளாடு

[விடை : இ. எருமை மாடு]

2. பறவைப் பண்ணைகளில் ——— உற்பத்தி செய்யப்பட்டு வளர்க்கப்படுகின்றன.

அ. கோழிகள்

ஆ. பசு மாடுகள்

இ. பறவை இனங்கள்

ஈ ஆடுகள்

[விடை : இ. பறவை இனங்கள்]

3. ———– ஒரு மிகச்சிறந்த உரம்.

அ. மண்புழு உரம்

ஆ. பழங்கள்

இ. செயற்கை உரம்

ஈ. யூரியா

[விடை : அ. மண்புழு உரம்]

4. ——— வேளாண்மையை விட இலாபகரமானது.

அ. பால் பண்ணை

ஆ. பண்ணைத் தொழில்

இ. பறவைப் பண்ணை

ஈ. வேளாண்மை

[விடை : ஆ. பண்ணைத் தொழில்]

5. கோழிப் பண்ணைத் தொழிலில் தமிழ்நாட்டின் ———- மாவட்டம் சிறந்து விளங்குகிறது.

அ. அரியலூர்

ஆ. சேலம்

இ. நாமக்கல்

ஈ. தஞ்சாவூர்

[விடை : இ. நாமக்கல்]

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. இந்தியாவில் ———- வகையான கால்நடை இனங்கள் உள்ளன.

விடை : 26

2.  ———– ன் பால் பசுமாட்டின் பாலைவிட அதிக ஊட்டச்சத்து கொண்டது.

விடை : எருமை மாட்டின்

3. —— இல் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது.

விடை : சக்கை

4. பறவைப் பண்ணைகளில் உள்ள பறவைகளின் எச்சம் ——— ஆகப் பயன்படுகிறது.

விடை : உரம்

5. மண்புழு உரமாக்கல் என்பது ——  ஐ சத்து நிறைந்த உரமாக மாற்றுவதாகும்.

விடை : கரிமக் கழிவுகள்

III. பொருத்துக

1. சுர்தி – முட்டை

2. வெண்மைப் புரட்சி – போக்குவரத்து

3. முட்டைக் கோழி – பருப்புவகைத் தாவரங்கள்

4. பசுமை உரம் – எருமை மாடு

5. கால்நடைகள் – பால்

விடை :

1. சுர்தி – எருமை மாடு

2. வெண்மைப் புரட்சி – பால்

3. முட்டைக் கோழி – முட்டை

4. பசுமை உரம் – பருப்புவகைத் தாவரங்கள்

5. கால்நடைகள் – போக்குவரத்து

IV. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக.

1. பண்ணைத் தொழில் வியாபார நோக்கில் செய்யப்படுகிறது.

விடை : சரி

2. மண்புழு உரத்தை கழிவுநீர் சுத்திகரிப்பிற்குப் பயன்படுத்தலாம்.

விடை : சரி

3. பருப்புவகைத் தாவரங்கள் தாவர இலையில் நைட்ரஜனைச் சேமித்து வைக்கின்றன.

விடை : தவறு

பருப்பு வகைத் தாவரங்கள் வேர் முண்டுகளில் நைட்ரஜனைச் சேமித்து வைக்கின்றன.

4. நாமக்கல் மாவட்டம் பால் பண்ணைக்குப் பெயர்பெற்றது.

விடை : தவறு

நாமக்கல் மாவட்டம் கோழிப் பண்ணைக்குப் பெயர் பெற்றது.

5. முர்ரா என்பது எருமை மாட்டின் ஒரு இனம்.

விடை : சரி

V. சுருக்கமாக விடையளி.

1. பண்ணை வளர்ப்பு என்றால் என்ன?

விடை :

பண்ணை வளர்ப்பு என்பது தாவரங்கள் மற்றும் விலங்குகளை வளர்க்கும் முறையாகும்.

2. பண்ணை வளர்ப்பின் வகைகளை எழுதுக.

விடை :

விவசாயம் செய்வது, பலவிதமான பயிர்களையும் விலங்குகளையும் வளர்ப்பது, பால்பண்ணை , பறவைப் பண்ணை , தேனீ வளப்பு ஆகியவை பண்ணை வளர்ப்பின் வகைகள் ஆகும்.

3. பறவைப் பண்ணை குறித்து எழுதுக.

விடை :

பறவைப் பண்ணையில் பறவை இனங்கள் அவற்றின் முட்டை மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. கோழி, வாத்து, தாரா, வான்கோழி மற்றும் சில வகை புறாக்கள் பொதுவாக இங்கு வளர்க்கப்படுகின்றன. இவற்றுள் 90% கோழிகளே அதிகம் வளர்க்கப்படுகின்றன. இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகள் இறைச்சிக் கோழிகள் (பிராய்லர்) எனவும், முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிகள் முட்டைக் கோழிகள் (லேயர்ஸ்) எனவும் அழைக்கப்படுகின்றன.

4. விலங்கு எரு என்றால் என்ன?

விடை :

விலங்குப் பண்ணைகளில் இருந்து பெறப்படும் கழிவுகளே பொதுவான விலங்கு எரு ஆகும். இது பொதுவாக பன்றி, ஆடு, மாடுகள், செம்மறி ஆடு, குதிரை, கோழி, வான்கோழி, முயல் போன்ற விலங்குகளின் கழிவுகளாகிய சாணம் மற்றும் சிறுநீரைக் கொண்டுள்ளது. பாஸ்பரஸ், நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துப் பொருள்கள் இதில் அதிகம் உள்ளன.

5. மண்புழு உரம் – வரையறு.

விடை :

மண்புழுக்கள் கரிமக் கழிவுகளை உண்டு அதன் எச்சங்களை சிறு உருண்டைகளாக வெளியேற்றுகின்றன. இது மண்புழு உரம் எனப்படும்.

VI. விரிவாக விடையளி.

1. கால்நடைகளின் பயன்கள் யாவை?

விடை :

● பசு நமக்கு பால் தருகிறது. பசுவின் பாலில் நமக்குத் தேவையான தாது உப்புகள் உள்ளன.

● எருதுகள் நிலத்தை உழவும், அறுவடை செய்யவும், போர் அடிக்கவும் உதவி செய்கின்றன.

● கால்நடைகள் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப் படுகின்றன.

● மாட்டுச் சாணம் ஒரு சிறந்த இயற்கை உரம். அது எரிபொருளாகவும். உயிரி வாயு தயாரிப்பதற்கும் பேயன்படுகிறது.

● பஞ்சகவ்யம் என்பது ஒரு ஆயுர்வேத மருந்தாகும். இது பூச்சிகளையும். பூஞ்சைகளையும் கட்டுப்படுத்துவதற்காக விவசாயத்தில் பயன்படுத்தப்படுகிறது. இது மாட்டின் சாணம் மற்றும் சிறுநீர், கறந்த பால், தயிர், வெல்லம் மற்றும் நெய் ஆகியவற்றின் கலவை ஆகும்.

● கால்நடைகளின் தோலில் இருந்து தோல் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

2. பறவைப் பண்ணையை எவ்வாறு நிர்வகிப்பாய்?

விடை :

● பண்ணைகளில் வளரும் பறவைகளுக்கு மிகவும் தூய்மையான காற்றோட்டம் தேவை. நோய் வராமல் தடுப்பதற்கு கீழ்கண்ட முறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.

● பண்ணைகளில் உள்ள பறவைக்கூடுகள் சுத்தமாகவும் பூச்சிகள் இல்லாதவாறும் பாதுகாக்கப்படவேண்டும். நல்ல காற்றோட்டம் இருப்பதற்கு ஏற்றவாறு ஜன்னல்கள் இருக்கவேண்டும்.

● அதிக முட்டைகள் இடுவதற்கு நல்ல வெளிச்சம் அவசியம். பறவைகளுக்கு தூய்மையான நீர் கொடுக்கப்படவேண்டும். ஏற்ற காலத்தில் போடவேண்டிய தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். இது நோய் வராமல் தடுக்கும்.

செயல்பாடு 1

உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள கால்நடைப் பண்ணைக்குச் சென்று அதனைப் பார்வையிடவும். அங்கு வளர்க்கப்படும் கால்நடைகளைக் குறித்து ஒரு பட்டியல் தயாரிக்கவும். மேலும், அங்கு தயாரிக்கப்படும் வாருள்கள் குறித்து தெரிந்து கொள்ளவும்.

செயல்பாடு 2   

தமிழ்நாட்டில் காணப்படும் மாட்டினங்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ஆசிரியரின் உதவியுடன் அவை எந்த மாவட்டத்தில் காணப்படுகின்றன என்று கண்டுபிடிக்கவும்.

செயல்பாடு 3

உங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவ மையத்திற்குச் சென்று கால்நடைகளில் தோன்றும் பொதுவான நோய்கள் குறித்து அறிந்து கொள்க. மேலும் அவற்றைத் தடுக்கும் முறைகளைப் பற்றியும் அறிந்து கொள்க.

செயல்பாடு 4

கீழேகொடுக்கப்பட்டுள்ளவார்த்தைகளைக் கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்புக.

(எண்ணெய் வித்துக்கள், முட்டை, தேன், உணவு தானியங்கள், மீன்)

பசுமைப் புரட்சி : உணவு தானியங்கள்

நீலப் புரட்சி : மீன்

வெள்ளிப் புரட்சி : முட்டை

தங்கப் புரட்சி : தேன்

மஞ்சள் புரட்சி : எண்ணெய் வித்துக்கள்

செயல்பாடு 5

ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் உங்கள் பள்ளி வளாகத்தில் ஒரு உரக்குழியைத் தோண்டவும். உணவு மற்றும் காய்கறிக் கழிவுகள் போன்ற இயற்கைக் கழிவுகளை அதனுள் போட்டு அதை மண்ணால் மூடவும். மூன்று வாரங்கள் கழித்து அது உரமாக மாறி இருக்கும். அதை உங்கள் பள்ளியில் உள்ள செடிளுக்கு உரமாக உபயோகிக்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *