Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 5th Tamil Books Chapter 8 1

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 8 1

தமிழ் : பருவம் 3 இயல் 2 : அறம், தத்துவம், சிந்தனை

பாடல் : கல்வியே தெய்வம்

இயல் இரண்டு

பாடல்

அறம் / தத்துவம் / சிந்தனை

கற்றல் நோக்கங்கள்

❖ கல்வியின் இன்றியமையாமையை அறிந்து கொள்ளுதல்

❖ கல்வியறிவு பரந்துபட்ட விரிசிந்தனைக்கு வழிவகுக்கும் என்பதை உணர்தல்

❖ உலக உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல்

❖ நேர்மையாக வாழ்தலின் இன்றியமையாமையை உணர்ந்துகொள்ளுதல்

❖ மயங்கொலிச்சொற்களின் பயன்பாட்டை அறிந்து பயன்படுத்துதல்

கல்வியே தெய்வம்

அன்னையும் தந்தையும் தெய்வம் – இதை

அறிந்திட வேண்டும் நீயும்

கண்ணெனும் கல்வியும் தெய்வம் – இதைக்

கருத்தினில் கொள்வாய் நீயும்

பொன்னையும் மண்ணையும் விஞ்சும் – அந்தப்

புகழும் நம்மைக் கொஞ்சும்

நன்மையும் மென்மையும் தோன்றும் – நல

நயமதும் நம்மை அண்டும்

கல்வியைக் கற்றிட வேண்டும் – அதைக்

கசடறக் கற்றிட வேண்டும்

வல்லமை பெற்றிட வேண்டும் – நல்

வளமதை எட்டிட வேண்டும்

கற்றிடக் கற்றிட யாவும் – நல்

கணக்கென நெஞ்சில் கூடும்.

வெற்றிகள் ஆயிரம் சேரும் – புகழ்

வெளிச்சமும் மேனியில் ஊறும்

விண்ணையும் அளந்திட வைக்கும் – நம்மை

விடியலாய் எழுந்திட வைக்கும்

திண்மையும் வசப்பட வைக்கும் – மனதில்

தெளிவினைச் செழித்திட வைக்கும்

– பாரதிக்குமாரன்

சொல்பொருள்

விஞ்சும் – மிகும்

கசடற – குற்றம் நீங்க

திண்மை – வலிமை

அண்டும் – நெருங்கும்

ஊறும் – சுரக்கும்

செழித்திட – தழைத்திட

பாடல் பொருள்

இப்பாடல், கல்வி குறித்த விரிசிந்தனையைத் தருகிறது. அன்னை, தந்தை இவர்களுடன் நாம் கற்கும் கல்வியும் தெய்வமாகும். பொன்னையும் மண்ணையும்விட மேலானாது கல்வி. நமக்குப் புகழையும் தந்து நிற்கும், கல்வி கற்றால், நன்மையும் மென்மையும் நல்லருளும் நம்மை நெருங்கிவரும். ஆகையால், கல்வியைக் குற்றம் நீங்க கற்றிட வேண்டும். ஆற்றலையும் நல்ல வளத்தையும் நாம் பெறவேண்டும். நாள்தோறும் கற்றிட, கற்பன யாவும் மனக்கணக்கைப்போல் நெஞ்சில் பதியும். வெற்றி கிட்டும். புகழ் தோன்றும். விண்ணையும் அளக்கச் செய்யும், நம்மை விடியலாய் எழச் செய்யும். நம்மிடத்தே வலிமையையும் சேர்க்கும், மனத்தினில் தெளிந்த நல்லறிவை வளரச்செய்யும்.

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

‌1. கசடற‌ ‌-‌ ‌இச்சொல்லின்‌ ‌பொருள்‌ ‌………………….‌ ‌

அ)‌ ‌தவறான‌ ‌

ஆ)‌ ‌குற்றம்‌ ‌நீங்க‌ ‌

இ)‌ ‌குற்றமுடன்‌ ‌

ஈ)‌ ‌தெளிவின்றி‌ ‌

[விடை : ஆ)‌ ‌குற்றம்‌ ‌நீங்க‌] ‌

2. வளமதை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ)‌ ‌வள‌ ‌+‌ ‌மதை‌ ‌

ஆ)‌ ‌வளமை‌ ‌+‌ ‌அதை‌ ‌

இ)‌ ‌வளம்‌ ‌+‌ ‌அதை‌ ‌

ஈ)‌ ‌வளம்‌ ‌+‌ ‌மதை‌ ‌

[விடை : இ)‌ ‌வளம்‌ ‌+‌ ‌அதை]‌ ‌

3. வெளிச்சம் – இச்சொல்லின் எதிர்ச்சொல்

அ)‌ ‌இருட்டு‌ ‌

ஆ)‌ ‌வெளிப்படையான‌

‌இ)‌ ‌வெளியில்‌ ‌

ஈ)‌ ‌பகல்‌ ‌

[விடை : அ)‌ ‌இருட்டு]‌ ‌

ஆ. ஒன்றுபோல் வரும் சொற்களைப் பாடலிலிருந்து எழுதுக.

முதலெழுத்து

● அன்னையும்

● அறிந்திட

● கண்ணெனும்

● கருத்தினில்

● நன்மையும்

● நயமதும்

● கல்வியை

● கசடற

● வல்லமை

● வளமதை

● கற்றிட

● கணக்கென

● வெற்றிகள்

● வெளிச்சமும்

● விண்ணையும்

● விடியலாய்

இரண்டாம்எழுத்து

● நன்மையும்

● அன்னையும்

● பொன்னையும்

● கல்வியை

● வல்லமை

● கற்றிட

● வெற்றிகள்

● விண்ணையும்

● திண்மையும் 

இ. எதிர்ச்சொல் எழுதுக.

1.‌ ‌நன்மை‌ ‌x‌ ‌தீமை‌ ‌

‌2.‌ ‌புகழ்‌ ‌x‌ ‌இகழ்‌ 

3.‌ ‌வெற்றி‌ ‌x‌ ‌தோல்வி

4.‌ ‌வெளிச்சம்‌ ‌x‌ ‌இருட்டு

5.‌ ‌தோன்றும்‌ ‌x‌ ‌மறையும்‌

ஈ. “உம்” என முடியும் சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக.

1. அன்னையும் தந்தையும்

கண்ணெனும் கல்வியும்

பொன்னையும் மண்ணையும்

நன்மையும் மென்மையும்.

உ. வினாக்களுக்கு விடையளிக்க.

1. பொன்னையும் மண்ணையும்விடச் சிறந்தது எது?

விடை

பொன்னையும் மண்ணையும் விடச் சிறந்தது கல்வி.

2. கல்வியை எவ்வாறு கற்கவேண்டும்?

விடை

கல்வியைக் குற்றம் நீங்கக் கற்க வேண்டும்.

ஊ. சிந்தனை வினா

கல்வியோடு நற்பண்புகளும் அமைவதுதான் சிறப்பு என்று கூறுகிறார்களேஇதுபற்றி உங்கள் கருத்து என்ன?

விடை

(i) கல்வியோடு நற்பண்புகள் அமைவதுதான் சிறப்பு என்று கூறுவது சரியே.

(ii) நற்பண்பு என்பது பல செயல்களின் கூட்டமைப்பே ஆகும். கருணை, நாணயம், நேர்மை, கவனமாகச் செயல்படுதல், எடுத்த காரியத்தில் உறுதியாக இருத்தல் ஆகியவை ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டியவை ஆகும்.

(iii) கல்வி ஒருவருக்கு நல்ல வேலையைக் கொடுத்து செல்வந்தனாக்கும். ஆனால் செல்வத்தை அவன் நல்ல வழியில் செலவு செய்தால் மட்டுமே அச்செல்வத்தினாலும் கற்ற கல்வியினாலும் அவனுக்குப் பயன் கிடைக்கும்.

(iv) தற்காலத்தில் மாணவர்கள் புற உலகைப் பார்த்து தங்களைச் சீரழித்துக் கொள்கிறார்கள். அப்போது அவன் கற்ற கல்வியினால் பயன் இல்லாமல் போய்விடும். எனவே, கல்வியோடு நற்பண்புகள் ஒரு சேர அமைய வேண்டும் என்பதே என்னுடைய கருத்தாகும்.

கற்பவை கற்றபின்

 பாடலை ஓசைநயத்துடன் பாடி மகிழ்க

 கல்வியின் சிறப்பை உம் சொந்த நடையில் கூறுக.

விடை

கல்வியின் சிறப்பு :

கல்வி பிற செல்வங்களைப் போல அழியாதது. எவராலும் எடுத்துச் செல்ல இயலாதது. கல்வி என்பது வாழ்க்கைத் தரத்தையும் அறிவையும் உயர்த்துகிறது.

ஒழுக்கத்தை மேம்படுத்தும், நற்பண்புகளை அளிக்கிறது.

அவனுடைய திறமைகளை வெளிப்படுத்த உதவுகிறது.

கற்றவன் எங்கு சென்றாலும் சிறப்பிக்கப்படுவான்.

கற்றவனுக்குத் தனது நாடு மட்டுமின்றி அனைத்து நாடுகளும் சொந்தமாகும்.

கல்வி உடையவர் எல்லோரிடமும் நன்றாகப் பழகிக் கொள்கிறார்கள். அது மட்டுமல்லாமல் அனைவருடனும் மகிழ்ச்சியாக வாழவும் செய்கின்றனர்.

உலகில் உயர்ந்த மனிதனாக்கும் கல்வியைப் பெறுவோம்.

 கல்வியின் சிறப்பை உணர்த்தும் வேறு பாடல்களை அறிந்து வந்து பாடுக.

விடை

1. திருக்குறள் :

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து.

2. புறநானூறு :

ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்

‘மூத்தோன் வருக’ என்னாது, அவருள

அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்.

3. பாரதியார் பாடல் :

தேடு கல்வியிலாதொரு ஊரைத்

தீயினுக்கிரையாக மடுத்தல்

கேடுதீர்க்கும் அமுதம் என் அன்னை

கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்!

4. பழமொழி :

உரைமுடிவு காணான் இளமையோன்; என்ற

நரை முது மக்கள் உவப்ப… நரைமுடித்துச்

சொல்லால் முறை செய்தான் சோழன் குல விச்சை

கல்லாமல் பாகம் படும்.

5. நான்மணிக்கடிகை :

திரிஅழல் காணின் தொழுப விறகின்

எரிஅழல் காணின் இகழ்ப – ஒரு குடியில்

கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்

இளமை பாராட்டும் உலகு. (பாடல் 66)

6. வெற்றி வேற்கை :

கற்கை நன்றே; கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே.

 கல்வியினால் மேன்மை அடைந்தவர்களைப் பற்றிக் கலந்துரையாடுக.

விடை

கல்வியினால் மேன்மை அடைந்தவர்கள் பற்றி கலந்துரையாடல் :

காவியா : என்ன மலர்விழி வானத்தையே பார்த்தபடி உள்ளாய்?

மலர்விழி : வானத்தைப் பார்க்கவில்லை. நாளைக்கு வீட்டுப்பாடம் பற்றிதான் சிந்தித்துக் கொண்டுள்ளேன்.

காவியா : நானும் அதற்குத்தான் வந்தேன். உனக்குத் தெரிந்ததைக் கூறு. எனக்குத் தெரிந்தவற்றைக் கூறுகிறேன்.மலர்விழி : கல்வியால் மேன்மை அடைந்தவர் எனில் என் நினைவுக்கு வருபவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள்தான். இவர் இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக பணியாற்றியவர். அது மட்டுமல்லாமல் அணுசக்தி விஞ்ஞானியும் ஆவார்.

காவியா : அப்துல்கலாம் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். வறுமையை ஒழிக்க இளம் வயதிலேயே வேலைக்குச் சென்றார்.

மலர்விழி : வேலைக்குச் சென்றுகொண்டே படித்துள்ளார். கணிதப் பாடத்திற்காகப் பல மணிநேரம் செலவு செய்துள்ளார். அவருடைய கடின உழைப்பினால் சென்னை எம்.ஐ.டியில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். படிப்படியாக வளர்ந்து சிறந்த விஞ்ஞானி ஆனார். பல உயர்ந்த விருதுகளைப் பெற்றுள்ளார்.

காவியா : இவரைப்போலவே படிப்பால் உயர்ந்தவர். இஸ்ரோவின் தலைவரான

தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி சிவன். இவர் நாகர்கோவில் அருகே சரக்கல்விளையில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் அரசு தொடக்கப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்.

மலர்விழி : என்ன தமிழ்வழியிலா கல்வி பயின்றார்?

காவியா : பி.யு.சி படிப்பை நாகர்கோவிலில் முடித்தார். பி.எஸ்.சி கணிதம் படித்தார். – 1980ல் எம்.ஐ.டியில் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் முடித்தார். பிறகு பெங்களூருவில் படித்தார். பிறகு இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் திட்டமிடுதல் மற்றும் வடிவமைப்புக் குழுவில் இணைந்து அப்பணியில் முக்கிய பணியாற்றினார்.

மலர்விழி : ஆமாம் நான்கூட படித்துள்ளேன். இவ்வாறு வளர்ந்த சிவன் அவர்கள் இஸ்ரோவின் தலைவராகித் தமிழ்நாட்டுக்கே சிறப்பு சேர்த்துள்ளார்.

காவியா : இவர்களைப் போன்று கல்வியால் மேன்மையடைந்த பெண்களும்

உள்ளனர். இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரல், இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரி பாய் புலே, முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி அம்மையார், இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திராகாந்தி போன்ற பலரும் கல்வியால் உயர்ந்து உலகிற்கு அறிமுகமானவர்கள்.

மலர்விழி : எப்படியோ இருவருமாக சேர்ந்து நம் வீட்டுப் பாடத்தை முடித்துவிட்டோம்.

நாம் கலந்துரையாடியதை எழுதிவிடுவோம்.

காவியா : சரி, நானும் உன் வீட்டுக்கு வந்து இரண்டு மணி நேரமாகிவிட்டது. அம்மா தேடுவார்கள். நான் வீட்டிற்குப் புறப்படுகிறேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *