Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 5th Tamil Books Chapter 8 2

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 8 2

தமிழ் : பருவம் 3 இயல் 2 : அறம், தத்துவம், சிந்தனை

உரைநடை : நீதியை நிலைநாட்டிய சிலம்பு

இயல் இரண்டு

உரைநடை

நீதியை நிலைநாட்டிய சிலம்பு

முன்கதை சுருக்கம்

பொருளீட்டுவதற்காக மதுரை நகருக்குக் கண்ணகியுடன் வருகிறான் கோவலன். அங்கு அவன் செய்யாத குற்றத்துக்காக, மரணதண்டனை பெறுகிறான். ஆராயாமல்தீர்ப்பு அளித்ததாக அரசன் மீது குற்றம் சாட்டும் கண்ணகி, தன் காற்சிலம்பைக் கொண்டு, தன் கணவன் கள்வனல்லன் என்பதை உணர்த்துகிறாள். அரசனுக்கும் கண்ணகிக்கும் நடக்கும் உரையாடலே இங்குப் பாடமாக அமைந்துள்ளது.

வாயிற்காப்போன் : அரசே! அரசே! நம் அரண்மனை வாயிலின்முன், அழுத கண்களோடும் தலைவிரி கோலத்துடனும் ஒரு பெண் வந்து நிற்கிறாள்.

பாண்டிய மன்னர் : அப்படியா? அந்தப் பெண்ணிற்கு என்ன துயரமோ? கேட்டாயா?

வாயிற்காப்போன் : கேட்டேன், மன்னவா! அதைப்பற்றி உங்களிடம்தான் கூறவேண்டும் என்று சொல்கிறாள். அவள் உங்களிடம் நீதி கேட்டு வந்திருப்பதாகக் கூறுகிறாள்.

பாண்டிய மன்னர் : நீதி கேட்டு வந்திருக்கிறாளா? சரி, அந்தப் பெண்ணை உள்ளே அனுப்பு.

(ஆன்றோர்களும் சான்றோர்களும் நிறைந்திருக்கும் அவையிலே நடுநாயகமாய் மன்னர் வீற்றிருக்கஅரசவைக்குள் நுழைகிறாள்கண்ணகி.)

பாண்டிய மன்னர் : இளங்கொடிபோன்ற பெண்ணே! அழுத கண்களுடன் எம்மைக் காண வந்ததன் காரணம் என்ன? நீ யார்? உனக்கு என்ன வேண்டும்?

கண்ணகி : ஆராயாது நீதி வழங்கிய மன்னனே! என்னையா யாரென்று கேட்கிறாய்? சொல்கிறேன், கேள். உலகம் வியக்கும் வண்ணம் ஒரு புறாவுக்காக தன் உடலையே தந்த சிபி மன்னனைப் பற்றி நீ அறிவாயா? பார் போற்றும் பசுவை மக்கள் தெய்வமென வணங்க, அதன் கன்றைத் தேர்க்காலிலிட்டுக் கொன்ற தன் மகனையும் அதே தேர்க்காலிலிட்டுக் கொன்றானே மனுநீதிச் சோழன், அவனைப் பற்றியும் அறிவாயா?

பாண்டிய மன்னர் : பெண்ணே, நான் கேட்ட வினாவுக்கு இன்னும் நீ விடை கூறவில்லை. அதைவிட்டுவிட்டு…. நீ வேறு எதையெதையோ கூறிக்கொண்டிருக்கிறாய்.

கண்ணகி : இழப்பின் அருமை தெரியாத மன்னனே! என் நிலை அறியாமல்தானே இப்படிப் பேசுகிறாய். நான் இதுவரை கூறிய பெருமைமிக்க சோழ மன்னர்கள் வாழ்ந்த புகார் நகரமே எனது ஊர். அவ்வூரில் பழியில்லாச் சிறப்பினையுடைய புகழ்மிக்க மாசாத்துவான் மகனாகிய கோவலன் என்பானின் மனைவி நான்,

பாண்டிய மன்னர் : ஓ! இப்போது புரிகிறது. அந்தக் கோவலனின் மனைவியா நீ?

கண்ணகி : போதும் மன்னா, என் கணவனை இகழ்வதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது? ஊழ்வினைப் பயனால், உன் ஊருக்கு வந்து, என் கால்சிலம்பை விற்க வந்த என் கணவனை அநியாயமாகக் கொன்றுவிட்டாயே, நீ செய்தது தகுமா?

பாண்டிய மன்னர் : பெண்ணே, போதும் நிறுத்து. கள்வனைக் கொல்வது கொடுங்கோலன்று அஃது ஏற்புடையதே, அஃது அறநெறியும் ஆகும். இதை அனைவருமே அறிவார்களே, உனக்குத் தெரியாதா, என்ன?

கண்ணகி : அறநெறி தவறிய மன்னனே! தவறிழைத்தவர்களைத் தண்டித்தல் தகுதியுடைய மன்னனுக்கு உரியது என்பதை நானும் அறிவேன். ஆனால், நீ கூறுவதுபோல, என் கணவன் கள்வனல்லன், அவனிடம் இருந்த சிலம்பும் அரசிக்குரிய சிலம்பன்று; அதன் இணைச் சிலம்பு இதோ, என்னிடம் உள்ளது. என் கால்சிலம்பின் பரல் மாணிக்கக் கற்களால் ஆனது.

பாண்டிய மன்னர் : பெண்ணே, நீ சொல்வது உண்மைதானா? உண்மையாயின் அரசிக்குரிய சிலம்பின் பரல் முத்துகளால் ஆனது. ஆன்றோர் நிறைந்த இந்த அவைதனிலே அனைவருக்கும் உண்மையை உணர்த்துகிறேன். யாரங்கே, கோவலனிடமிருந்து பெற்ற அச்சிலம்பை இங்குக் கொண்டு வா!

(சிலம்பைப் பெற்ற மன்னர்அதைக் கண்ணகியிடம் கொடுக்கிறார்)

பாண்டிய மன்னர் : பெண்ணே! இதோ, உன் கணவனிடமிருந்து கைப்பற்றிய சிலம்பு

(கண்ணகிஅச்சிலம்பைக் கையில் எடுக்கிறாள்.)

கண்ணகி : நீதி தவறாதவன் என்று உன்னைக் கூறிக்கொள்ளும் மன்னனே, ஒருதவறும் செய்யாத என் கணவனைக் கொன்றது, உன் அறநெறிக்கு இழுக்கு என்று இதோ மெய்ப்பிக்கிறேன். இங்கே பார்.

(கண்ணகி சிலம்பை எடுத்துத் தரையில் போட்டு உடைக்கின்றாள்.அச்சிலம்பிலிருந்த மாணிக்கக் கல் ஒன்றுஅரசனின் முகத்தில்பட்டுத் தெறித்து விழுகிறது.)

பாண்டிய மன்னர் : ஆ தவறிழைத்துவிட்டேனே! பிறர் சொல் கேட்டுப் பெரும்பிழை செய்தேனே! யானோ அரசன், யானே கள்வன். இதுவரை என் குலத்தில்எவரும் செய்யாத பழிச்சொல்லுக்கு ஆளாகிவிட்டேனே! இனிமேலும் யான் உயிரோடு இருத்தல் தகுமா? இனி எனக்கு வெண்கொற்றக் குடை எதற்கு? செங்கோல்தான் எதற்கு? என் வாழ்நாள் இன்றோடு முடிவதாக!

பாண்டிய மன்னர், தாம் தவறாக வழங்கிய தீர்ப்பால் உண்டான பழிச்சொல்லுக்கு அஞ்சி, அரியணையிலிருந்து தரைமீது வீழ்ந்து, இறந்துபடுகிறார்.

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக

1. புறாவிற்காகத் தன் உடலையே தந்த மன்னன்

அ) மனுநீதிச்சோழன்

ஆ) பாண்டியன்

இ) சிபி மன்னன்

ஈ) அதியமான்

[விடை : இ) சிபி மன்னன்]

2. கண்ணகியின் சிலம்பு ———- ஆல் ஆனது

அ) முத்து

ஆ) மாணிக்கம்

இ) பவளம்

ஈ) மரகதம்

விடை : ஆ) மாணிக்கம்

3. அறநெறி – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) அறி + நெறி

ஆ) அற + நெறி

இ) அறம் + நெறி

ஈ) அறு + நெறி

[விடை : இ) அறம் + நெறி]

4. கால் + சிலம்பு – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

அ) காற்சிலம்பு

ஆ) கால்சிலம்பு

இ) கற்சிலம்பு

ஈ) கல்சிலம்பு

[விடை : அ) காற்சிலம்பு]

5. தண்டித்தல்-இச்சொல்லின் பொருள்

அ) புகழ்தல்

ஆ) நடித்தல்

இ) வழங்குவதல்

ஈ) ஒறுத்தல்

[விடை : ஈ) ஒறுத்தல்]

ஆ. கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக

1. அ + ஊர் = அவ்வூர்

2. தகுதி + உடைய = தகுதியுடையதகுதி

இ. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக

1. கள்வனல்லன் = கள்வன் + அல்லன்

2. செங்கோல் – = செம்மை + கோல்

ஈ. வினாக்களுக்கு விடையளிக்க

1. கண்ணகிக்கு ஏற்பட்ட துன்பம் யாது?

விடை

கண்ணகியின் கணவனான கோவலன் பாண்டிய மன்னனால் தவறான தீர்ப்பளிக்கப்பட்டு கொல்லப்பட்டான். இதுவே கண்ணகிக்கு ஏற்பட்ட துன்பம் ஆகும்.

2. புகார் நகரின் சிறப்புகள் யாவை?

விடை

ஒரு புறாவுக்காக தன் உடலையே தந்த சிபி மன்னனும், பசுவிற்கு நீதி வழங்குவதற்காக, தன் மகனைத் தேர்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்த சிறப்புக்குரியது புகார் நகரம்.

3. பாண்டிய மன்னனின் வெண்கொற்றக் குடை வீழக்காரணமென்ன?

விடை

பொற்கொல்லன் கூறியதைக் கேட்டு ஆராயாமல் கோவலனுக்குத் தண்டனை அளித்தான் பாண்டிய மன்னன். ஆதலால் அவனுடைய வெண்கொற்றக்குடை வீழ்ந்தது.

உ. சிந்தனை வினாக்கள்

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தக் குறள் கருத்து யாருக்குப் பொருந்தும்? கண்ணகிக்கா? பாண்டிய மன்னருக்கா? சிந்தித்து விடை தருக.

விடை

இந்தக் குறள் பாண்டிய மன்னருக்குப் பொருந்தும்.

● பாண்டிய மன்னன் பொற்கொல்லன் கூறிய பொய்யை உண்மை என நம்பி ஆராய்ந்து முடிவெடுக்கவில்லை.

● பிறர் சொல் கேட்டுப் பிழை செய்து விட்டான்.

● ஆட்சிப் பொறுப்பில் மன்னன் இருதரப்பினரின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். தீர விசாரிக்காமல் தீர்ப்பளித்துவிட்டான். ஆகையால் இக்குறள் பாண்டிய மன்னருக்கே பொருந்தும்.

கற்பவை கற்றபின்

 பாடத்தில் உள்ள உரையாடலை நாடகமாக நடித்துக்காட்டுக.

 நீதிநெறி தொடர்புள்ள கதை அல்லது உண்மை நிகழ்வுகள் பற்றிய செய்திகளைக் கூறிவகுப்பறையில் கலந்துரையாடுக.

விடை

ஆசிரியர் : வணக்கம் மாணவர்களே! நீங்கள் படித்த நீதிக்கதைகள் பற்றி பேசுங்கள்.

மாலா : அனைவருக்கும் வணக்கம்! நான் நேற்று நூலகத்தில் மரியாதை ராமன் கதையைப் படித்தேன். மிகவும் நன்றாக இருந்தது. மரியாதைராமன் வசித்த ஊரில் சோமன் என்பவர் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்குச் சரியான கூலி கொடுக்கமாட்டார்.

அவர் ஒருமுறை தன்னுடைய பணப்பையைத் அவர் தவறவிட்டுவிட்டார். அந்த பணப்பையைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்குச் சன்மானம் தருவதாகக் கூறினார். ஒரு வாரத்திற்குப் பிறகு பூபாலன் என்பவரின் கையில் அப்பணப்பை கிடைத்தது. அப்பணப்பை சோமனுடையது என்று அறிந்து அவனிடம் கொண்டு சென்று கொடுத்தார். ஆனால் அவன் பணம் மட்டும் இருப்பதாகவும் வைர மோதிரம் இல்லையென்றும் கூறினான்.

சன்மானம் கொடுக்க மனமில்லாததால் பொய் கூறுகிறான் என்பதை அறிந்த ஊர் மக்கள் மரியாதைராமனிடம் சென்றனர். மரியதைராமன் நடந்தவற்றைக் கேட்டு அறிந்து, “பையில் வைரமோதிரம் இல்லாததால் அது சோமனுடைய பை இல்லை என்றும் பணப்பையைத் தொலைத்ததாக வேறு யாரும் கூறவில்லை என்பதாலும் இப்பையைப் பூபாலனுக்குக் கொடுத்துவிடலாம்” எனத் தீர்ப்பு கூறினார். ஏமாற்ற நினைத்த சோமன் ஏமாந்து போனான். நல்லது செய்ய நினைத்த

பூபாலன் நன்மையடைந்தான்.

நிலா : நான் தெனாலிராமன் கதைகளுள் ‘நீர் இறைத்த திருடர்கள்’ என்ற கதையைப் படித்தேன். அதில் தெனாலிராமனின் கிணற்றில் நீர் மிகவும் ஆழத்தில் இருந்தது. தண்ணீர் இறைப்பது அவனுக்குக் கொஞ்சம் சிரமமாக இருந்தது. ஒருநாள் இரவு நான்கு திருடர்கள் அவனுடைய தோட்டத்தில் ஒளிந்திருப்பதைக் கண்டான். தன் மனைவியிடம் வீட்டில் உள்ள நகைகளைப் பெட்டியில் போட்டு எடுத்து வரும்படிக் கூறினான்.

“அவற்றைக் கிணற்றில் போட்டு விடலாம். இப்போது வறுமை நீடிப்பதால் திருடர்கள் பயம் அதிகமாக உள்ளது” என்று கூறினான். அதில் கல், மண் போன்றவற்றை வைக்கும்படி மனைவியிடம் சைகை செய்தான். அவ்வாறே பெட்டியைக் கிணற்றில் போட்டுவிட்டு உள்ளே சென்றனர். திருடர்கள் தங்கள் வேலை எளிமையாகிவிட்டது என எண்ணி கிணற்றில் இருந்து தண்ணீரை இறைத்து ஊற்றிய படியே இருந்தனர்.

பொழுதும் விடிந்தது. அவர்கள் மறுநாள் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டுச் செல்லும்போது, தெனாலிராமன் அங்கு வந்து இரண்டு நாட்கள் கழித்து வரும்படிக் கூறினான். “இன்று இறைத்த நீர் இரண்டு நாட்களுக்குப் போதுமானது” என்று கூறினான். இதனைக் கேட்ட திருடர்கள் தெனாலிராமன் புத்திசாலித்தனமாக தங்களை வேலை வாங்கியதை எண்ணியும், கொஞ்சம் தயங்கினாலும் தாங்கள் மாட்டிக் கொள்வோம் என்றும் பயந்து ஓடினர்.

மாலா : இதுபோல நீதிக்கதைகள் நம்மைப் போன்ற மாணவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாய் இருக்கின்றன.

நீலா : சரியாகச் சொன்னாய் மாலா. நான் தெனாலிராமன் கதைகள், அக்பர் பீர்பால் கதைகளைப் படித்தேன். இக்கதைகளும் நமக்கு நீதியைப் புகட்டுகின்றன. தெனாலிராமனின் அறிவுக்கூர்மையும் பீர்பாலின் புத்திக் கூர்மையும் நமக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

ஆசிரியர் : மாலா, நீலாவைப் போல் மற்றவர்களும் நூலகம் செல்லும்போது நீதிக்கதையைப் படித்து பயனடையுங்கள். வேறு யாராவது பேச விரும்புகிறீர்களா!

கலா : நான்கூட இதுபோன்ற கதைகளை என் தாத்தா பாட்டியிடம் கேட்டிருக்கிறேன். என்னுடைய தாத்தா நேரம் இருக்கும் போதெல்லாம் ! என்னைப் பூங்காவிற்கு அழைத்துச் செல்வார். அப்போது நிறைய கதைகளைக் கூறியுள்ளார். இவர்கள் படித்துப் பெற்ற அனுபவத்தைக் கேட்டுப் பெற்றிருக்கிறேன்.

ஆசிரியர் : நன்று. தாத்தா பாட்டி இருவரும் நடமாடும் நூலகங்கள், அவர்களுடைய அனுபவமே ஒரு புத்தகம்தான். நாளைய வகுப்பில் தொடரலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *