Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 5th Tamil Books Chapter 8 4

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 8 4

தமிழ் : பருவம் 3 இயல் 2 : அறம், தத்துவம், சிந்தனை

இலக்கணம் : மயங்கொலிச்சொற்கள்

கற்கண்டு

மயங்கொலிச்சொற்கள்

மலர்: என்னப்பா, இது?

வளர்: நீதானே தவளையைக் கொண்டுவரச் சொன்னே?

மலர்: என்னது? நான் தண்ணீர் பிடிக்க தவலை கேட்டா, நீ தண்ணீரில் வாழும் தவளையைக் கொண்டு வந்திருக்கிறியே?

மலர்:  பால் குக்கர்கிட்டே நின்னுக்கிட்டு எதுக்கு மேலே இருக்கிற விளக்கையே பார்த்துக்கிட்டு இருக்கே?

வளர்: அம்மாதான் சொன்னாங்க, குக்கரிலிருந்து ஒளி வந்தவுடனே அடுப்பை அணைக்கணும்னு, அதான் எப்ப விளக்கிலிருந்து ஒளி வரும்னு பார்த்துக்கிட்டு இருக்கேன்.

மலர்: அட, குக்கரிலிருந்து ஒலி (விசில் சத்தம்) தான் வரும். ஒளி வருமா என்ன?

மலர்:  என்னப்பா இது, வெறுங்கைய வீசிக்கிட்டு வர்றே? நான் கேட்டது எங்கே?

வளர்: ஏன்? இப்ப என்னாச்சு? நீ கேட்டதைத்தான் நான் கையிலேயே போட்டிருக்கிறேனே!

மலர்:  அட, நான் மீன் பிடிக்க வலையச் சொன்னா நீ கையில போடற வளையச் சொல்றியே?

மலர்:  என்னப்பா, எப்பவும் இந்தக் கரையிலதான் உட்கார்ந்து படிப்பே இப்ப அந்தக் கரையிலபோய் உட்கார்ந்திருக்கிறியே!

வளர்: அம்மாதான் சொன்னாங்க, அக்கரையிலே படிச்சா நல்லா முன்னுக்கு வரலாம்னு.

மலர்:  அட, அம்மா சொன்னது அக்கரையில்லேஅக்கறை, அதாவது கவனமாப் படிக்கணும்னுதான் சொல்லியிருப்பாங்க. அதைப்போய் நீ ?

மலர்:  என்னப்பா, இங்கே நின்னுக்கிட்டுப் பனைமரத்தையே பார்த்துக்கிட்டு இருக்கே?

வளர்: அப்பாதான் பனைய எடுத்துட்டு வா, வேலி கட்டணும்னு சொன்னாங்க அதான், இவ்வளவு உயரமா இருக்கே இதை எப்படி எடுத்துட்டுப் போறதுன்னு பார்த்துக்கிட்டு இருக்கேன்

மலர்:  அடப் போப்பா, எப்பப் பார்த்தாலும் தப்புத் தப்பாவே புரிஞ்சுக்கிற, அப்பா சொன்னது பணை. அதாவது, மூங்கில். மற்றவங்க பேசுற பேச்சில வர்ற சொற்களோட ஒலிப்பை நீ கவனமாக் கேட்கணும். அதே சொல்லை நீயும் சரியாக ஒலித்துப் பழகணும் அப்பத்தான் இந்த மாதிரி தவறெல்லாம் ஏற்படாது, சரியா?

மேற்கண்ட உரையாடல்களைப் படித்தீர்களா? இவை, படித்துச் சிரிப்பதற்கு மட்டுமல்ல; சிந்திப்பதற்கும்தான். நாம் பேசும்போதும் எழுதும்போதும் ஏற்படுகின்ற ஒலிப்புப் பிழைகள்தாம் இவை. இதனால், நாம் பொருளைப் புரிந்துகொள்வதில் குழப்பம் ஏற்படும். இதனைத் தவிர்க்க, நாம் தெளிவாகவும் சரியாகவும் ஒலித்துப் பழகவேண்டும். நமக்கு மயக்கம்தரக்கூடிய எழுத்துகளை அறிந்துகொள்வோம்.

இந்த எழுத்துகளைத் திரும்பத் திரும்பநன்கு ஒலித்துப் பழக வேண்டும். இவ்வெழுத்துகள் இடம்பெற்றுள்ள சொற்களின் பொருள் வேறுபாடு உணரவேண்டும். அப்போதுதான் பிழையைத் தவிர்க்க முடியும். இந்த எழுத்துகளை ஒலிக்கும்போது, அவை எப்படிப் பிறக்கின்றன என்பதுபற்றி மேல்வகுப்பில் விரிவாகப் படிப்பீர்கள்.

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. சாலையில் பள்ளம் இருந்ததால், ———- பேருந்தை மெதுவாக ஓட்டிச்சென்றார்.

அ) ஓட்டுநர்

ஆ) ஓட்டுனர்

இ) ஓட்டுணர்

[விடை : அ) ஓட்டுநர்]

2. கடவூருக்குச் செல்ல எந்த ——– ப்போக வேண்டும்?

அ) வலியாக

ஆ) வளியாக

இ) வழியாக

[விடை : இ) வழியாக]

3கூண்டிலிருந்த ——– யைச் சுதந்திரமாகப் பறக்கவிட்டான் எழிலன்.

அ) கிலி

ஆ) கிளி

இ) கிழி

[விடை : ஆ) கிளி]

4. நீரில் துள்ளி விளையாடுகிறது …………… மீன்.

அ) வாளை

ஆ) வாலை

இ) வாழை

[விடை : அ) வாளை]

5. தாய்ப்பசு இல்லாமையால் நாளடைவில் கன்று ——– ப்போனது.

அ) இழைத்து

ஆ) இளைத்து

இ) இலைத்து

[விடை : ஆ) இளைத்து]

6. கடல் …………….யில் கால் நனைத்து மகிழ்வது அனைவருக்குமே பிடிக்கும்.

அ) அளை

ஆ) அழை

இ) அலை

[விடை : இ) அலை]

ஆ. பொருத்தமான சொல்லை நிரப்பித் தொடர்களைப் படித்துக்காட்டுக.

1. நடனம் என்பதுஒரு …………………… (களை /கலை/கழை)

விடை : கலை

2. சோளம் என்பதுஒரு ………………… (தினை /திணை )

விடை : தினை

3. பெட்ரோல் என்பதுஓர் …………………. (எரிபொருள்/எறிபொருள்)

விடை : எரிபொருள்

4. ஒட்டகம் என்பதுஒரு …. ……………… (விளங்கு/விலங்கு)

விடை : விலங்கு

5. தென்னை என்பதுஒரு ………………… (மறம்/மரம்)

விடை : மரம்

இ. வண்ண எழுத்துகளில் உள்ள சொற்களைச் சரியான ஒலிப்புடன் படித்துக்காட்டுக.

முல்லை: நிலா, நீ வரைந்த படம் மிகவும் அழகாக உள்ளது, வெண் பஞ்சு போன்ற மேகங்கள் சூழ்ந்த மலை; அம்மலையினின்று வீழும் பாலாவி போன்ற அருவி; பசுமை மிகுந்த மரம், செடி, கொடிகள், துள்ளித் திரியும் புள்ளி மான்கள்; சிறகடிக்கும் வண்ணப் பறவைகள், மரக்கிளைகளில் ஊஞ்சலாடும் குரங்குக் குட்டிகள் அப்பப்பா! நீ எப்படி இவ்வாறு வரையக் கற்றுக் கொண்டாய்?

நிலா: இதிலென்ன புதுமை? முந்தைய வகுப்புத் தமிழ்ப் பாடநூல்களில் வரைந்து பார்ப்போமா என்றொரு பயிற்சி இருந்ததே. நினைவிருக்கிறதா? அந்தப் பயிற்சிகளை நான் மிகவும் ஆர்வத்துடன் செய்வேன். அதனால்தான் இப்போது நன்றாக வரைகிறேன் என்று நினைக்கிறேன்.

ஈ. விடுபட்ட இடங்களில் உரிய சொற்களை எழுதுக.

1. ஆற்றின் ஓரம் கரை

ஆடையில் இருப்பது கறை

2. மடியைக் குறிப்பது குறங்கு

மரத்தில் தாவுவது குரங்கு

3. பரந்து இருப்பது பரவை

பறந்து செல்வது பறவை

4. மரத்தை அறுப்பது அரம்

மனிதர் செய்வது அறம்

5. சுவரில் அடிப்பது ஆணி

மாதத்தில் ஒன்று ஆனி

மொழியை ஆழ்வோம்

அ. கேட்டல்

● இனிய, எளிய, ஓசைநயம் மிக்க பாடல்களைக் கேட்டு மகிழ்க.

● திருவிழாக்களில் நடத்தப்படும் மேடை நாடகங்கள், வானொலி, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் வரலாற்று நிகழ்ச்சிகளைக் கேட்டு மகிழ்க.

ஆ. பேசுதல்

 சிலம்பின் வெற்றிஎன்னும் தலைப்பில் பேசுவதற்கு ஏற்ற உரை தயாரிக்க.

விடை

அவையோர்க்கு வணக்கம்! நான் ‘சிலம்பின் வெற்றி பற்றிப் பேச வந்துள்ளேன்.

கோவலன் தன் தீவினைப் பயனால் செல்வங்களை இழந்துவிட்டான். – பொருளீட்டுவதற்காக மதுரை நகருக்குக் கண்ணகியுடன் வந்தான். கோவலன் மட்டும் கண்ணகியின் ஒரு காற்சிலம்பை விற்பதற்காக எடுத்துக் கொண்டு சென்றான். ஆனால் அங்கு அவன் அரசியின் காற்சிலம்பைத் திருடிவிட்டான் என்று பொய்க் குற்றச்சாட்டுக்கு ஆளானான். அதனால் மரண தண்டனை பெற்றான்.

இதையறிந்த கண்ணகி அரண்மனைக்குச் சென்றாள். வாயிற்காவலன் அரசனிடம், “தலைவிரி கோலத்துடன் ஒரு பெண் வந்த நிற்பதாகவும், நீதி கேட்டு வந்திருப்பதாகவும்” கூறினான். மன்னன் “அவளை உள்ளே அனுப்பு” என்று கூறினான்.

ஆன்றோர்களும் சான்றோர்களும் நிறைந்திருக்கும் அவையிலே நடுநாயகமாய் மன்னர் வீற்றிருக்க அரசவைக்குள் நுழைந்தாள் கண்ணகி. மன்னன், “நீ யார்? உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்டான்.

கண்ணகி, “ஆராயாது நீதி வழங்கிய மன்னனே! ஒரு புறாவுக்காக தன் உடலையே தந்த சிபி மன்னனும், பசுவின் துயர் போக்க தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்த புகார் நகரைச் சார்ந்தவள் நான். கண்ணகி என்பது என் பெயர். அவ்வூரில் பழியில்லாச் சிறப்பினையுடைய புகழ்மிக்க மாசாத்துவான் மகனாகிய கோவலன் என்பானின் மனைவி நான். மன்னன் ஏளனமாக “கோவலனின் மனைவியா நீ?” என்றான்.

கண்ணகி, “என் கணவனை இகழ்வதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது? ஊழ்வினைப் பயனால் உன் ஊருக்கு வந்து என் கால் சிலம்பை விற்பதற்காக வந்த என் கணவனைக் கொன்று விட்டாயே, நீ செய்தது தகுமா?” என்று மன்னனிடம் கேட்டாள்.

“கள்வனைக் கொல்வது கொடுங்கோலன்று. இதை அனைவரும் அறிவர்” என்று மன்னன் கூறினான். “என் கணவன் கள்வனல்லன்; அவனிடமிருந்த சிலம்பும் அரசிக்குரிய சிலம்பன்று; அதன் இணைச் சிலம்பு இதோ என்னிடம் உள்ளது. என் கால்சிலம்பின் பரல் மாணிக்கக் கற்களால் ஆனது” என்று கண்ணகி கூறினாள்.

மன்னன் “தன் அரசியின் காற்சிலம்பு முத்துப்பரல்களால் ஆனது” என்று கூறினான். பிறகு , கோவலனிடமிருந்து பெற்ற காற்சிலம்பை எடுத்து வரச் செய்தான். கண்ணகி அச்சிலம்பை எடுத்துத் தரையில் போட்டு உடைத்தாள். அதிலிருந்த மாணிக்க கல் ஒன்று அரசனின் முகத்தில் பட்டுத் தெறித்து விழுந்தது.

மன்னன் தன் தவற்றை உணர்ந்தான். “யானோ அரசன் யானே கள்வன்” என்று கூறித் தன்னால் தன் குலத்திற்கு இழுக்கு ஏற்பட்டதாக எண்ணி உயிர் துறந்தான்.

 சிலப்பதிகார வழக்குரை நிகழ்ச்சியில் வரும் கண்ணகிபோல் பேசிக்காட்டுக.

இ. படித்தல்

● பேராசையால் பேரிழப்பு ஏற்படும் என்னும் தலைப்பில் கதை எழுதி அதனை வகுப்பில் படித்துக்காட்டுக.

● புத்தகப் பூங்கொத்திலிருந்து அறமுணர்த்தும் கதையொன்றைப் படித்துக்காட்டுக.

ஈ. எழுதுதல்

1. சொல்லக்கேட்டு எழுதுக.

1. அன்னையும் தந்தையும் தெய்வம்

2. கல்வியைக் கசடறக் கற்றிட வேண்டும்.

3. தவறிழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்கவேண்டும்

2. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

1. ஆயிரம் – தற்பொழுது ஆயிரம் ரூபாய் நோட்டு வழக்கத்தில் இல்லை.

2. உண்மை – நாம் எப்போதும் உண்மையைப் பேச வேண்டும்.

3. புகார் நகரம் – கண்ணகி புகார் நகரில் வாழ்ந்தவள்.

4. ஆடுகள்- ஆடுகள் மந்தை மந்தையாய் செல்கின்றன.

3. கீழ்க்காணும் சொற்றொடர்களைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக

கல்வி கண் போன்றது

நீதி . தவறாதவன் அரசன்

சிலம்பின் பரல் முத்துகளால் ஆனது

ஏழைக்கிழவி பணப்பையுடன் வந்தாள்

தீங்கு செய்தால் தீமை விளையும்

1. தீங்கு செய்தால் என்ன நேரிடும்?

விடை

தீங்கு செய்தால் தீமை விளையும்.

2. சிலம்பின் பரல் எவற்றால் ஆனது?

விடை

சிலம்பின் பரல் முத்துகளால் ஆனது.

3. கல்வி எதனைப் போன்றது?

விடை

கல்வி கண் போன்றது.

4. நீதி தவறாதவன் யார்?

விடை

நீதி தவறாதவன் அரசன்.

5. பணப்பையுடன் வந்தது யார்?

விடை

ஏழைக்கிழவி பணப்பையுடன் வந்தாள்.

4. உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

புறநானூறு என்னும் நூலில் அறப்போர் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. அரசன் ஒருவன் மற்றொரு நாட்டு அரசன்மீது போர் தொடுக்கும் முன்பு, பசுக்களையும், அறவோரையும், பெண்களையும், பிணியாளர்களையும் போர் நிகழும் இடத்தைவிட்டுப் புறத்தே போய்விடும்படி எச்சரித்த பின்னரே படையெடுப்பு நிகழும். இச்செய்தி முதுகுடுமிப்பெருவழுதியிடம் அமைந்திருந்ததாக நெட்டிமையார் என்னும் புலவர் பாராட்டுகிறார். மேலும், படையெடுத்து வரும் பகைவன் மீது, மறைந்துநின்று, அம்பு எய்தும் நிலையங்கள் ஞாயில்கள்’ என்று அழைக்கப்பட்டன.

1. உரைப்பகுதியில் இடம்பெற்றுள்ள நூலின் பெயர் யாது?

விடை

உரைப்பகுதியில் இடம்பெற்றுள்ள நூலின் பெயர் புறநானூறு.

2. நெட்டிமையாரால் பாராட்டப்படும் அரசர் யார்?

விடை

நெட்டிமையாரால் பாராட்டப்படும் அரசர் முதுகுடுமிப் பெருவழுதி ஆவார்.

3.ஞாயில்கள் என்றால் என்ன?

விடை

படையெடுத்து வரும் பகைவன் மீது மறைந்து நின்று, அம்பு எய்தும் நிலையங்கள் ‘ஞாயில்கள்’ என்று அழைக்கப்பட்டன.

4. பகைவன் – இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்.

விடை

பகைவன் இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் – நண்பன்.

5. ‘பிணி என்பதன் பொருள்

விடை

 ‘பிணி’ என்பதன் பொருள் – நோய்.

5. பொருத்தமான சொற்களால் பாடலை நிறைவு செய்க

(சொல்லிமீனவன்கடலிலேபார்த்ததேவலையில்விட்டதேசெய்ததே)

துள்ளி குதிக்கும் மீன் கடலிலே

வெள்ளியை வானத்தில் பார்த்ததே

மீனவன் வலை போட்டானே

வலையில் சிக்கிய மீனுமே

வெளியேற முயற்சி செய்ததே

நண்டு நண்பன் வந்ததே

வலையை வெட்டி விட்டதே

மீன் நன்றி சொல்லி சென்றதே.

மொழியோடு விளையாடு

1. பாடலில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக.

2. ஒரு சொல்லில் இரு தொடரை உருவாக்குவோம்.

1) திங்கள் வாரத்தின் இரண்டாம் நாள் திங்கள்

பௌர்ணமி அன்று வானில் முழு திங்களைப் பார்த்தேன்.

2) ஞாயிறு கிழக்கே உதிக்கும் ஞாயிறு

வாரத்தின் முதல் நாள் ஞாயிறு.

3. முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தித் தொடர் எழுதுக,

1. கல்விக் கண் திறந்தவர் போற்றப்படுகிறார் எனக் காமராசர்

கல்விக்கண் திறந்தவர் எனக் காமராசர் போற்றப்படுகிறார்.

2. கற்றிட வேண்டும் கல்வியைக் கசடறக்

விடை

கல்வியைக் கசடறக் கற்றிட வேண்டும்.

3. மனுநீதிச் சோழன் மன்னர் சோழமன்னர்களுள் புகழ்வாய்ந்த

விடை

சோழ மன்னர்களுள் புகழ் வாய்ந்த மன்னர் மனுநீதிச் சோழன்.

4. காற்சிலம்பு உடையது கண்ணகியின் மாணிக்கப்பரல்கள்

விடை

கண்ணகியின் காற்சிலம்பு மாணிக்கப்பரல்கள் உடையது.

5. தந்தையும் தெய்வம் அன்னையும்

விடை

அன்னையும் தந்தையும் தெய்வம்.

4. சொல்லிலிருந்து புதிய சொல் உருவாக்கலாமா?

நிற்க அதற்குத் தக…

● கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று அறிந்துகொள்வேன்.

எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

என்ற குறளின் பொருளை நன்கு உணர்ந்து செயல்படுவேன்.

● உண்மை, உழைப்பு, நேர்மை போன்றவை நம் வாழ்வை மேம்படுத்தும் என்பதைப் புரிந்துகொண்டேன்.

அறிந்து கொள்வோம்

 உலகின் முதல் தத்துவ ஞானி சாக்ரடீஸ்

 கணிதத் தத்துவத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர் பிளாட்டோ

செயல் திட்டம்

‘பேராசை தீமை தரும்’ என்ற தலைப்பில் குழு நாடகமாக நடிப்பதற்கு உரை எழுதி வருக.

கூட்டு விண்ணப்பம் எழுதுதல்

நூல் நிலையம்/ படிப்பகம் அமைக்க வேண்டி ஊர்ப்பொதுமக்களின் கூட்டு விண்ணப்பம் (மாதிரி)

அனுப்புநர்

ஊர்ப்பொது மக்கள்,

புலியூர் கிராமம்,

நீலகிரி மாவட்டம்.

பெறுநர்

மாவட்ட நூலக அலுவலர்,

நீலகிரி மாவட்டம்.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: நூல் நிலையம்/படிப்பகம் அமைக்க வேண்டி விண்ணப்பித்தல் – சார்பு.

வணக்கம், நீலகிரி மாவட்டம், புலியூர் கிராமத்தில் மூவாயிரம் மக்கள் வாழ்கின்றனர். பெரும்பாலானோர் எழுத்தறிவு உடையவர்கள். அதனால், தங்களின் ஓய்வு நேரத்தைப் பயனுள்ள வகையில் கழிப்பதற்கு நூலகம் அல்லது படிப்பகம் வேண்டும் என விரும்புகிறார்கள். நூலகம் அமைப்பதற்குத் தேவையான இடமும் கிராமத்தில் உள்ளது. ஆகவே, அறிவை விரிவு செய்யும் நூலகத்தை எங்களுக்கு விரைவில் அமைத்துத் தர வேண்டுகிறோம்.

தங்கள் உண்மையுள்ள,

ஊர்ப்பொது மக்கள்,

புலியூர் கிராமம், நீலகிரி.

கற்பவை கற்றபின்

● மயங்கொலி எழுத்துகள் இடம்பெறும் சொற்களை அடையாளம் காண்க.

● மயங்கொலிச் சொற்களின் பொருள் வேறுபாடு அறிக.

● மயங்கொலி எழுத்துகள் கொண்ட சொற்களை முறையாக ஒலித்தும் எழுதியும் பழகுக.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *